Ad

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

கரூர்: இறுதிக்கட்ட பிரசாரம்; அனுமதி கேட்டு நள்ளிரவு வரை போராடிய செந்தில் பாலாஜி

கரூர் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்வதற்கு அனுமதி பெற, கரூர் தேர்தல் நடத்தும் அலுவலர், அலுவலகத்தில் நள்ளிரவு வரை செந்தில் பாலாஜி அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் செந்தில் பாலாஜி

கரூர் தொகுதியில் தி.மு.க சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். வரும் 6 - ம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இன்று இரவு 7 மணியோடு பிரசாரம் முடிவுக்கு வருகிறது. அதனால், இன்று பிரசாரம் மேற்கொள்வதோடு, பிரசார பயணம் மேற்கொள்ள செந்தில் பாலாஜி அனுமதி கேட்டார். ஆனால், கரூர் வருவாய் கோட்டாட்சியர் அதற்கு அனுமதி மறுத்தார். இதனால், செந்தில் பாலாஜி நேற்று இரவு, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள கரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு அமர்ந்து, 'இறுதி நாள் பிரசார அனுமதியை வழங்கும் வரை அலுவலகத்தை விட்டு வெளியேற மாட்டேன்' என போராட்டத்தில் குதித்தார்.

Also Read: `மாட்டு வண்டியில் மணல் அள்ளலாம்!' - செந்தில் பாலாஜி பேசியது சரியா... சூழலியல் ஆர்வலர்கள் சொல்வதென்ன?

ஏப்ரல் 3 - ம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2 மணி வரை அலுவலகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் இறுதி நாள் பிரசாரத்தின் போது, கரூர் வெங்கமேடு பகுதியில் இறுதிநாள் பிரசாரத்தின் போது, தி.மு.க, அ.தி.மு.க-வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. எனவே, அதை காரணம்காட்டி, இன்று ஒரே பகுதியில் இரு கட்சியினருக்கும் இறுதி நேர பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என கரூர் நகர காவல்துறை மறுத்ததாக கூறப்படுகிறது.

உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் செந்தில் பாலாஜி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, ``கரூர் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தி.மு.க கூட்டணி கட்சிகளின் தலைமை தேர்தல் பணிமனை முன்பு இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவுசெய்ய, தி.மு.க சார்பில் கடந்த 30 - ம் தேதி அனுமதி கேட்டு மனு வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை காவல்துறை, தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதியை வழங்க தாமதப்படுத்தி வந்தனர். மாறாக, அ.தி.மு.க வேட்பாளர் பிரசாரம் செய்ய ஒரே நபர் பெயரில் 10 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் கரை வேட்டி கட்டிய கட்சியினரை போல, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

கரூர் தொகுதி தி.மு.க வேட்பாளருக்கு 4-ம் தேதிக்கான இறுதிகட்ட பிரசாரத்திற்கு முறையான அனுமதி கடிதம் வழங்கவேண்டும் என்று தொகுதி தேர்தல் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் மனு கொடுத்தும், அவர் அனுமதிக்கவில்லை. அதனால், அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம். இப்போது இன்று மதியம் 3.00 மணி வரை மட்டுமே அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இதனால், நாங்கள் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம். என்றைக்கும் திராவிட முன்னேற்ற கழகம் அமைதி வழியில் மட்டுமே பயணிக்கும்" என்றார்.



source https://www.vikatan.com/news/controversy/senthil-balaji-protest-against-election-officers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக