மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அங்கு ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றுவருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. அங்கு வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன.
2011-ம் ஆண்டு இடது முன்னணி அரசை அகற்றிவிட்டு முதல்வர் நாற்காலியில் முதன்முறையாக அமர்ந்த மம்தா பானர்ஜி, 2016 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றார். அங்கு நீண்டகாலம் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸையும், 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் பல்வேறு நெருக்கடிகள் மூலம் மம்தா பலவீனப்படுத்திவிட்டார். அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி இடத்தைப் பிடித்த பா.ஜ.க., இப்போது மம்தா ஆட்சியை அகற்றுவதற்கான அத்தனை வேலைகளையும் தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. அதேநேரத்தில், ஆட்சியைத் தக்கவைப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் போராட்டத்தை நடத்திவருகிறது.
மார்ச் 27-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 1-ம் தேதி இரண்டாம்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவின்போது 79.79 சதவிகிதம், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவின்போது 80.43 சதவிகிதம் என வாக்குகள் பதிவாகின. வாக்கு சதவிகிதம் அதிகமாக இருப்பதால், அது தங்கள் வெற்றியை உறுதிசெய்வதாக பா.ஜ.க தலைவர்கள் கூறிவருகிறார்கள்.
இரண்டாம்கட்ட வாக்குப்பதிவின்போது நந்திகிராம் உட்பட 30 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் அரசில் செல்வாக்குமிக்க அமைச்சராகவும், முதல்வர் மம்தா பானர்ஜியின் வலதுகரமாகவும் விளங்கிய சுவேந்து அதிகாரி சில மாதங்களுக்கு முன்பாக பா.ஜ.க-வுக்குத் தாவினார். அவர் நந்திகிராமில் செல்வாக்குமிக்க தலைவர். அவரை எதிர்த்துத்தான் முதல்வர் மம்தா போட்டியிடுகிறார். ஆகவே, பதற்றத்துக்குரிய தொகுதியாக அது மாறியுள்ளது.
நந்திகிராமிலுள்ள போயல் என்ற இடத்தில் பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சவாடிகளுக்குள் தங்கள் ஏஜென்ட்டுகளை அனுமதிக்கவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். உடனே அந்த இடத்துக்கு முதல்வர் மம்தா சென்றார். அங்கு திரண்டிருந்த பா.ஜ.க-வினர் மம்தாவுக்கு எதிராகக் கோஷமிட்டனர். அந்த இடத்திலிருந்தே, ஆளுநர் ஜக்தீப் தன்கரிடம் தொலைபேசியில் புகார் அளித்த மம்தா, ``வாக்காளர்கள் வாக்களிக்கவிடாமல் தடுக்கப்படுகிறார்கள்” என்று புகார் அளித்தார்.
வன்முறையும் பதற்றமுமாக இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்த அதேநாளில், பிற தொகுதிகளில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி என்றும், எனவே அவர் வேறு ஒரு தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்யப்போகிறார் என்றும் கிளப்பிவிட்டனர்.
உலுபெரியா தொகுதி வாக்காளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ``நந்திராமில் போட்டியிடும் நீங்கள் (மம்தா) வேறு ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்யப்போவதாக ஒரு செய்தி உலவுகிறது. அந்தச் செய்தி உண்மைதானா? நந்திராமில் உங்களுக்கு மக்கள் பதில் சொல்லிவிட்டார்கள். நீங்கள் வேறு எங்கு சென்றாலும் உங்களுக்கு பதிலளிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்” என்றார். நந்திகிராம் தவிர வேறு எந்த ஒரு தொகுதியிலும் மம்தா போட்டியிடவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெறும் என்று அமித் ஷா தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். இப்போது பிரதமர் மோடியும் அதைக் கூறியிருக்கிறார். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், ஜெய்நகரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய மோடி, ``சில வாரங்களுக்கு முன்பாக, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெறும் என்று மேற்கு வங்க மக்கள் கூறினார்கள். மக்களின் குரலுக்குக் கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்திருப்பது முதற்கட்டத் தேர்தலில் தெளிவாகிவிட்டது. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெறும். இரண்டாம்கட்ட வாக்குப்பதிவின்போது மக்கள் பெருமளவில் வாக்குச்சாவடிகளுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பா.ஜ.க மட்டுமே இருக்கிறது. வங்கத்தில் பா.ஜ.க ஆதரவு அலை வீசுகிறது” என்றார்.
முதற்கட்டமாக 60 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றுவிட்டதாக அமித் ஷா கூறியிருக்கிறார். ஆனால், எட்டுகட்டத் தேர்தல் முழுமையாக முடிந்து மே 2-ம் தேதிதான் வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சியைப் பிடிக்கும் ஆர்வத்தில் பா.ஜ.க தலைவர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்கள்.
பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் என ஒரு பெரும் படையே திரிணாமுல் காங்கிரஸைத் தோற்கடிப்பதற்கு வேலை செய்துகொண்டிருக்கிறது. ஆனால், ஒற்றை ஆளாக சக்கர நாற்காலியில் வலம்வருகிறார் மம்தா பானர்ஜி.
நந்திகிராமில் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு பேசிய மம்தா, ``வாக்காளர்களை அச்சுறுத்துவதற்காக உ.பி., பீகார் போன்ற வெளி மாநிலங்களிலிருந்து குண்டர்களை அழைத்துவந்திருக்கிறார்கள். இதுவரை 63 புகார்களை அளித்திருக்கிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நாங்கள் நீதிமன்றத்தை நாடவிருக்கிறோம். அமித் ஷாவின் உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது” என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
Also Read: ``அனிதா நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும்'' என ஸ்டாலின் அறிவித்தாரா... சீமான் சொன்னது உண்மையா?!
திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தால் பா.ஜ.க-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கலாம் என்று இடதுசாரிகளுக்கு சிலர் ஆலோசனை கூறினார்கள். அதை இடதுசாரிகள் ஏற்கவில்லை. மம்தாவுடன் கூட்டணி சேர்ந்தால் எளிதாக பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிடும் என்பது இடதுசாரிகளின் கருத்து. அதேநேரத்தில், மம்தாவை இடதுசாரிகள் எதிர்ப்பதால், அது பா.ஜ.க-வுக்கு சாதகமாக இருக்கும் என்ற கணிப்பும் சில தரப்பினரிடம் இருக்கிறது. ஆட்சியைப் பிடிப்போம் என்று பெரும் நம்பிக்கையுடன் பா.ஜ.க-வினர் இருந்தாலும், மம்தா பானர்ஜியிடமிருந்து அதிகாரத்தைப் பறிப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அங்கு ஆட்சியை மம்தா தக்கவைக்கலாம் அல்லது ஆட்சியை பா.ஜ.க பிடித்துவிடும். இதில் எது நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதுதான் கள யதார்த்தமாக இருக்கிறது.
source https://www.vikatan.com/news/politics/is-bjp-wave-in-west-bengal-assembly-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக