Ad

திங்கள், 12 ஜூலை, 2021

‘கொங்கு நாடு’ சர்ச்சை.. நோக்கமும் பின்னணியும் என்ன?

தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்கிற குரல் சில அரசியல் தலைவர்களால் அவ்வப்போது எழுப்பப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். அது, ஒருபோதும் மக்கள் கோரிக்கையாக இருந்ததில்லை என்பது யதார்த்தம். இந்த நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தைத் தனியாகப் பிரித்து அதை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு மத்திய அரசிடம் திட்டம் இருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. அது, தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. தமிழக பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் சமீபத்தில் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது, எல்.முருகன் பற்றிய சுயவிவரக் குறிப்பில் 'கொங்கு நாடு' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்துதான், இந்த சர்ச்சை கிளம்பியது.

கோவையில் முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து, மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க-வினரும், தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியினரும் குறிப்பிட்டுவருகின்றனர். அதற்கு பா.ஜ.க-வினர் மட்டுமல்லாமல், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்கூட கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில்தான், மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று தி.மு.க அழைப்பதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே, 'கொங்கு நாடு' என்ற விவகாரத்தை பா.ஜ.க கையிலெடுத்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க ஆட்சியிலும் தற்போது தி.மு.க ஆட்சியிலும் கொங்கு மண்டலம் என்று குறிப்பிடப்படும் மேற்கு மண்டலம், அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துவருகிறது. மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சேலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். அ.தி.மு.க ஆட்சியில் செல்வாக்குமிக்க அமைச்சர்களாக வலம்வந்த தங்கமணியும் வேலுமணியும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் மேற்கு மண்டலத்தை அ.தி.மு.க ‘ஸ்வீப்’ செய்தது. அதேபோல, அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் செல்வாக்கான பகுதிகளில் ஒன்றாக கோவை இருக்கிறது. பா.ஜ.க-வின் நான்கு எம்.எல்.ஏ-க்களில் இரண்டு பேர் மேற்கு மண்டலத்தில் வெற்றிபெற்றவர்கள். கோவை தெற்கு தொகுதியில்தான், பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார். மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட மொடக்குறிச்சியில்தான் பா.ஜ.க-வின் சரஸ்வதி வெற்றிபெற்றார்.

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில்தான், மேற்கு மண்டலத்தில் தன் செல்வாக்கை அதிகரிப்பதற்கான முயற்சிகளை தி.மு.க மேற்கொண்டுவருகிறது. முதல்வராகப் பொறுப்பேற்று முதன்முறையாக கோவை சென்ற ஸ்டாலினுக்கு எதிராக #Gobackstalin என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அதை முறியடிக்கும் விதமாக தி.மு.க மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஸ்டாலினை வரவேற்று சமூகவலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். அந்த சூழலில்தான், கொரோனா தொற்றாளர்களின் வார்டுக்குள் பி.பி.இ உடை அணிந்து ஸ்டாலின் சென்றார். அது தேசிய அளவிலான செய்தியாக மாறியது. மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்றவர். அவர் தற்போது தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுக-வில் இணைந்துள்ளார். இந்த சூழலில்தான், கொங்கு நாடு சர்ச்சை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கொங்கு நாடு பிரிப்பு என்ற கருத்துக்கு ஆதரவாக பா.ஜ.க-வும் அதன் ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 24 நாடுகளைக் கொண்டது கொங்கு நாடு என்றும், ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி...’ என்ற சங்க இலக்கியப் பாடல் கொங்கு நாட்டைக் குறிக்கிறது என்றும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் கருத்து வெளியிட்டார். அதை, தி.மு.க-வினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விமர்சித்துள்ளனர்.

“மேற்கு பகுதியை கொங்கு நாடு என்று தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையே இல்லை. அப்படியிருக்கும்போது, இது சிறுபிள்ளைத்தனமானது” என்று கூறியுள்ள தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினரான டி.கே.எஸ்.இளங்கோவன், “தமிழும் தெரியாமல் அரசியலமைப்புச் சட்டமும் தெரியாமல் உளறுகிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்

வானதி சீனிவாசன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “கொங்குப் பகுதியை தனியாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று பரப்பப்படும் கருத்து ஆபத்தானது. அது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் கொல்லைப்புறமாக நுழைய பா.ஜ.க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பா.ஜ.க-வின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

“அமைதியாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்துவரும் மக்களிடம் வெறுப்பு அரசியலையும் பகை அரசியலையும் வளர்ப்பதற்கு கொங்கு நாடு என்ற விஷ விதையைத் தூவ மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனிடம் பேசினோம். " 'ஒன்றியம்' என்று சொல்வதைப் பிரிவினை என்கிறார்கள். ஆனால், மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்று சொல்பவர்களை ஒருமைப்பாட்டுக்கானவர்கள் என்கிறார்கள். இந்த முரண் விளங்கவில்லை. 'ஒன்றியம்' என்ற சொல் 'ஒன்றுதல்' என்ற பொருள் கொண்டது. அதைப் பிரிவினை என்று மொழிபெயர்க்கிறார்கள். திடீரென்று கொங்கு நாடு என்று தனி நாடு என்று கிளப்பப்படுவதற்கு சில நோக்கங்கள் இருக்கின்றன. மத்திய அரசை மேலும் மேலும் வலிமைப்படுத்திக்கொள்ள மாநிலங்களைப் பலவீனப்படுத்துவது என்பது ஒன்று. மாநிலங்கள் பலவீனப்பட பலவீனப்பட மத்திய அரசு வலிமையாகும். ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தலைமை என்பதை நோக்கிய ஒரு சர்வாதிகாரப்போக்குதான் அவர்களிடம் இருக்கிறது. அதன் ஒரு கூறுதான் இந்த கொங்கு நாடு பிரச்னை. கொங்கு பகுதியில் தி.மு.க வெற்றிவாய்ப்பை இழந்திருப்பதால் முழுக்க அது தங்களுக்கான வாக்கு வங்கி கொண்ட பகுதி என்று அவர்கள் கருதுகிறார்கள். ஒருவேளை இப்போது தேர்தல் வைத்தால் தி.மு.க அங்கு வெற்றிபெறும் என்பது என் கருத்து.

அந்தப் பகுதியைப் பிரிக்க வேண்டியதற்கான தேவை எங்கு எழுந்தது? நிர்வாக குறைபாடு... பெரிய மாநிலம் என்று காரணம் சொன்னால், தமிழ்நாட்டைவிட பெரிய மாநிலங்கள் நிறைய இருக்கின்றன. அடைப்படையாக, மொழிவாரி மாநிலம் என்பது 1950-களில் எழுந்த கோரிக்கை. அதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் காலத்தில் அவர்களின் நிர்வாக வசதிக்காக மட்டுமே இந்தியாவை நான்காகப் பிரித்துவைத்திருந்தார்கள்.

சுப.வீரபாண்டியன்

டெல்லி, கொல்கத்தா, மும்பை , சென்னை என்று திசைக்கு ஒன்றாக மையப்படுத்தி ஆண்டார்கள். அவர்களுக்கு நம்முடைய தேசிய இனம், பண்பாடு பற்றிய கவலைகள் இல்லை. இன்றைக்கு இருக்கும் ஒன்றிய அரசுக்கும் அது பற்றி கவலைகள் இல்லையென்றால், ஆங்கில அரசுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு?

இந்தியா என்பது ஒரு துணைக் கண்டம். பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு பண்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிற ஒரு நாடு. எனவே, ஒரு மாநிலத்தில் மாவட்டங்களை நிர்வாக வசதிக்காகப் பிரித்திருப்பதைப்போல, இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை. மொழிவாரி மாநிங்கள் என்பது, தேசிய இனங்களின் அடிப்படையிலான மாநிலங்கள் என்று பொருள். அப்படியானால், ஒரே மொழி பேசுகிற ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதே என்று கேள்வி எழலாம். உ.பி-யும் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இரண்டு காரணங்கள். உ.பி அதிக மக்கள்தொகை கொண்ட, கூடுதல் பரப்பளவைக் கொண்ட ஒரு மாநிலம். இரண்டாவதாக, அங்கு அத்தனை பேரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களோ, ஒரே மொழியைப் பேசுகிறவர்களோ இல்லை. எல்லோரும் இந்தி பேசுகிறார்கள் என்பதும் தவறான தகவல்.

எல்லா மொழிகளையும் ‘இந்தி’ என்று சொல்லிச்சொல்லியே, பல மொழிகளை இந்தி தின்று செரித்துவிட்டது. மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், ஒரு லட்சத்துக்கும் குறைவானோர் பேசுகிற சமஸ்கிருதத்துக்கு எட்டாவது அட்டவணையில் இடம் இருக்கிறது. ஆனால், ஐந்து கோடி மக்கள் பேசுகிற ராஜஸ்தானி மொழிக்கு அந்த அட்டவணையில் இடமில்லை. 22 மொழிகளில் ஒன்றாகக்கூட ராஜஸ்தானி இல்லை.

மோடி

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அதில் இன்னொரு சூழ்ச்சியும் இருக்கிறது. எல்லையோர மாவட்டங்களில் பிற மாநில மக்களைக் குடியேற்றி, அதன் மூலமாக தமிழ் இன, தமிழ் மொழி உணர்வை நசுக்க வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது. ஒரே நாடு, ஒரே பண்பாடு என்ற பழைய பல்லவியை நோக்கி அழைத்துச்செல்ல வேண்டுமென்று நினைக்கிறார்கள். இது தமிழ்நாட்டுக்கு எதிரானது. தமிழ்நாட்டு மக்கள் இதை கடுமையாக எதிர்ப்பார்கள்” என்றார் சுப.வீரபாண்டியன்.

Also Read: ``படைப்பாளிகளுக்கு பாடம் எடுக்கப் போகிறார்களா அரசியல்வாதிகள்?'' - நடிகை ரோகிணி கேள்வி

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித்தொடர்பாளரான நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

கொங்கு நாடு என்பது ஒரு பகுதியைக் குறிக்கும் சொல். மத்திய அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றபோது, அவர் கொங்கு நாடு பகுதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள கொங்கு நாடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அப்படி குறிப்பிடப்பட்டது. அதில் என்ன பிரச்னை? அதைக் கண்டு யாரும் மிரள வேண்டிய அவசியம் இல்லை. நாடு என்று சொன்னாலே அது தனி மாநிலம் , தனி தேசம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. தமிழ் தெரிந்தவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள், தமிழ் தெரியாதவர்கள் தான் குதித்துக்கொண்டிருக்கிறார்கள். கொங்கு வார்த்தை தவறு என்று தி.மு.க சொல்கிறதா அப்படியென்றால், தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினரான ஈஸ்வரன்கூட, கொங்கு நாடு என்று தனி மாநிலம் வேண்டும் என்று கேட்டிருப்பதாக செய்தி வருகிறது. அதற்கு தி.மு.க-வின் பதில் என்ன?” என்றார் திருப்பதி நாராயணன்.

நாராயணன் திருப்பதி

அவரிடம், “கொங்கு நாடு என்று தனியாகப் பிரித்து அதை யூனியன் பிரதேசமாக மாற்றும் திட்டம் மத்திய அரசிடம் இருக்கிறதா?” என்ற கேள்வியை முன்வைத்தபோது, “யூகங்களின் அடிப்படையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. பத்திரிகையில் ஒரு செய்தி வருகிறது என்பதாலேயே அந்த செய்தி உண்மையாகிவிடாது. அது பற்றி விவாதிக்க வேண்டுமென்கிற அவசியமும் கிடையாது. எதிர் காலத்தில் கொங்கு நாடு எனப் பிரிப்பதற்கு இப்போதே விதை போடுகிறார்கள் என்றெல்லாம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?

அப்படியென்றால், எந்த உள்நோக்கத்துடன் ‘ஒன்றியம்’ என்று நீங்கள் அழைக்கிறீர்கள். மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை என்று எதிர்காலத்தில் பிரிவினை வேண்மென்ற உள்நோக்கத்துடன் சொல்கிறீர்களா என்று நாங்கள் கேட்கலாமா? ஒன்றியம் என்று ஸ்டாலின் சொன்னதற்கான பதிலடிதான் கொங்கு நாடு என்று சொல்வதெல்லாம் அடிப்படை ஆதாரமற்றது” என்றார் நாராயணன் திருப்பதி.



source https://www.vikatan.com/government-and-politics/politics/the-detailed-article-about-kongu-nadu-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக