ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து, தொடர்ந்து ஸ்டாலின் பேசிவருகிறார். ஜெயலலிதாவின் மரணத்திலிருக்கும் மர்மம் தொடர்பாக தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விசாரித்து மக்களுக்கு உண்மை தெரியப்படுத்தப்படும் என்று ஸ்டாலின் ஏற்கெனவே சில முறை பேசியிருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். அதில், ` `தர்மயுத்தம்’ நடத்தி துணை முதல்வர் பதவியைப் பெற்ற ஓ.பன்னீர்செல்வம் இப்போது, `தர்மயுத்தம் – 2’ என்று மிரட்டினார். ஆனால், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் சம்மனை நினைவூட்டியதாலும், வேறு சில காரணங்களாலும் ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு `முதல்வர் வேட்பாளர்’ என்று ஆசி வழங்கி, கட்சிக்குள்ளேயே ஒரு கூட்டணி அமைத்துக்கொண்டு, இரண்டாவது தர்மயுத்தத்தை முடித்துக்கொண்டு அமைதியாகிவிட்டார்.
மூச்சுக்கு முந்நூறு தடவை `அம்மாவின் ஆட்சி’ என்று குறிப்பிடுகிறார்கள். அப்படிப்பட்டவரின் மரணத்தில் உள்ள சதிக் குற்றச்சாட்டு பற்றி இன்னும் விசாரித்து முடிக்கவில்லை. விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையமும் மூன்று வருடங்களுக்கு மேலாக முடக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், அரசு வழக்கறிஞர், கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் ஆகியோர் மீது விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி குற்றம்சாட்டி கடிதம் எழுதியிருக்கிறார்.
தங்கள் தலைவியின் மரணத்திலுள்ள சதியை மறைக்க, அரசியல் விளையாட்டு நடத்திவருகிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள சதியை விசாரித்து மர்மக் குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி, அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று உறுதியளிக்கிறேன்’ என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.
தற்போது சட்டமன்றத் தேர்தல் பரபரப்புத் தொடங்கியிருக்கும் நிலையில், கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்றுவரும் ஸ்டாலின், ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடத்தை வகிக்கும் என்று பேசியிருக்கிறார்.
இது குறித்து தி.மு.க-வின் சட்டத்துறையின் இணைச் செயலாளரான வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம்.
``ஒரு மனிதனின் மரணம் கண்ணியமாக இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதேபோல, இறந்த மனிதனின் உடல் கண்ணியமாக அடக்கம் செய்யப்பட வேண்டும். இறந்தவரின் உடலைப் பிணம் என்று சொல்லக் கூடாது, அந்த உடல் மனிதராகக் கருதப்பட வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது. அந்த வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்துப் பல கேள்விகளும் சந்தேகங்களும் உள்ளன.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொன்னவர்கள் அ.தி.மு.க-வினர். அவர்கள்தான் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அனைத்துச் சந்தேகங்களையும் கிளப்பினார்கள். தற்போது அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம்தான் அதை ஆரம்பித்துவைத்தார். ஒரு மாநில முதல்வரின் மரணம் குறித்து சந்தேகங்கள் எழுகிறதென்றால், அவற்றைத் தீர்ப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பு. ஆனால், மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு இந்த அரசு தயாராக இல்லை.
Also Read: “ஸ்டாலின் முதலில் அழகிரியை ‘ஒன்றிணைய’ அழைக்கட்டும்!”
விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார்கள். ஆனால், விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வமே அந்த ஆணையத்தில் ஆஜராகவில்லை. அவர் தனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்ல மறுக்கிறார். அதற்கு என்ன காரணம்... ஜெயலலிதாவைக் கட்டையால் அடித்துக் கொன்றார்கள் என்று பொன்னையன் கூறினார். அது பற்றி அவரிடம் கேட்டால், `வாட்ஸ்அப்பில் பார்த்ததைச் சொன்னேன்’ என்கிறார்.
`ஜெயலலிதாவின் காலை எடுத்துவிட்டார்கள், விரலை எடுத்துவிட்டார்கள்’ என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. அப்படியென்றால், கண்ணியமான முறையில் அவர் மரணிக்கவில்லை என்பது தெரிகிறது. உண்மைகளைச் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அந்தக் கடமையைச் செய்வதற்கு அ.தி.மு.க அரசு தவறிவிட்டது. எனவே, தி.மு.க ஆட்சி வந்த பிறகு அந்தக் கடமையை நாங்கள் நிறைவேற்றுவோம்’’ என்றார்.
இது குறித்து அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தியிடம் பேசினோம். ``ஆறுமுகசாமி ஆணையம் 150-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்திருக்கிறது. அரசு விரைவுபடுத்தினால் நன்றாக இருக்கும் என்று ஆணையமே சொல்கிறது. அதற்காக, ஆணையம் இந்த அரசைக் குறைசொல்கிறதே என்று பார்ப்பதைவிட, ஆணையம் நியாயமாகச் செயல்படுகிறது என்று பார்க்க வேண்டும். ஆணையத்துக்கு தமிழக அரசு காலநீட்டிப்பு செய்துகொடுத்திருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்துவிடும்.
எங்கள் தலைவரின் மரணம் குறித்த தெளிவான தகவல்களை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு இதில் திடீரென்று என்ன அக்கறை... முதலில் அவர்கள் ஆட்சிக்கு வரட்டும். வந்தால் அதன் பிறகு பார்க்கலாம். `டார்ச்சர் கொடுத்ததால்தான் கருணாநிதி இறந்தார்’ என்று மு.க.அழகிரி சொல்கிறார். அப்படியென்றால், அதற்கு ஒரு விசாரணை ஆணையம் அமைக்க முடியுமா?
உடல்நிலை சரியில்லாமல் அம்மா இருந்தார்கள் என்பது உண்மை. அதை மறுக்க முடியாது. ஓர் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவருக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை. ஆஞ்சியோகிராம் செய்திருந்தால் மாரடைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டிருக்க முடியும் என்பது இதய நிபுணர்களின் கருத்து. ஆஞ்சியோகிராம் செய்யாதது அந்த மருத்துவமனையின் தவறு என்று சொல்லலாம் அல்லது அவரைப் பார்த்துக்கொண்டவர்களின் தவறு என்றும் சொல்லாம். இது போன்ற தவறுகளைச் சுட்டிக்காட்டி அரசுக்கு ஆணையம் தெரிவிக்க வேண்டும்.
அம்மாவின் கால் எடுக்கப்பட்டிருந்தது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அம்மாவின் உடலை மருத்துவமனையிலிருந்து வாங்கியபோது நான் அங்கு இருந்தேன். அம்மாவின் கால்களைத் தொட்டுப் பார்த்தேன். எனவே, அந்தக் குற்றச்சாட்டு உண்மையல்ல. மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் நீக்கப்பட்டன. அது தவறான செயல். எதையும் ரகசியமாக அல்லாமல் வெளிப்படையாக நடந்துகொண்டிருந்தால், எந்தச் சந்தேகத்துக்கும் இடமில்லாமல் இருந்திருக்கும். அம்மா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ மட்டும் வெளியானது. இன்னும் ஐந்து வீடியோக்கள் வெளியே வரவில்லை. சசிகலா உறவினர்களிடம் அந்த வீடியோக்கள் இருக்கின்றன. ஆணையத்திடம் அவர்கள் அவற்றை ஒப்படைக்கவில்லை. அவற்றை ஆணையத்திடம் ஒப்படைப்பதுதான் நல்லது. ஸ்டாலினைப் பொறுத்தவரையில், அரசியலுக்காக அவர் இப்படியெல்லாம் பேசுகிறார்” என்றார் புகழேந்தி.
Also Read: `கட்டாயத் திருமணம்’, `கள்ளத் திருமணம்’... அ.தி.மு.க Vs தி.மு.க கூட்டணி குஸ்தி!
சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இதை ஒரு பிரச்னையாகக் கிளப்புவதன் மூலம் தி.மு.க-வுக்கு என்ன லாபம் என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் மணி முன்பாக வைத்தோம்.
``இதனால் தி.மு.க-வுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது. இந்த வாக்குறுதி, தி.மு.க-வுக்கு ஒரு வாக்கைக்கூட கொண்டுவந்து சேர்க்காது. பாரம்பர்யமான அ.தி.மு.க-வின் வாக்காளர்கள் ஒருவர்கூட தி.மு.க-வுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஜெயலலிதாவின் மரணம் நூறு சதவிகிதம் இயற்கையான மரணம் என்பது என் கருத்து. அதில் எந்த மர்மமும் கிடையாது. இதனால், ஒரு வாக்கு, இரண்டு வாக்கு கூடுதலாக வருமா என்ற எதிர்பார்ப்புடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசலாம். ஆனால், இதனால் ஒரு வாக்குகூட தி.மு.க-வுக்கு கிடைக்காது. மேலும், தி.மு.க ஆட்சிக்கு வருமானால், இந்த வாக்குறுதியை அப்படியே மறந்துவிடுவார்கள். இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்கள். இது அபத்தமான குற்றச்சாட்டு.
அப்போலோ மருத்துவர்கள் மட்டுமல்லாமல், எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து மூன்று மருத்துவர்களும், லண்டனிலிருந்து ஒரு மருத்துவரும் வந்து பார்த்தார்கள். ஒரு சதவிகிதம் தவறு இருக்கிறது என்றாலும் அதை அவர்கள் சொல்லியிருப்பார்கள். எனவே, அந்த மரணத்தில் எந்த மர்மமும் இருப்பதாக நான் கருதவில்லை. ஜெயலலிதாவின் இமேஜை காப்பாற்றுவதற்காக மேற்கொண்ட வாழ்க்கை முறைகள் சம்பந்தப்பட்ட தகவல்கள்தான் வெளியே வராமல் இருப்பதற்குக் காரணமே ஒழிய, அந்த மரணத்தில் மர்மம் இல்லை” என்றார் மணி.
source https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-says-that-dmk-will-enquire-the-suspicion-on-jayalalithaa-death
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக