Ad

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

அன்புமணி ராமதாஸ் வாழ்க்கை வரலாறு - பசுமைத்தாயகம் முதல் 10.5% இட ஒதுக்கீடு வரை

பிறப்பும் பின்னணியும்:

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ், சரசுவதி அம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாக 1968-ம் ஆண்டுஅக்டோபர் 9-ம் தேதி புதுச்சேரியில் பிறந்தார் அன்புமணி. இவரின் மனைவி சௌமியா. இவர்களுக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் உள்ளனர்.

ராமதாஸ் - அன்புமணி

படிப்பு-விளையாட்டு-பணி:

1984-ம் ஆண்டு சேலம் ஏற்காட்டிலுள்ள மான்ட்ஃபோர்ட் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த அன்புமணி, 1986-ம் ஆண்டு திண்டிவனத்திலுள்ள புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பை முடித்து, பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். பின்னர் 1992-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பை முடித்தார். 2003-ம் ஆண்டு லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics (L.S.E.)) பெருநிலைப் பொருளாதாரம் (Introductory MacroEconomics) எனும் படிப்பையும் முடித்தார்.

படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்கிய அன்புமணி, தான் கல்லூரியில் படிக்கும்போது கால்பந்து, கூடைப்பந்து, பேட்மின்டன் என அனைத்து விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு மாநில அளவில் பதக்கங்களைப் பெற்று கல்லூரியின் விளையாட்டுத்துறை செயலாளராகவும் உயர்ந்தார். விளையாட்டுத்துறையின் மீதான அதீத ஆர்வத்தினால் தொடர்ந்து 15 ஆண்டுகள் மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் பேட்மின்டன் வீரராக இருந்தார். இதன் விளைவாகவே 2014-ம் ஆண்டில் தமிழ்நாடு பேட்மின்டன் சங்கத் (Tamilnadu Badminton Association) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்புமணி. மருத்துவப்படிப்பை முடித்த பின்னர் திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பு கிராமத்தில் மருத்துவராக ஒன்றரை ஆண்டுகாலம் பணி புரிந்தார்.

அரசியல் வருகையின் ஆரம்பக்காலம்:

(பசுமைத்தாயகம் டூ பா.ம.க)

1995-ம் ஆண்டு தனது தந்தை மருத்துவர் ராமதாஸ் ஆரம்பித்த ``பசுமைத்தாயகம்" எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த அமைப்பின் தலைவராக 7 ஆண்டுகள் பணியாற்றினார் அன்புமணி. அதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமை பாதுகாப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் உலகளவில் நடைபெறும் மாநாடுகளில் கலந்துகொண்டும் தனது பங்களிப்பைச் செலுத்தினார். அன்புமணியின் நிர்வாக செயல்பாடுகள் பசுமைத்தாயகத்திலிருந்து பா.ம.கவின் பக்கம் திரும்பவே 2006-ம் ஆண்டு பா.ம.க-வின் இளைஞரணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராமதாஸ், அன்புமணி

நாடாளுமன்ற உறுப்பினராக…

2004-ம் ஆண்டு தி.மு.க - பா.ம.க கூட்டணி ஒப்பந்தப்படி வழங்கப்பட்ட மாநிலங்களவை சீட்டுக்குத் தேர்வாகி முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினரானார் அன்புமணி ராமதாஸ். அவருக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளராக தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் அன்புமணி. 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தோல்வியடைந்தார். இருப்பினும் அ.தி.மு.க-பா.ம.க கூட்டணி ஒப்பந்தப்படி மாநிலங்களவை சீட் கிடைக்கப்பெற்று மாநிலங்களவை உறுப்பினரானார்.

Also Read: கமல்ஹாசன் வாழ்க்கை வரலாறு - திரை அரசியல் முதல் கள அரசியல் வரை!

முதல்வர் வேட்பாளராக…

2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பா.ம.கவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார். ``மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" என்ற பெயரில் 234 தொகுதிகளிலும் தனித்து களம்கண்ட பா.ம.கவின் வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்தனர். பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணியால் இரண்டாவது இடமே பெறமுடிந்தது.

அன்புமணி ராமதாஸ்

சாதனைகளும் விமர்சனங்களும்:

அன்புமணி ராமதாஸ் பசுமைத்தாயகத்தின் தலைவராக பணியாற்றியபோது, ஐ.நா பொருளாதார மற்றும் சமூக சபையின் (ECOSOC) ஆலோசகராக இருந்தார். அப்போது, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் பசுமைத்தாயகம் அமைப்புக்கு பெற்றுக்கொடுத்தார். பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் இதுவரைக்கும் 25 லட்சம் மரக்கன்றுகளையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி குளங்களையும் தூர்வாரினார்.

Also Read: ஓ.பன்னீர்செல்வம் வாழ்க்கை வரலாறு: எம்.ஜி.ஆர் ரசிகன் டு அதிமுக ஒருங்கிணைப்பாளர்! - முழுமையான தொகுப்பு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், நீரிழிவு, இதயநோய், போலியோ போன்ற நோய்களை ஒழிப்பதற்கான கட்டுப்பாட்டு திட்டங்கள், குட்கா தடை, பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடைச் சட்டம், திரைப்படங்களில் வரும் புகைப்பிடித்தல், மது அருந்தும் காட்சிகள் மற்றும் புகையிலைப்பொருட்கள் மீது ``எச்சரிக்கை வாசகங்களை” இடம்பெறச்செய்தது உள்ளிட்ட புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அன்புமணியின் சாதனைகளாக கவனம் பெறுகின்றன. புகையிலை எதிர்ப்பு நடவடிக்கை, போலியோ ஒழிப்பு செயல்பாடுகள் போன்றவற்றுக்காக எல்.டெர்ரி விருது உள்பட உலக அளவில் நான்கு பன்னாட்டு விருதுகளையும், தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார் அன்புமணி ராமதாஸ். மேலும் சமீபத்தில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% உள் இடஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்ததில் இவரின் பங்கு முக்கியமானது.

அன்புமணி ராமதாஸ்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கியதில் ஊழல் முறைகேடு, வாரிசு அரசியல், அடுத்தடுத்து கூட்டணி மாறுவது, சாதி அரசியல் செய்வது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் விமர்சனங்களாக இவர் மீதும், இவரது கட்சியின் மீதும் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/biography-of-anbumani-ramadas-life-works-politics-education-history

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக