Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

சுதந்திரத்துக்காக மட்டுமல்ல; விவசாயிகளுக்காகவும் இவ்வளவு உழைத்திருக்கிறார் வ.உ.சி!

`கப்பலோட்டிய தமிழன்’ வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை மறைந்த தினம் இன்று. 1872-ம் ஆண்டு பிறந்த வ.உ.சி, நவம்பர் 18, 1936-ம் ஆண்டு இறந்தார். பெரும்பாலோனோருக்கு ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் சுதேசி கப்பல் ஓட்டியது, விடுதலைக்காகப் போராடியது, தமிழ் மொழிக்கு ஆற்றிய பணிகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், அவர் விவசாயிகளுக்காகவும் நிறைய சொல்லியிருக்கிறார். விவசாயம், இயற்கை வேளாண்மை எப்படி இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

நிலைத்த பொருளாதாரமும் நீடித்த வேளாண்மையும்தான் இயற்கை வழி வேளாண்மையின் அடித்தளம். நஞ்சில்லா உணவு உற்பத்தி என்பது அதன் மேல் கட்டுமானமாக இருக்கிறது. வேளாண்மையின் அடித்தளத்தைப் பற்றி பில் மொலிசன், குமாரப்பா, ஜெப் லாடன், மசனோபு புகோகா, நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் எனப் பல்வேறு அறிஞர்கள் பேசியும் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள். எனினும், தமிழ்ச் சூழலில் வேளாண்மையைப் பற்றியும் உழவர்களைப் பற்றியும் சிந்தித்த முன்னோடி ஒருவரை நாம் மறந்தே போய்விட்டோம். அவர் வேறு யாருமில்லை, 40 நாடுகளை காலனியாதிக்கம் செய்து வந்த வெள்ளை அரசின் கப்பல் நிறுவனத்துக்கு எதிராகக் கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரே ஆவார்.

இளம் வயது வ.உ.சி

என்னே! செக்கிழுத்த செம்மலா சேற்றில் உழலும் உழவர்களைப் பற்றி யோசித்திருக்கிறார்? ஆம். தொழிற்சங்கங்கள், இயக்கங்கள், கூட்டுறவு அமைப்புகள் என இவையெல்லாம் தோன்றும் முன்னரே ``சென்னை விவசாய கைத்தொழில் சங்கம்” என்ற பெயரில் 11.10.1921-ல் சங்கம் உருவாக்கி உழவர்களை சுதேசியத்தின் கீழ் ஒருங்கிணைத்திருக்கிறார். அவர் ஒருங்கிணைத்த நூற்றாண்டு கண்ட விவசாய சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நோக்கங்கள்:

1. தொழிலாளர்கள், விவசாயிகளது வாழ்க்கைத் தரத்தை மேம்பாடடையச் செய்வது.

2. தொழிலும் விவசாயத்திலும், நவீன விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி, அவற்றை வளர்ப்பது.

3. நமது மாணவர்களுக்காக சுதேசியத் தொழிற் பள்ளிகள் ஆரம்பித்துப் பயிற்சி அளிப்பது.

4. தரிசு நிலங்களை எல்லா மாவட்டங்களிலும் விலைக்கு வாங்கி, விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் நவீன விஞ்ஞான முறைகளில் பயிற்சியளித்து, அவற்றைப் பண்படுத்தி, விவசாய வளர்ச்சிக்குத் தொண்டாற்றுவது.

சுதேசி நாவாய் சங்கத்தை மக்களின் பங்களிப்போடு எப்படித் தொடங்கினாரோ அதேபோல தரிசு நிலங்களையும் மக்கள் பங்களிப்போடு வாங்கி விளை நிலங்களாக்கி உழவர்களின் வாழ்க்கைப்பாடுகளை மேம்படுத்த விவசாய சங்கத்தைத் தோற்றுவிக்கிறார். கூட்டுப் பண்ணைகளை உருவாக்கி உழவர்களே தங்களின் பொருள்களை சுதேசியமாக (தற்சார்பாக) விற்பனை செய்துகொள்ளும் வழிமுறையை இத்திட்டம் கொண்டிருந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வ.உ.சி அன்றைக்கு முன்வைத்த திட்டமானது இன்றைக்கு ஆங்காங்கே இயற்கை வேளாண் கூட்டுப் பண்ணைகளாக உருவாவதைக் காணமுடிகிறது.

வ.உ.சி

தொழிலாளர்களும் உழவர்களும் சங்கத்தின் பங்குதாரர்களாக வேண்டும் என்று அவர் விரும்பினார். 10,000 ரூபாயை மூலதனமாகத் திரட்ட திட்டமிட்டார். பங்கு ஒன்று 10 ரூபாய் என்றும் அதைப் பத்து மாதத் தவணைகளில் செலுத்தலாம் என்றும் சலுகையளித்தார். இடர் காலங்களில் தொழிலாளர், உழவர் வகுப்பினருக்கு இந்தத் தொகை கைகொடுக்கும் என்று கருதினார்.

பெரியவர் வ.உ.சி-யின் விடுதலை அரசியல் என்பது மிகத் தெளிவாகத் திட்டமிட்ட இலக்குகளைக் கொண்டதாக விளங்குகிறது. பருத்தி வணிகத்தைப் பற்றிய அவரது கருத்து இன்றைய கால கட்டத்துக்கும் ஆகப் பொருந்திப் போகிறது. விளையும் பருத்தி நம்முடையது. விளையும் பருத்தியை வேளாண்மை செய்பவர்கள் நம்மவர்கள். ஆனால், அதைக் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்வது மட்டும் அயலாரோ? நம்மால் அதைச் செய்ய இயலாதா என்று தூத்துக்குடி மக்களிடையே கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாவாய் சங்கத்தை போலவே மக்களின் பங்களிப்போடு பருத்தி ஆலை ஒன்றினைத் தூத்துக்குடியில் நிறுவி பருத்தி வணிகத்தைச் செய்வதற்குத் திட்டம் தீட்டியிருக்கிறார். பெரியவர் வ.உ.சி-யின் அன்றைய `பருத்தி கேள்விகள்’ இன்றைக்கும் தேவைப்படுகிறது. ``வெள்ளைத் தங்கம்” என்று அழைக்கப்படும் கருங்கண்ணி என்ற நாட்டுப் பருத்தி இன்றைக்கு அழிவின் விளிம்பில் இருக்கிறது. `நிலத்துக்கு இசைவன விதைத்திட துணிதல்’ என்ற வ.உ.சி-யின் சொல்லில் கருங்கண்ணியின் இருப்பின் தேவையை உணர முடிகிறது. விதைகளே பேராயுதம் என்று நம்மாழ்வார் சொல்கிற தற்சார்பும் இந்தப் புள்ளியில் ஒன்றிணைகிறது.

விவசாயம்

உழவர்கள் அனுதினமும் உழன்று உற்பத்தியில் ஈடுபடுவதை காணச் சகியாது அவர்களுடைய வேளாண் முறையை எளிமையாக்க வேண்டும், சுதேசிய தொழிற்பள்ளிகள் மூலம் வேளாண்மையில் நவீன முறை (இங்கு நவீனம் என்பதை வேலையை எளிதாக்குவது என்று பொருள் கொள்ள வேண்டும்) கற்றுத் தரப்பட வேண்டும் என்கிறார். இதே கருத்தைப் புழுதியில் உழன்று கொண்டிருக்கும் உழவர்களை ஒரு படி மேலேற்றி விடுவதுதான் எமது லட்சியம் என்று நம்மாழ்வார் முன்னெடுத்துச் சென்றார்.

`வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என வள்ளலார் சொன்னது போல வ.உ.சி-யும் உயிர்மநேயவாதியாக இருந்திருக்கிறார். இன்றைக்கு மரங்கள் நடுவதைவிட வளர்ந்த மரங்களை வெட்டுவதைத் தடுப்பது அவசியமான பணியாக இருக்கிறது.

``தண்ணிழலும் காற்றும் தருகின்ற நல்மரங்காள்

எண்ணியலும் ஐயறிவும் இல்லாநும் - ஒண்ணிலையை

நும்மினின்று வேறாக்க நோகிறதே என்னுள்ளம்

எம்மனம்கொண் டார்கொல்வார் இங்கு”

மரம் வெட்டப்படுகிறபோது அவர் மனம் அடைந்த துயரத்தை இப்பாடலில் வெளிப்படுத்துவதன் மூலம் வ.உ.சி-க்குள் ஒரு சூழலியலாளன் இருப்பதை இனம் காண முடிகிறது. உழவர் ஒருவர் பயிர் செய்வதை விவரிப்பதுபோல சுதேசியத்தை மக்களிடம் வளர்த்த கதையைத் தன் சுயசரிதையில் கூறுகிறார்.

விவசாயம்

``நெருங்கிட நண்பரை நிதமும் சேர்த்து,

தர்க்க மென்னும் தகுமண் வெட்டியால்

வர்க்கப் பாத்தி வரிசையாச் செய்து,

ஜகத்தினை என்றும் தன்வசப் படுத்தும்

அகத்தின் கேணியின் அருளின் நீரை

நாவெனும் துலாவால் நாளும் இறைத்து,

‘தா’ எனும் இன்சொல்லின் தகளியால் வார்த்துப்

பலபல சங்கக் கிளையுடன் அச்செடி

வலினிதம் பெற்றிட மதிகொடு வளர்த்தேன்”

நண்பர்களைச் சேர்த்து தர்க்கம் (விடுதலை விவாத உரையாடல்கள்) எனும் மண்வெட்டியால் ஜாதி, பேத வர்க்கங்களைக் களைந்து, உலகை வசப்படுத்தும் உண்மை எனும் நீரை நாக்கில் நாளும் இறைத்து பல சங்கங்களை கிளைகளாகக் கொண்ட சுதேசியம் எனும் செடி வளர்த்தேன் என்கிறார் வ.உ.சிதம்பரனார். அப்படி அவர் வளர்த்த சுதேசியச் செடியின் ஒரு கிளைதான் ``சென்னை மாகாண விவசாய சங்கம்.”

1868-ல் வெள்ளை அரசாங்கத்தால் சென்னையில் வேளாண் பள்ளி தொடங்கப்படுகிறது. பிறகு, 1906-ல் அது வேளாண் கல்லூரியாக கோவைக்கு மாற்றப்படுகிறது. அவர்கள் தொடங்கிய கல்லூரியின் நோக்கத்திலிருந்து வ.உ.சியின் சுதேசிய தொழிற்பள்ளி முற்றிலும் வேறுபடுகிறது. இந்த நாட்டில் இருக்கிற வளங்களை முறையாக அறிந்து கொண்டு சுரண்டிச் செல்ல வேண்டும் என்பதுதான் வெள்ளை அரசின் நோக்கமாக இருந்திருக்கிறது. அதன் நீட்சிதான் அவர்கள் தொடங்கிய வேளாண் கல்லூரி. ஆனால் வ.உ.சியோ வேளாண்மையை எளிமையாக்கவும் உழவர்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவே சுதேசிய பள்ளியில் நவீன முறையில் உழவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்கிறார். இதன் மூலம் உழவர்களை அணி திரட்டி பொருளாதார விடுதலைப் போரில் ஈடுபடுத்தும் எண்ணம் கொண்டிருந்திருக்கிறார்.

இந்திய விடுதலைப் போரில் வ.உ.சியின் பங்கு தனித்துவமானது. உற்பத்திசார் சிந்தனையே வ.உ.சியை பொருளாதார விடுதலைப் போரை முன்னெடுக்கத் தூண்டியிருக்கிறது. தன்னுடைய மெய்யறம் நூலில் உழவு, வணிகம், கைத்தொழில் போன்ற உற்பத்தி சார்ந்த கூறுகளை அதிகாரங்களாகப் படைத்திருப்பது மேற்சொன்ன கருத்துக்கு வலுசேர்க்கிறது. `மெய்யறம்’ எனும் நூல் திருக்குறள் வழி வந்த நூலாகும். அதிகாரத்துக்கு 10 வரிகள் என 125 அதிகாரங்களை வைத்து கண்ணூர் சிறையில் இருந்தபோது இந்த நூலை எழுதியிருக்கிறார்.

உழவு எனும் அதிகாரத்தில் இருந்து ஐந்து வரிகளை எடுத்தாளுதல் மூலம் வ.உ.சியின் வேளாண்சார் அறிவை விரிவாகப் பார்ப்போம்.

உழவர் உயிர்க்கெல்லாம் உயிரெனத் தக்கவர்

`சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்று கூறுகிறார் வள்ளுவர். `எந்தத் தொழில் செய்தாலும் உணவு படைக்கும் உழவுத் தொழில் பின்னே தான் அனைத்தும் வந்தாக வேண்டும்’ என்கிறார் வள்ளுவர். `ஒன்றின் கழிவு இன்னொன்றின் உணவு’ என்று கூறுவார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். நெற்பயிரின் நெல் மணிகளை மனிதர்கள் எடுத்துக் கொள்கிறோம். பயிரின் தாளானது வைக்கோலாக மாட்டுக்கு உணவாகிறது. மாட்டின் சாணம் நுண்ணுயிர்களுக்கு அமுதாகிறது. இப்படி உணவு சங்கிலியில் முதன்மை பங்காற்றுவதால் உழவர்கள் எல்லா உயிர்களுக்கும் உயிரானவர் என்கிறார் வ.உ.சி.

மரங்கள்

காடுநன் கழித்துக் கோடையி லுழுதல்

கோடை உழவு வேளாண்மையில் முதன்மையானது. காட்டைத் திருத்தி கோடையில் உழவு ஓட்டி வைத்தால் பயிர் செய்கையின்போது களையைக் கட்டுப்படுத்தலாம். `சித்திரை உழவு பத்தரை மாதத்து தங்கம்’ என்பார்கள். சித்திரையில் உழவர்கள் பொன்னேர் கட்டுதல் என்றொரு உற்பத்திசார் சடங்கு நிகழ்த்துவார்கள்.

கோடையில் தொடங்குகிற உழவு விதைக்கிற வரைக்கும் தொடர் நிகழ்வாக நடக்கிறது. உழவிடுதல் - மழை பெய்தல் - உழவிடுதல் என நிலத்தில் உழவு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. `உழுக உழுக மப்பு’ என ஒரு சொலவடை உண்டு. தொடர் உழவினால் நிலம் நல்ல விளைச்சல் தரும். அதுவும் கோடையில் உழுதிட வேண்டும் என்கிறார் வ.உ.சி

நிலத்திற் கிசைவன விதைத்திடத் துணிதல்

`பருவத்தே பயிர் செய்’ என்பதுபோல நிலத்துக்கு உரிய வித்தை விதைக்க வேண்டும் என்கிறார் பெரியவர் வ.உ.சி. நிலத்துக்கு இசைவன என்றால் அந்த நிலத்துக்கு ஏற்ற வித்துகளை விதைக்க வேண்டும் எனப் பொருள் கொள்ளலாம். புன்செய் நிலத்தில் சிறுதானியங்கள், நன்செய் நிலத்தில் நெல்மணிகள், கரிசல் மண்ணில் பருத்தி, கத்திரி செம்மண்ணில் வெங்காயம், கீரை, கொடி வகைக் காய்கள் என்பன போல நிலத்துக்கு ஏற்ற விதைகளை விதைக்க வேண்டும் என்கிறார் வ.உ.சி.

நிலத்தின் தன்மை, நிலம் உள்வாங்கும் நீர் இவற்றைப் பொறுத்து அதற்கேற்ப மரபான வித்துகளை நம் உழவர்கள் கையில் வைத்திருந்தார்கள். வீட்டில் விதை இருக்க வேண்டும் என்பதை `இல்லத்தே வித்துளதாய்’ என்கிறார் ஔவையார். `வெளியூர்ல வெத வாங்காதே; உள்ளூர்ல ஒத வாங்காதே’ என்ற சொலவடை புழக்கத்தில் உண்டு.

விவசாயம்

மரபான விதைகளை ஒழித்தது, மரபான உழவறிவை ஊதாசீனப்படுத்தியது ஆகியன மூலம் நவீன வேளாண்மை உழவர்களைத் தொடர் நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிறது. `அரிசி மேன்மையானது, புன்செய் நிலத்து சிறுதானியம் கீழானது’ என்ற மனநிலை எல்லா வகைப்பட்ட நிலத்திலும் நெல்லையே விளைவிக்க வழி வகுத்துவிட்டது. இதனால் நீர் பற்றாக்குறை, அதிகமான களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கு ஆளாகி உழவர்கள் கடனாளியாகவும் ஆனார்கள். உழவர்கள் கடன்படாமல் வாழ வேண்டும் என்றால் வ.உ.சி சொல்வது போல் நிலத்துக்கு ஏற்ற விதை விதைக்கத் தொடங்க வேண்டும்.

வித்திற் காமெரு மெத்த விடுதல்

`விதைக்கின்ற விதைக்கேற்ற எரு இட வேண்டும்’ என்கிறார் வ.உ.சி. நிலத்துக்கேற்ற விதையை விதைப்பதுபோல விதைக்கேற்ற எருவினை இட வேண்டும் என்பதே இதன் பொருள். `ஆடு கெடந்த இடத்துல நெல்ல விதை’ என்ற பழமொழியின் மூலம் ஆட்டுப்புழுக்கை, ஆட்டின் சிறுநீர் இவை எல்லாம் நெல் வயலுக்கு ஆகச் சிறந்த எரு என்று விளங்குகிறது. `மாட்டுக் கிடை மறு வருஷம்; ஆட்டுக் கிடை அந்த வருஷம் எனும் சொலவடையும் ஆட்டுக் கிடையின் மேன்மையைச் சொல்கிறது.

வ.உ.சி

வேர் செலும் ஆழம் ஏர் செல உழுதல்

நிலத்தை கோடைக்காலத்தில் உழுவது சிறப்பு என்றால் ஆழமாக உழுதல் இன்னும் சிறப்பானதாகும். எவ்வளவு தூரம் ஆழ உழுகிறோமோ அவ்வளவு தூரம் வேர் ஆழச் செல்லும் என்கிறார் வ.உ.சி. ஆழ உழுதலின் சிறப்பு என்னவெனில் ஆழமாக உழுகிறபோது களைச் செடிகளின் வேர், கிழங்கு போன்றவற்றை ஊடறுத்து கீழ் மண்ணை மேல் மண்ணாகப் புரட்டிப் போடுகிறபோது காற்று மண்ணடி வரை செல்கிறது. இயந்திர உழவைவிட கலப்பை உழவு ஆழமாகச் செல்லும். உழவியந்திரம் (tractor) சாணியும் போடவில்லை. ஆழமாகவும் உழவில்லை என்பது கண்கூடு.

இவ்வாறு நிலத்தில் அரும்பாடுபட்டு உற்பத்தியில் ஈடுபடும் உழவர்கள் தங்களின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் ஏமாற்றம் அடைய நேர்கிறது. இதற்கும் வ.உ.சி தன் மெய்யறத்தில் வாணிகம், பொருள் ஆகிய அதிகாரங்களில் வழி கூறுகிறார்.

விற்கத் தக்க விலையுடை யதுபொருள்

உழவர் தன் பொருளை தானே விற்க துணிந்து விடுதல் நலமாகும். நுகர்வோர் உழவரை நோக்கி கழனிக்கு வர வேண்டும். கூட்டுப் பண்ணைகள், கூட்டுறவு அமைப்புகள் மூலம் இது சாத்தியமாகும். வ.உ.சி இதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உழவர்கள் அவரவர் விளைபொருள்களுக்கு அவரவரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே வ.உ.சி-யின் மெய்யறம் முன்வைக்கிற மறை பொருளாகும்.

விவசாயம்

`செலவெலாங் கூட்டிச் சிறிதேற்றி விற்றல்’

பெரும் உற்பத்தி (Mass production) என்பதைவிட பெருமக்களின் உற்பத்தியே (production by mass) எளிய மாந்தர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும். நிறுவனங்களைச் சாராமல் உழவர் தன்னியல்பாகத் தங்களின் விளைபொருள்களை விற்க அணியமாக வேண்டும். உற்பத்திக்கும் போக்குவரத்துக்கும் ஆன செலவை சேர்த்து சிறிது கூட்டி தங்கள் பொருள்களை விற்க வேண்டும் என்கிறார் வ.உ.சி.

கூட்டுப் பண்ணைகள் உருவாக வேண்டும். கூடிப் பயிர்த் தொழில் செய்ய வேண்டும். விளைவிப்பவரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். `நன்னிலம், நல்லுணவு, நல்வாழ்வு’ என்ற இலக்கு வைத்து மேல்சொன்னவற்றை எல்லாம் நிகழ்த்த பாடுபட வேண்டும். வ.உ.சியின் விவசாய சங்கம் முன்னெடுத்த முன்னெடுப்புகளை நாம் தொடர்கிறபோது மேற்சொன்னவை ஒருநாள் சாத்தியம் ஆகும். இவையே நாம் பெரியவர் வ.உ.சி-க்கு செலுத்துகிற நன்றிக் கடனாகும்.

சான்று நூல்கள்:

வ.உ.சி முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி

கப்பலோட்டிய தமிழன்

வ.உ.சி சுயசரிதை

தமிழ்ப் பலமொழிகளில் அறிவியல்.

நன்றி: ரெங்கையா முருகன், ஆயர்பாடி.

-கதிர் நம்பி,

இயற்கை விவசாயி மற்றும் மென்பொறியாளர்,

மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.



source https://www.vikatan.com/news/agriculture/freedom-fighter-v-o-chidambaram-contribution-to-agriculture-and-farmers-welfare

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக