2016-ம் ஆண்டு சாம்பியனாக விஸ்வரூபம் காட்டியபிறகு, ஒவ்வொரு ஆண்டும், எதிர்கொள்ளக் கடினமான எதிரணியாகவே இது மற்ற அணிகளுக்குத் திகழ்கிறது. அந்த ஆண்டுக்குப்பின் வந்த அத்தனை சீசனிலும், ப்ளே ஆஃபிற்கு முன்னேறி, மிக வலிமையான, நிலைப்புத்தன்மையுடைய அணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. எனினும், தங்களது இரண்டாவது சாம்பியன்ஷிப்பை விட்டு அவர்களை விலக்கி வைப்பது எது?!
பலவீனம் - 1: பேஸ்மென்ட் ஸ்டிராங், பில்டிங் வீக்!
சன்ரைசர்ஸைப் பொறுத்தவரை, டாப் ஆர்டர் அவர்களுக்கு டாப் கிளாஸ் ஆர்டராகவே இருந்து வருகிறது. அவர்களுக்கு மிகக்கவலை அளிக்கக்கூடிய ஓர் அம்சம், அவர்களது மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் இடத்திலுள்ள அனுபவமற்ற இந்திய வீரர்கள்தான். கடந்தாண்டு, கார்க், அபிஷேக் ஷர்மா, விஜய் சங்கர், அப்துல் சமத் ஆகிய இந்திய வீரர்கள், எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வார்னர், வில்லியம்சன் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய மூவரும் இணைந்து, அணியின் மொத்த ரன்களான 2,531 ரன்களில், 48 சதவிகிதம் ரன்களைச் சேர்த்திருந்தனர். இதேநேரத்தில், 409 ரன்களை மட்டுமே இந்த இந்திய நால்வரணி சேர்த்திருந்தது. இது கடந்த சீசனில், சன்ரைசர்ஸ் அடித்திருந்த ரன்களில் வெறும் 16 சதவிகிதம்தான். இதனால், எதிரணி, முதல் மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகளை எடுத்து விட்டாலே, அவர்களுக்கு, வெற்றி சுலபமாகச் சுவைக்கக் கூடியதாகி விடுகிறது.
பலவீனம் - 2: தரமான இந்திய ஸ்பின்னர் இல்லாதது!
கடந்த சீசனில், வெறும் 5.37 எக்கானமியுடன், 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அரபு மண்ணை ஆக்ரமித்தார், ரஷீத். அவருக்குத் தோள் கொடுக்க ஏற்கெனவே நபி இருக்கும் நிலையில், தற்போது, முஜிபுர் ரஹ்மானையும் மூன்றாவது ஆஃப்கான் வீரராக, 1.5 கோடிக்கு வாங்கி உள்ளது சன்ரைசர்ஸ். என்னதான் அயல்நாட்டு ஸ்பின்னர்கள் போதுமான ஆதரவளித்தாலும், தரமான ஒரு இந்திய ஸ்டார் ஸ்பின்னர் இல்லாதது, சன்ரைசர்ஸுக்கு ஒரு பின்னடைவே. குறிப்பாக, அவர்களது முதல் 5 போட்டிகள் சென்னையிலும், அடுத்த நான்கு போட்டிகள், டெல்லியிலும் நடக்கின்றன. இந்த இரண்டு மைதானங்களுமே சுழல்பந்துக்குச் சாதகமாக இருக்குமென்பதால், ரஷித்தோடு, நபி அல்லது முஜிபுர் ரஹ்மான் களமிறங்கும் சூழ்நிலை உருவாகும். இது அயல்நாட்டு பேட்ஸ்மேன் ஒருவருக்கான வாய்ப்பை இல்லாமல் செய்துவிடும்.
பலவீனம் - 3: வெளிநாட்டு வீரர்களுக்கான இடம்!
சென்ற ஐபிஎல்-ல், இருக்கும் நான்கு ஸ்லாட்டுகளை, எந்த வெளிநாட்டு வீரர்களைக் கொண்டு நிரப்புவது என்பது சர்ரைஸர்ஸ் சந்தித்த குழப்பங்களுள் ஒன்று. அரபு மைதானங்களில், கேப்டன் வார்னரும், சுழல்பந்து வீச்சாளர் ரஷித் கானும் தவிர்க்க முடியாத தேர்வுகளாக மாறிப்போக, மீதமிருந்த, இரண்டு ஸ்லாட்களை, எதிரணியின் பலம், பலவீனத்தை மனதில் நிறுத்தி, பேர்ஸ்டோ, வில்லியம்சன், ஹோல்டரைக் கொண்டு சுழற்சி முறையில் நிரப்பிச் சமாளித்தது. மும்பையின் பேட்டிங் பலத்தைக் கணக்கிலெடுத்து, மூன்று வெளிநாட்டு பேட்ஸ்மேன்களுடன் ரஷித்தைச் சேர்த்துக் களம்கண்டது சன்ரைசர்ஸ். ஆனால், அந்தப் போட்டியில், புவனேஷ்வரும் இல்லாத நிலையில், ரஷித் மற்றும் நடராஜன் தவிர்த்து அத்தனை வீரர்களும் ரன்களை வாரி வழங்க, மும்பை ரன்கள் சேர்க்கக் கடினமான அந்தப் பிட்சிலேயே 208-ஐ தொட்டது. சேஸிங்கில் கோட்டை விட்ட சன்ரைசர்ஸ், ஹோல்டரைச் சேர்த்திருக்கலாமோ எனக் குழம்பியது. அதேநேரத்தில், பஞ்சாப்புக்கு எதிரான இன்னொரு போட்டியில், இரண்டு வெளிநாட்டு பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கி, 126 ரன்களுக்கு அவர்களைச் சுருட்டினாலும், அந்த குறைந்த ரன்களைக்கூடச் சேர்க்க முடியாமல் தோல்விமுகம் கண்டபோது, வில்லியம்சனை உட்காரவைத்திருக்கக் கூடாதோ எனக் கவலைப்பட்டது. இப்படி, வெளிநாட்டு வீரர்களை நிரப்புவதில் குழப்பம் நிரம்பவே காணப்படுகிறது!
பலவீனம் - 4: பேட்டிங் ஆர்டர் குளறுபடிகள்!
ஓப்பனிங்கில் ஐந்து காம்பினேஷன்களை முயன்று பார்த்திருந்த சன்ரைசர்ஸ், மற்ற வீரர்களின் பேட்டிங் பொசிஷன்களில் எல்லாம், ஏதோ குலுக்குச்சீட்டில் தேர்ந்தெடுத்து அனுப்பியதைப்போல், வீரர்களை மாற்றிமாற்றி அனுப்பியது. ப்ளேயிங் லெவனில் உள்ள பதினோரு வீரர்களுமே பேடு கட்டி உட்கார வேண்டும் எனுமளவிற்கு, பேட்டிங் பொசிஷன்களை, கண்மூடித்தனமாக மாற்றிக்கொண்டே இருந்தனர். ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப மாற்றுவது பொதுவாய் எல்லா அணிகளும் செய்வதுதான் என்றாலும், அதை சன்ரைஸர்ஸ், விளையாடிய 16 போட்டிகளில், 10 போட்டிகளில் செய்தது. இது அவர்களிடம் குடியேறி இருந்த குழப்பத்தையே காட்டியது. இதன் விளைவாக, அனுபவமற்ற இந்திய வீரர்கள், எந்தப் பொசிஷனில் இறங்கி ஆடினாலும், சமாளிக்கும் திறனுடையவர்களாக இல்லாததால், இது அவர்களது விளையாட்டுத் திறனையும் மிகவும் பாதித்தது. இதுவும் சில போட்டிகளில் சன்ரைஸர்ஸ் தோல்வியைத் தழுவக் காரணமாக அமைந்தது.
பலவீனம் - 5: சிறந்த இந்திய ஆல்ரவுண்டர்கள் இல்லை!
சன்ரைசர்ஸில், பாண்டியா பிரதர்ஸ், ஜடேஜா போன்ற ஒரு நல்ல இந்திய ஆல்ரவுண்டர்கள் இல்லாததும் ஒரு முக்கிய குறைபாடாகவே இருந்து வருகிறது. கடந்த சீசனில், தொடர்ந்து ப்ளேயிங் லெவனில் இடம்பெற்று வந்த இந்திய ஆல் ரவுண்டர்கள், விஜய் சங்கர் மற்றும் அபிஷேக் ஷர்மா சிறப்பாக பங்காற்றவில்லை. எட்டு போட்டிகளில், 171 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த அபிஷேக், இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார். சர்வதேச அனுபவமிக்க விஜய் சங்கரோ, ஆடிய ஏழு போட்டிகளில், வெறும் 100 ஸ்ட்ரைக் ரேட்டோடு, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, 97 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். ஒரு நல்ல இந்திய ஆல்ரவுண்டர் கிடைக்கும்பட்சத்தில், அது வெளிநாட்டு வீரர்களை முழுவதுமாகச் சார்ந்திருக்கும் பளுவைக் கொஞ்சம் குறைக்கும்.
2021 சவால்கள்: குறைதீர்ப்பாரா கேதார்?!
மற்ற அணிகளுக்கெல்லாம் இருக்கும் குறைபாடுகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்றதாக இருக்கும். ஆனால், சன்ரைசர்ஸுக்கு இருக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் ஆணிவேராக இருப்பது, அவர்களது மிடில்ஆர்டர் பிரச்னை மட்டுமே. அதற்கான தீர்வாகத்தான் அவர்கள், இந்தவருட மினி ஆக்ஷனில், கேதார் ஜாதவை இரண்டு கோடி கொடுத்து வாங்கி இருக்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில், அட்டாக்கிங் பேட்ஸ்மேனாக அறியப்பட்ட கேதார் ஜாதவின் ஃபார்ம், கடந்த மூன்று ஆண்டுகளாக கவலைக்கிடமாக உள்ளது. தனது கிரிக்கெட் கரியரையே நிர்ணயிக்கும் ஐபிஎல்லாக அவர் இதை அணுகி ஆடி, ரன்களைக் குவித்தால் மட்டுமே, சன்ரைசர்ஸின் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு ஒரு விடிவு வரும். அப்படி கேதார் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும்கூட, மற்ற இந்திய பின்வரிசை வீரர்கள் விளையாடுவதைப் பொறுத்துத்தான் எல்லாமே அமையப் பெறும்.
ராய் - பேர்ஸ்டோ கூட்டணி இணையுமா?!
சொந்தக் காரணங்களுக்காக, ஆல்ரவுண்டர் மிட்சல் மார்ஷ், கடைசி நேரத்தில் விலக, அவருக்குப் பதிலாக, இங்கிலாந்தின் ஜேசன் ராயைக் கொண்டு வந்துள்ளது சன்ரைஸர்ஸ். ஏற்கெனவே வார்னருடன் களமிறங்க, பேர்ஸ்டோ, சாஹாவிற்கு இடையே போட்டாபோட்டி நிலவும் நிலையில், ராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஓப்பனிங் இடத்துக்கான போட்டியை அதிகரித்துள்ளது. கடந்த சீசனில், கொல்கத்தாவுக்கு எதிரான ஒரு போட்டியில், வார்னர் ஓப்பனிங்கில் பேர்ஸ்டோ - வில்லியம்சனை ஆடவைத்து, தான் நான்காவது வீரராக இறங்கி, அதிரடியாக 33 பந்துகளில் 47 ரன்களைக் குவித்தார். இந்திய - இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில், பேர்ஸ்டோவுடன் இணைந்து அசத்திய ராயின் தேர்வு, அப்படி ஒரு வாய்ப்பையும் வார்னருக்குக் கொடுத்துள்ளது. மிடில் ஆர்டரை வலுப்படுத்த, இந்தக் கூட்டணியை ஓப்பனிங் இறங்க வைத்துவிட்டு, வார்னர் பின்வரிசையில் இறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
துருப்புச் சீட்டு!
ஒருபுறம் மூன்று முறை ஆரஞ்சுக் கேப் வாங்கிய வார்னர் இருக்கிறார் என்றால், மறுபக்கம், இரண்டு முறை பர்பிள் கேப்பை வென்ற புவனேஷ்வர் இருக்கிறார். வார்னரின் சமீபத்திய ஃபார்ம் மிகப் பிரமாதமாக இல்லையெனினும், அவர் கடந்தகாலத்தில் செய்திருக்கும் ஐபிஎல் சம்பவங்கள், அவரை சன்ரைசர்ஸின் முக்கிய வீரராகவே வைத்திருக்கிறது. மறுபுறம், நக்குல் பால் ஸ்பெஷலிஸ்ட் புவனேஷ்வர், தான் ஃபார்முக்குத் திரும்பி விட்டதை நடந்து முடிந்த இந்திய இங்கிலாந்துப் போட்டிகள் மூலமாக நிரூபித்துள்ளார். எனவே இந்தக் கூட்டணி, அணியை வேறு நிலைக்கு எடுத்துப் போகும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
யார்க்கர் நடராஜன் - கேம் சேஞ்சர்!
கடந்த ஐபிஎல் சீசனில், தன்னுடைய யார்க்கர்கள் மூலமாக, உலகை தன்னைப் பற்றிப் பேச வைத்த நடராஜன், நடந்து முடிந்த டி20 தொடரில், தான் வீசிய கடைசி ஓவரின் மூலமாக, இந்தியாவுக்கு மிகச்சிறந்த வீரராக உருவாகி விட்டதை வெளிச்சம்போட்டுக் காட்டி இருந்தார். அதே உற்சாகத்துடன் இங்கே திரும்பி வரும் அவரிடமிருந்து, மேட்ச் வின்னிங் பர்ஃபாமென்ஸுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
வாய்ப்புப் பெறுவார்களா ஜெகதீஷ் சுசித், விராட் சிங்?!
நதீமுக்கான பேக்கப்பாக எடுக்கப்பட்டுள்ள ஜெகதீஷ் சுசித், க்ருணாலின் வருகைக்கு முன் மும்பைக்காக ஆடியவர். விராட் சிங், நடந்து முடிந்த சயத் முஸ்தாக் அலி தொடரில், 5 போட்டிகளில் 250 ரன்களைக் குவித்தவர். இவர்களுக்கு இம்முறை, ப்ளேயிங் லெவனில் வாய்ப்புக் கிடைக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. குறிப்பாக, சமத் அல்லது அபிஷேக்குக்குப் பதிலாக, டொமெஸ்டிக் கிரிக்கெட்டில், அதிரடி ஆட்டத்துக்குப் பேர்போன விராட் சிங்குக்கு, சில போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படலாம்.
பதினோரு பருத்தி வீரர்கள்!
பத்து பௌலர்கள், ஏழு பேட்ஸ்மேன்கள், ஐந்து ஆல் ரவுண்டர்கள், மூன்று விக்கெட் கீப்பர்கள் என வெற்றிக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் கொண்ட அணியாகவே சன்ரைசர்ஸ் இருக்கிறது. அணியின் ப்ளஸ்ஸும் இதுதான், மைனஸும் இதுதான். ஏனெனில், இதில், எங்கே, யாரை எந்த வகையில் வார்னர் பயன்படுத்தப்போகிறார் என்பதைப் பொறுத்தே, அணியின் வெற்றி வாய்ப்பு அமையும்.
உத்தேச பிளேயிங் லெவன்!
வார்னர், பேர்ஸ்டோ, மணீஷ் பாண்டே, வில்லியம்சன் , விஜய் சங்கர், விராட் சிங்/சமத், ரஷித் கான், நதீம், புவனேஷ்வர், சந்தீப் குமார், நடராஜன்
ஹைதராபாத்தின் மிடில் ஆர்டர் பிரச்னை தீர்க்கப்படும்பட்சத்தில், வார்னருக்கு வெற்றி வசப்படும். அவர் வந்த பிறகு எழுச்சியுற்ற சன்ரைசர்ஸ், இரண்டாவது முறையாக, கோப்பையைக் கையில் ஏந்தும் என எதிர்பார்க்கலாம்!
source https://sports.vikatan.com/ipl/ipl-2021-sunrisers-hyderabad-plus-and-minus-team-analysis
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக