Ad

சனி, 24 ஏப்ரல், 2021

தோனியின் சென்னை Vs கோலியின் பெங்களூரு ... ஈ சாலா கப்புக்கு விசில் போடலாமா?! #CSKvRCB

இன்னமும் சூடுபிடிக்காமல் இருக்கும் ஐபிஎல் 2021-ன் முதல் பரபர போட்டியாக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இன்றைய மாலையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். டேபிள் டாப்பில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸூக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸுக்கும் இடையேதான் இன்றையப் போட்டி. இரண்டு நாட்களுக்கு முன்னரே விசில் போடு, ஈ சாலா கப் என ட்ரெண்டிங் சண்டைகள் உச்சம் தொட ஆரம்பித்துவிட்டன. அதனால் இன்றைய யுத்தத்தில் அனல் பறக்கலாம்.

இந்த ஆண்டு பல ஆச்சர்யங்களை அள்ளித்தெளித்துக்கொண்டிருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தொடர்ந்து தனது வெற்றியைத் தக்கவைக்குமா, சிஎஸ்கே வழக்கம்போல பெங்களூருவை வீழ்த்துமா?!

மீண்ட மாண்பும், நிறைந்திருக்கும் நம்பிக்கையும்!

சென்ற ஆண்டு மரணஅடி வாங்கி வெளியேறிய #CSK, இந்தத் தொடரையும், டெல்லிக்கு எதிராகத் தோல்வியில்தான் தொடங்கியது. சென்னையின் தோல்விகள் இந்த ஆண்டும் தொடருமோ என ரசிகர்கள் பீதியில் ஆழ்ந்தனர். ஆனால், ஹாட்ரிக் வெற்றியால், இழந்த பெருமையை மீட்டெடுக்கத் தொடங்கியுள்ளது சிஎஸ்கே. அதுமட்டுமின்றி, பவர்ப்ளேவில் ரன்கள் குவிக்கத் தவறுதல், கெய்க்வாட்டின் ஃபார்ம், ஆரஞ்சு கேப் ரேஸுக்கு ஆளில்லை என என்ன குறைகளெல்லாம் சுட்டிக் காட்டப்பட்டதோ, எல்லாவற்றையும் மாற்றிக்காட்டி, தன்னுடைய முழு பலத்துடன் நிமிர்ந்து நிற்கிறது சிஎஸ்கே. மறுபுறம், ஆர்சிபியோ, 4/4 என வென்றதுடன், கடைசிப் போட்டியை, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்றதால், முழு நம்பிக்கையோடு சென்னையை எதிர்கொள்ள இருக்கிறது!

கோலி

படிக்கல் Vs கெய்க்வாட்!

மூன்று போட்டிகளில் மோசமான துவக்கத்தைக் கொடுத்த கெய்க்வாட், கடந்த போட்டியில், அரைசதத்தை, 152 ஸ்ட்ரைக்ரேட்டோடு கடந்து, ஃபார்முக்குத் திரும்பியிருந்தார். படிக்கல்லோ, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், 194 ஸ்ட்ரைக்ரேட்டோடு சதத்தைத் தொட்டு, மிரட்டி இருந்தார். இந்த இருவரின் அசத்தல் ஆட்டம் தொடரும்பட்சத்தில், விளையாடும் களம் வான்கடேவாகவும் இருக்கும் காரணத்தால், இது நிச்சயம் ஒரு ஹை ஸ்கோரிங் போட்டியாகவே இருக்கும். அதுவும், இறுதிஓவர் வரையில் இழுபறி நீடிக்கின்ற போட்டியாகவே அமையும்.

அதே நேரத்தில், பிற்பகலில் போட்டி நடைபெறுவதால், பனிப் பொழிவும் பங்காற்றாது என்பதால், இரண்டாம் பாதி ஆட்டத்தில், பௌலர்களின் கை சற்று ஓங்கவும் வாய்ப்புள்ளது. மேலும், நடப்பு சீசனில், எந்தப் போட்டியுமே, வான்கடேவில், பிற்பகலில் நடைபெறாததால், களம் எப்படி ஒத்துழைக்கும், அது எப்படி போட்டியின் போக்கை மாற்றும் என்பதைக் கணித்து அறிவது, இருபக்கத்திற்கும் கடினமாகவே இருக்கும்.

எங்கிடியின் பலம்!

சிஎஸ்கேவின் சார்பில் இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில், தீபக் சஹாரே முன்னிலை வகிக்கிறார். ஆனால், ஐபிஎல்-ன் பாரம்பரியம் மாறாமல், அட்டாக் செய்யும் வகையில் பந்துவீச, ஆறடிக்கும் உயரமான, மணிக்கு 140+கிமீ வேகத்தில் பந்துவீசும் ஒரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளருக்கான இடம் காலியாக இருந்தது. அதை நிரப்பும் வகையில், கடந்த போட்டியில் சிஎஸ்கேவுடன் இணைந்த எங்கிடி, மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, தேவைப்பட்ட தாக்கத்தைத் தந்தார். அதில் திரிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகியோர்களின் விக்கெட்டுகளை, சரியான நேரத்தில் வீழ்த்தி இருந்தார். சிஎஸ்கேவின் சரியான ஆயுதமாக இவர் உருவெடுத்திருப்பது அணியின் பலத்தைக் கூட்டியிருக்கிறது.

முழுபலத்தோடு மேக்ஸ்வெல், ஏபிடி!

சிஎஸ்கேவின் பேட்டிங் லைன் அப், ஒன்பதாவது, பத்தாவது வீரர் வரை நீள்வது, எதிரணி பௌலர்களுக்குச் சவால் விடுவதாகத் தோன்றினாலும், உண்மையில் அச்சுறுத்தும் வகையில் இருப்பது, ஆர்சிபியின் பேட்டிங் ஆர்மிதான். முன்பெல்லாம், கோலி, ஏபிடியை சுற்றியே கட்டமைக்கப்பட்டிருந்த அவர்களது பேட்டிங்கில், இப்போது படிக்கல் மற்றும் மேக்ஸ்வெல்லும் இணைந்து மரணபீதியைக் காட்டுகின்றனர். இரண்டு அரைசதங்களோடு மேக்ஸ்வெல் மிரட்ட, 189 ஸ்ட்ரைக்ரேட்டோடு ஏபிடி பிபியை எகிற வைக்கிறார்.

தோனி - ரெய்னா

கடந்த போட்டியில், கோலி 6000 ரன்களைக் கடந்திருக்கும் நிலையில், 5000 ரன்களைக் கடக்க ஏபிடிக்கு, 26 ரன்களே தேவைப்படுகின்றன. நாளைய போட்டியில் அவர் இந்த மைல்கல்லை அடைவார் என எதிர்பார்க்கலாம். சிஎஸ்கேவின் மொத்த பேட்டிங் பலத்துக்கும் இவர்கள் நால்வருமே ஈடாவார்கள் என்பதால், பெரிய சவால் காத்திருக்கிறது. இந்தத் தொடரில், சிஎஸ்கேவின் வேகப்பந்து வீச்சாளர்கள், 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க, ஆறு விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி உள்ளனர். எனினும், நாளைய போட்டியில், மொயின் அலி - ஜடேஜாவின் பந்துவீச்சு பெரிய திருப்புமுனையாக அமைய வாய்ப்புகள் உள்ளன.


சேஸ் செய்யுமா சிஎஸ்கே!

இலக்கைத் துரத்துவது சிஎஸ்கேவுக்குக் கைவந்த கலை. அதைப் பல சந்தர்ப்பங்களில், வெற்றிகரமாகவே செய்துள்ளது. ஆனால், நடப்புத் தொடரில், அந்த வாய்ப்பு, சிஎஸ்கேவிற்கு ஒருமுறை மட்டுமே அமைந்தது, அதுவும் பஞ்சாப்பிற்கு எதிராக. வெறும் 107 எனும் மிகக்குறைவான ஸ்கோரையே சேஸ் செய்தது சிஎஸ்கே. இன்னமும், ஒரு ஹை ஸ்கோரை சேஸ் செய்யும் சந்தர்ப்பம், சிஎஸ்கேவுக்கு வாய்க்கவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில்தான், எப்படி அதை சிஎஸ்கே எதிர்கொள்ளும், அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்குமா என்பது தெரிய வரும்.

கேப்டன்களின் மோதல்!

தோனி வெர்ஸஸ் கோலி, என்ற ஒரு சொற்றொடரே, போட்டியின் சுவாரஸ்யத்தை, பலமடங்கு ஏற்றிவிடக் கூடியது‌. அதிலும், மும்பை- சிஎஸ்கேவுக்கு அடுத்ததாக, இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்றாலே, என்றைக்கும், எதிர்பார்ப்பு கூடுதலாகவே இருக்கும். அதை இந்த அணிகளும் என்றைக்கும் பொய்யாக்கியதில்லை. இன்றைய போட்டியிலும், இதையே எதிர்பார்க்கலாம். சிஎஸ்கேவுக்கு எதிராக கோலி 887 ரன்களை எடுத்திருக்கிறார் என்றால், ஆர்சிபிக்கு எதிராக தோனி, 823 ரன்களைச் சேர்த்துள்ளார். இது அந்தக் குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோராகவும் இருப்பது, கூடுதல் சிறப்பு.

ஏபி டிவில்லியர்ஸ்

ரெய்னா ஜொலிப்பாரா?!

முதல் போட்டியில் அபாரமான ரீ என்ட்ரி கொடுத்த ரெய்னாவிடமிருந்து, அதன்பிறகு ஒரு பெரிய இன்னிங்ஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தனது இடத்தை மொயின் அலிக்குத் தாரை வார்த்து, நான்காவதாகக் களமிறங்குவதாலோ என்னவோ, பழைய ரெய்னா இன்னமும் முழுமையாக வெளிப்படவில்லை. 6000 ரன்களை, கோலி கடந்துவிட்ட நிலையில், ஒரு சீசன் விளையாடாத போதிலும், அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில், ரெய்னாவே இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நாளைய போட்டியில், வாய்ப்புகள் அமைந்தால், ரெய்னாவிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம்.

கோலியா, தோனியா… சென்னையா, பெங்களூருவா?! காத்திருப்போம்.



source https://sports.vikatan.com/ipl/dhonis-chennai-super-kings-vs-kohlis-royal-challengers-bangalore-ipl-2021-match-preview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக