Ad

சனி, 24 ஏப்ரல், 2021

வரகு - ராகி தோசை | கம்பு - சோள தோசை | குதிரைவாலி - சோள தோசை... தோசை ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்!

ஆசை, தோசை....

`இன்னிக்கும் இட்லியா' என அலுத்துக்கொள்ளும் பலரும் `இன்னிக்கும் தோசையா' என சலித்துக்கொள்வதில்லை. வீட்டில் தோசை சாப்பிட்டு போரடிக்கிறது என ஹோட்டலுக்கு போனாலும் அங்கேயும் தோசையே ஆர்டர் செய்கிற இனம்தான் நம்மில் அதிகம். தோசையை மிஸ் பண்ண முடியாது... அதே நேரம் கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடவும் அறிவுறுத்தப்படுகிறோம். ஆசை தோசையையே ஆரோக்கியமான உணவாக மாற்றிக்கொள்ள இங்கே பகிர்ந்துள்ள ரெசிப்பிக்கள் உங்களுக்கு உதவும். ஹேப்பி அண்ட் ஹெல்த்தி வீக் எண்ட் மக்களே...

தேவையானவை:

- வரகு அரிசி - 200 கிராம்
- கோதுமை - 100 கிராம்
- ராகி - 100 கிராம்
- உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை

- கறிவேப்பிலை - சிறிதளவு
- வெந்தயம் - 2 டீஸ்பூன்
- நெய் (அ) நல்லெண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு

வரகு - ராகி தோசை

செய்முறை:

வரகு அரிசி, ராகி, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும். எல்லா மாவையும் ஒன்றாகக் கலக்கவும். இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்க்கவும். 3 முதல் 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். இது மிகவும் சத்தான தோசை.

தேவையானவை:

- கம்பு - 100 கிராம்
- அரிசி - 200 கிராம்,
- சோளம் - 50 கிராம்
- உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- சிறிதாக நறுக்கிய காய்ந்த மிளகாய் - ஒரு டீஸ்பூன்
- கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒன்றரை டீஸ்பூன்
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கம்பு - சோள தோசை

செய்முறை:

அரிசி, கம்பு, சோளத்தை தண்ணீரில் 8 மணி நேரமும், உளுந்தை 1 மணி நேரமும் ஊறவைத்து நன்கு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வறுத்துக்கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து வதக்கவும். இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து, போதுமான உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். மாவை சிறிது நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

தேவையானவை:

- இட்லி மாவு - 200 கிராம்
- பசலைக்கீரை - அரை கட்டு
- பச்சை மிளகாய் - 2
- பெரிய வெங்காயம் - 1
- தேங்காய் எண்ணெய்

- உப்பு - தேவையான அளவு.

பசலைக்கீரை தோசை

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பசலைக் கீரையைப் போட்டு வதக்கி எடுத்து அரைத்துக்கொள்ளவும். அதே எண்ணெயில் பொடியாய் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இவை அனைத்தையும் இட்லி மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். மாவை சூடான தோசைக் கல்லில் ஊற்றி, தேங்காய் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

தேவையானவை:

- வரகு அரிசி, இட்லி அரிசி - தலா 100 கிராம்
- தினை, உளுந்து - தலா 50 கிராம்
- சிவப்பு அவல் - அரை கிலோ
- வெந்தயம் - 2 டீஸ்பூன்
- எண்ணெய்

- உப்பு - தேவையான அளவு

புதினா தொக்குக்கு:

- புதினா - அரை கட்டு
- சீரகம், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - சிறிதளவு
- தேங்காய்த் துருவல் - அரை கப்
- காய்ந்த மிளகாய், எண்ணெய்

- உப்பு - தேவையான அளவு

வரகு - தினை - புதினா தோசை

செய்முறை:

வரகு அரிசி, இட்லி அரிசி, தினையை 8 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து அரைத்து, உப்பு சேர்க்கவும். சிவப்பு அவலை 10 நிமிடம் ஊற வைத்து கையால் மசித்து மாவில் சேர்க்கவும். சிறிது நேரம் புளிக்க வைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசையாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு புதினா தொக்குக்கு கொடுத்தவற்றை (உப்பு நீங்கலாக) சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் மையாக அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்தத் தொக்கை தோசை மீது தேய்த்து, தோசையைச் சுருட்டி சூடாகப் பரிமாறவும்.

தேவையானவை:

- குதிரைவாலி அரிசி - 100 கிராம்
- இட்லி அரிசி - 100 கிராம்
- சோளம் - 50 கிராம்
- உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
- வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
- கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- ரவை - 50 கிராம்
- பச்சரிசி மாவு - 50 கிராம்
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு
- உப்பு - தேவைக்கேற்ப

குதிரைவாலி - சோள தோசை

செய்முறை:

குதிரைவாலி அரிசி, இட்லி அரிசி மற்றும் சோளத்தை 8 மணி நேரமும், உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒரு மணி நேரமும் ஊறவைத்து நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் ரவை, பச்சரிசி மாவை சேர்க்கவும். போதுமான தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையைச் சேர்த்து வதக்கி, மாவுடன் சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும். பின்பு, மாவை சூடான தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து, எண்ணெய் (அ) நெய் விட்டு சுட்டெடுக்கவும்.



source https://www.vikatan.com/food/recipes/varagu-ragi-dosai-kambu-cholam-dosai-dosai-special-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக