மருத்துவப் படிப்புக்கு தகுதியிருந்தும் நீட் தேர்வால் மருத்துவ இடம் கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவை வைத்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டிருந்த வீடியோ ட்வீடுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது.
மாஃபா பாண்டியராஜன் பதிவிட்ட வீடியோவில் மாணவி அனிதா பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. பின்னணியில் ஒலித்த குரலில், ``வருசத்துக்கு 427 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டின் சரித்திரத்திலேயே கிடையாது. இந்த வாய்ப்பு ஜெயலலிதா அம்மாவோட ஆட்சி தந்திருக்கு. 17 பேரின் வாழ்க்கையை நாசமாக்கின தி.மு.க-வை மன்னிச்சிடாதீங்க. சூரியன் உதிக்கிறது, என்னை மாதிரி 17 பேருக்கு அஸ்தமனம் ஆகிடுச்சு. உங்கள் கையில் இருக்கிற விரல் மை எங்கள் வாழ்க்கை. மறந்துறாதீங்க. மன்னிச்சிடாதீங்க தி.மு.கவை ” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அனிதாவை வைத்து அரசியல் பேசுவதாக கடும் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து அனிதாவின் சகோதரர் மணிரத்னம் மாஃபா பாண்டியராஜனைக் கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் `` அனிதா நீட், அ.தி.மு.க-வை ஆதரிப்பது போல வீடியோ வெளியிட்டிருக்கிறீங்க. நீட் கொண்டு வந்தது தி.மு.க-னு சொல்றீங்க. ஜூலை 15, 2016 மாநிலங்களவையில் நீட் பத்தின வாக்கெடுப்பு நடக்கும்போது நீங்க எதிர்த்து வாக்களிச்சிருந்தா, நீட் வந்திருக்கவே வந்திருக்காது. நீங்க அப்போ வெளிநடப்பு செஞ்சீங்க. நீட் விலக்கு வாங்க பேசிட்டு இருக்கோம்னு சொல்லி ஏமாத்தி மாணவர்கள் முதுகில் குத்துனீங்க. தி.மு.க ஆட்சி 2011-ல் முடிஞ்சிடுச்சு. அதுக்கப்புறம் ஆட்சி பண்ணதெல்லாம் யாரு? அ.தி.மு.க. மாநில உரிமைகள அடமானம் வச்சிட்டு, இப்போ எல்லாத்துக்கும் காரணம் திமுக-னு சொல்றீங்க. நீட் எதிர்ப்பின் அடையாளமா இருக்குற அனிதாவ கொச்சப்படுத்தும் விதமா வீடியோ போடுறீங்க. இது எங்க குடும்பத்துக்கு மிகப் பெரிய மன வேதனைய உண்டு பண்ணுது. தயவு செஞ்சு அந்த வீடியோவ எடுத்துடுங்க." என்று அவர் பேசியிருநதார்.
பலத்த எதிர்ப்பையடுத்து மாஃபா பாண்டியராஜன் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/mafoi-pandiarajan-video-about-neet-anitha-stirs-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக