Ad

செவ்வாய், 7 ஜூலை, 2020

கொரோனா காலம்... எந்தெந்த உடல்நல சிக்கல்களுக்கு மருத்துவமனை செல்லலாம்? ஒரு வழிகாட்டல்!

கொரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருந்தாலும் சில அத்தியாவசிய தேவைகள் மற்றும் வேலைகளின் காரணமாகத் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகச் சாலைகளிலும் வாகனங்களின் நெரிசல் வெகுவாக அதிகரிப்பதையும் காண முடிகிறது. இந்தத் தளர்வுகளால் மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Corona spread

அதாவது, கொரோனா தொற்றுக்கு பயந்துகொண்டு, தங்களின் மற்ற உடல்நலக் குறைபாடுகளுக்கெல்லாம் மருத்துவமனைக்குச் செல்ல தயங்கியவர்கள்கூட இனி மருத்துவமனைக்குச் செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறும் மருத்துவர்கள், அவசியமான மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு மட்டும் மக்கள் மருத்துவமனைக்குச் சென்றால்போதும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

நாம் எந்தெந்த மருத்துவ பரிசோதனைகளுக்கு மருத்துவமனைக்குச் செல்லலாம், எதற்கெல்லாம் மருத்துவமனை செல்வதைத் தவிர்க்கலாம் என்று பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டோம்.

டாக்டர் ஃபரூக் அப்துல்லா

மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய காரணங்கள்:

* "இப்போதுள்ள சூழ்நிலையில் யாரேனும் ஒருவருக்கு கொரோனாவின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாகக் கொரோனா டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிடுவது நல்லது. இதைத் தவிர்த்து மற்ற உடல்நலக் குறைபாடுகள் என்றால் தவிர்க்க முடியாத பிரச்னைகளுக்கு மட்டும் மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

Corona Test

* நீரிழிவுநோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாதம் ஒருமுறை தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று பிபி, சுகர் டெஸ்ட் எடுத்துப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவற்றை இனி குறைத்துக்கொள்ளலாம். அதாவது, மாதம் ஒருமுறை டெஸ்ட் எடுப்பதற்குப் பதிலாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். ஆனால், மருத்துவர்கள் பரிந்துரை செய்த மாத்திரைகளை மட்டும் தவறாமல் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

Also Read: கொரோனா: `முடிவுக்குக் கொண்டு வரும் தொடக்கம்!’ - தடுப்பு மருந்து குறித்து மத்திய அரசு

* மருத்துவமனை செல்வதைத் தவிர்க்க, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதிக்க உதவும் குளுக்கோமீட்டர் (Glucometer), ரத்த அழுத்தத்தைக் கணக்கிட உதவும் BP apparatus போன்றவற்றை வாய்ப்புள்ளவர்கள் வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொண்டு தேவைப்படும் பட்சத்தில் பிபி, சுகர் டெஸ்ட் எடுத்துப் பார்த்துக்கொள்ளலாம்.

* புற்றுநோய்க்கு உள்ளாகி கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் கண்டிப்பாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ஏனெனில் இந்தச் சிகிச்சையைத் தள்ளிப்போட்டால் உடலில் புற்றுசெல்களின் எண்ணிக்கை அதிகரித்து உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

டயாலிசிஸ்

Also Read: கொரோனா :`நெகட்டிவ் சான்றிதழ் தர ரூ.2,500’ - பேரம் பேசிய நபர்; உ.பி மருத்துவமனைக்கு சீல்

* சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் அதைத் தள்ளிப்போடக் கூடாது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தேதியில் தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டும்.

* கர்ப்பிணிகள் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ள ஒருமுறையும், வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை டெஸ்ட் செய்ய 5-வது மாதமும் மருத்துவமனைக்குச் செல்வது போதுமானது. வயிற்றில் குழந்தை அசையவில்லை என்றாலோ, தாங்கமுடியாத வலி ஏற்பட்டாலோ அல்லது பனிக்குடம் உடைந்தாலோ உடனே மருத்துவமனைக்குச் சென்று டெஸ்ட் எடுத்துவிடுவது நல்லது. 9-வது மாதத்திற்குப் பின் உள்ள 4 வாரங்களும் மருத்துவமனைக்குச் செல்லலாம். இடையில் அநாவசியமாக மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்ப்பது நலம்.

* மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை ஏற்படும் பெண்கள் சிறிது காலத்திற்கு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கலாம். முடிந்தால் நீங்கள் சிகிச்சை பெறும் மருத்துவரை அலைபேசியில் தொடர்புகொண்டு பிரச்னைகளைக் கூறி அதற்கான தீர்வுகளைப் பெறலாம். அவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். அவசரமில்லாத கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகளைத் தள்ளிப்போடலாம்.

* தாங்க முடியாத பல்வலி ஏற்பட்டாலோ, பற்களில் ரத்தம் வடிந்தாலோ மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை கேட்டுக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்லலாம்.

Tablets

* மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகும் தொடர்ந்து வயிற்றுப்போக்கு, வாந்தி இருந்தால் மருத்துவமனைக்குச் செல்லலாம்.

* கண்ணில் வலி, வீக்கம் மற்றும் பார்வைத்திறன் குறைதல் போன்ற கண் சார்ந்த பிரச்னைகளை அலட்சியப்படுத்தினால் பார்வைத் திறனே பறிபோகும் அபாயம் உள்ளது. இதனால் கண்ணில் ஏதாவது பாதிப்போ, பார்வைத்திறனில் ஏதேனும் குறைபாடோ ஏற்பட்டால் தயங்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

Also Read: கொரோனாவுக்கு `கோவாக்சின்' தடுப்பு மருந்து... சாதித்த தமிழக விவசாயி மகன் கிருஷ்ணா எல்லா!

* காதில் வலி, கட்டி ஏற்பட்டாலோ, மூக்கிலிருந்து ரத்தம் வடிந்தாலோ மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.

* ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனையுடன் இன்ஹேலர், நெபுலைஸர் (Inhaler, Nebulizer) போன்ற சாதனங்களை வீட்டிலேயே வாங்கிவைத்துக்கொண்டு சிகிச்சை பெறலாம்

* சாதாரண உடல்வலி, தலைவலி ஏற்படும் பட்சத்தில் மருத்துவமனையை நாடாமல் ஏதேனும் வலி நிவாரணியைப் பயன்படுத்தலாம். பயன்படுத்திய பிறகும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் மருத்துவரின் ஆலோசனையின்படி, தேவையென்றால் மட்டும் மருத்துவமனைக்குச் செல்லலாம்.

தலைவலி

* செரிமான பிரச்னை அல்லது மலச்சிக்கல் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாடிச் செல்லாமல் 'டெலிமெடிசின்' முறையில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

* நீங்கள் வழக்கமாகச் செல்லும் தனியார் மருத்துவமனை இயக்கப்படவில்லை என்றால் அவசர மருத்துவ சிகிச்சைகளைத் தள்ளிப்போட வேண்டாம். இயக்கத்தில் உள்ள வேறு ஏதாவது தனியார் மருத்துவமனைக்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சை எடுத்துகொள்ளுகள்" என்றார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.



source https://www.vikatan.com/health/healthy/corona-period-hospital-visiting-guidance-for-other-health-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக