Ad

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஆட்சி, அமைச்சரவை, பதவியேற்பு ; ஏற்பாட்டுப் பணிகளைத் தொடங்கிவிட்டதா திமுக முகாம்?!

தமிழகத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப்போவது எந்தக் கட்சி என்கிற கேள்விக்கு, நாளை விடை கிடைத்துவிடும். ஆனால், யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பதற்கேற்ப, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி ஓரளவுக்கு முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை வெளிப்படுத்துவிட்டன. தேர்தலுக்கு முன்பாகவே பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. அவற்றில் பெரும்பாலும் `தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்' என்றே சொல்லப்பட்டிருந்தது. அதே கருத்தைத்தான் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் உறுதி செய்திருக்கின்றன. குறைந்தபட்சம், 130 தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 190 தொகுதிகள் வரை தி.மு.க கூட்டணி கைப்பற்றக்கூடும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபம்

அதனைத் தொடர்ந்து தி.மு.க நிர்வாகிகள் மேலும் உற்சாகமடைந்திருக்கின்றனர். அதே சூட்டோடு பதவி ஏற்புக்கான வேலைகளையும் தி,மு.க தலைமை, முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்போதும் போல, சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்திலேயே , தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்க இருப்பதாக தி.மு.க வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. அதேபோல, கடந்த சில நாள்களுக்கு முன்பாகவே, அமைச்சரவைப் பட்டியலும் தயாராகிவிட்டது, இந்தமுறை சீனியர்களில் மூன்று பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படவுள்ளது, இளைஞர்கள் நிரம்பிய ஒரு கேபினட்டாகத்தான் வரும் அமைச்சரவை இருக்கும் என்றும் செய்திகள் சுற்றி வருகின்றன. தவிர, கடந்தமுறை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு உள்ளிட்ட சிலருக்கு இந்தமுறை அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படமாட்டாது, மாற்றுப் பதவிகள் வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் தீயாக உலாவும் மேற்கண்ட செய்திகள் குறித்து தி.மு.க வட்டாரத்தில் பேசினோம், ''நாங்கள்தான் அடுத்து ஆட்சி அமைக்கப்போகிறோம். அதில் 100 சதவிகிதம் உறுதியாக இருக்கிறோம். புதிய அரசு சட்டப்படி மே 22-ம் தேதிக்குள் பதவி ஏற்றுவிடவேண்டும். மே 2-ம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், மே 10-ம் தேதிக்குள் பதவியேற்றுவிடவேண்டும் எனத் தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் சாய்ஸாக, மே 6-ம் தேதி காலை 11 மணிக்கு என நாள் குறித்துக்கொடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தேதிக்குள் ஏற்பாடுகளைச் செய்ய முடியாவிட்டால் ஒன்பதாம் தேதி பதவியேற்றுவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கே.என்.நேரு, ஸ்டாலின், துரைமுருகன்

அதேபோல, சீனியர்களில் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு தவிர யாருக்கும் அமைச்சரவையில் இடம் இல்லை என்று ஒரு தகவல் சுற்றிவருகிறது. அது முற்றிலும் தவறு. முதல்வராக முதன்முறையாகப் பதவியேற்கும்போது எங்கள் தலைவர் அப்படியொரு முடிவை எடுக்க வாய்ப்பே இல்லை. வேட்பாளர் தேர்வு எப்படி இருந்ததோ அதேபோல்தான் அமைச்சரவைப் பட்டியலும் இருக்கும். சீனியர்கள் நிச்சயமாக இடம் பெறுவார்கள். அனைத்து சமூகங்களையும் பிரதிநித்துவப் படுத்தும் வகையில் அமைச்சரவை இருக்கும். குறிப்பிட்ட, முக்கியமான சில துறைகள் இளைஞர்கள் வசம் ஒப்படைக்கப்படும். ஆனால், ஒரு வருடத்தில் அமைச்சரவை மாற்றம் என்பது நிச்சயமாக இருக்கும். கலைஞரின் அமைச்சரவையைப் போல, ஒருவரே ஐந்தாண்டுகளுக்கு முழுமையாக நீடிக்க முடியாது. அமைச்சர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு யார் உதவியாளர்களாக இருக்கவேண்டும் என்கிற லிஸ்ட்டும் தயாராகிவிட்டது. தலைவரின் குடும்பத்தில் இருந்து அதற்கான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன'' என்றவர்கள் தொடர்ந்து அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தவர், இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் குறித்துப் பேசினர்,

Also Read: `ஸ்டாலின்தான் வர்றாரா...' Exit Polls முடிவுகள் சொல்வது என்ன?! #TNELECTION2021

"வடக்கில் வன்னியர், பறையர், தெற்கில் முக்குலத்தோர், பள்ளர், மேற்கில் கவுண்டர், அருந்ததியர் என சமூக  வாக்குகள் நிலத்துக்கு ஏற்றார் போல சிதறிக் கிடக்கிறது. அதுவே இஸ்லாமிய சமூக வாக்குகள் மாநிலம் தழுவிய அளவில் உள்ளது. இந்தத் தேர்தலில் இஸ்லாமிய வாக்காளர்களில் அதிகமானோர் தி.மு.க-வுக்கு வாக்களித்து இருப்பதாக தகவல் வருகிறது. தி.மு.க சார்பில் போட்டியிட்ட 173 வேட்பாளர்களில் ஆவடி நாசர், செஞ்சி மஸ்தான் மற்றும் பாளையங்கோட்டை அப்துல் வஹாப் ஆகிய மூவர்தான் இஸ்லாமிய வேட்பாளர்கள். இவர்களில் நாசருக்கு மட்டுமே அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது.

ஸ்டாலினுடன் செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தான்

இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெருவாரியாக வாங்கிக் கொண்டு ஒருவருக்கு மட்டுமே கேபினட் கொடுப்பது சரிவராது என சீனியர்கள் நாங்கள் ஸ்டாலினிடம் சொல்லி இருக்கிறோம். அதிலும், ஓவைசி அ.ம.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட போதும் உருது முஸ்லீம்களும் தி.மு.க-வுக்குத்தான் வாக்களித்துள்ளனர். அதனால், இந்த முறை உருது முஸ்லீம் ஒருவருக்கும் கேபினட்டில் இடம் கொடுக்க வேண்டும். இதற்காக ஆளைத் தேட வேண்டியது இல்லை. நாசரும், அப்துல் வஹாபும் தமிழ் இஸ்லாமியர்கள் என்றால் செஞ்சி மஸ்தான் உருது இஸ்லாமியர். அதனால், ஒரு தமிழ் இஸ்லாமியருக்கும், ஒரு உருது இஸ்லாமியருக்கும் கேபினட்டில் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற குரல் கேட்கிறது. அதேபோல பட்டியல் சமூகத்தவரில் தேவேந்திரகுல வேளாளர், பறையர், அருந்ததியர் என முன்று சமூகங்களிலும் தலா ஒருவருக்கு அமைச்சரவை அல்லது துணை சபாநாயகர் பதவி கொடுக்கப்படும் என்றும் தெரிகிறது" என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/has-the-dmk-camp-started-the-work-of-arranging-the-government-the-cabinet-and-the-inauguration

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக