Ad

புதன், 7 ஏப்ரல், 2021

ஐந்தே மாதங்களில் கணவனை இழந்தப் பெண் அடுத்து என்ன செய்வாள்... நெட்ஃபிளிக்ஸ் ரிலீஸான PAGGLAIT எப்படி?

திருமணமான 5 மாதங்களுக்குள் கணவனை இழந்த இளம் பெண் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? அழுது அரற்றுவாள்; ஓலமிட்டு ஒப்பாரி வைப்பாள்; இனி எல்லாம் முடிந்தது என துக்க மனநிலையில் உழல்வாள்.

சந்தியா... எதிர்பாரா தருணத்தில் கணவனை இழந்த இளம் பெண். ஆனால், அவள் மேலே சொன்ன எதையும் செய்யவில்லை. கணவனின் இறப்பிற்கு இந்தச் சமூகம் எதிர்பார்ப்பது போல அழுதுவடியாமல் அவன் மரணம் குறித்த ஃபேஸ்புக் போஸ்ட்டிற்கு வந்திருக்கும் கமென்ட்களின் எண்ணிக்கை 235 என்கிறாள்.

பழைமைவாதத்தில் ஊறிப்போன குடும்பம், 5 மாதகாலம் உடன் வாழ்ந்திருந்தாலும் கணவனைப் பற்றி பெரிதாக எதுவும் அறியாத சந்தியா, குடும்பத்தின் பொருளாதார சுமையை எப்படிச் சமாளிக்க எனக் கலங்கி நிற்கும் மாமனார் மற்றும் மாமியார்; துக்க வீட்டிற்கு வந்த உறவினர்கள் பணத்தைப் பிரதானப்படுத்தி ஏற்படுத்தும் கலகங்கள்; காலமான கணவனின் ஆத்ம சாந்திக்காக 13 நாள்கள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டிய நிலை, இத்துடன் மறைந்த கணவனின் முன்னாள் காதலி பற்றி அறிய நேரிடும் சூழல் என மெலோடிராமாவாக நகரும் திரைக்கதையில் வரும் ஒரே டாப் கியர் சந்தியாவிற்கு அவளது கணவன் விட்டுச் சென்றிருக்கும் 50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீட்டுப் பணம்.

'பக்லைட்' (PAGGLAIT)

உறவுகள் ஒவ்வொருவருக்கும் அந்தப் பணமும் அது இருப்பதால் சந்தியாவும் வேண்டும் என்ற நிலை. பணத்தேவை கணவனின் சித்தப்பா மகனை மறுமணத்திற்கு ஏற்பாடு செய்வதுவரை கொண்டுவிடுகிறது. 13-ம் நாளின் முடிவில், தன்னிடமிருக்கும் பணத்திற்காகவே மறுமணத்திற்கான ஏற்பாடு என்பதை சந்தியா உணர்ந்தாளா, அல்லது திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாளா என எழும் கேள்விக்கு க்ளைமேக்ஸில் அவள் எடுக்கும் முடிவை அழகான திரைக்கதையாக எழுதி இயக்கியிருக்கிறார் உமேஷ் பிஸ்ட். நெட்ஃபிளிக்ஸ் ரிலீஸாக இந்த 'பக்லைட்' (PAGGLAIT) திரைப்படம் கடந்தவாரம் வெளியானது.

இளம் விதவை சந்தியாவாக 'டங்கல்' புகழ் சானியா மல்ஹோத்ரா! அறிமுகமாகும் காட்சியில் கணவனின் மரணத்தால் மனசிதைவுக்கு உள்ளாகி இருக்கிறாரோ என சந்தேகிக்கும்படியான நடிப்பு. அதிலும் உப்பு காரம் இல்லாத சாப்பாட்டிற்குத் தொட்டுக்கொள்ள தோழியைக் காரணமாகச் சொல்லி சிப்ஸ் கேட்கும் காட்சியிலும், பெப்ஸி வேண்டும் எனச் சொல்லுமிடத்திலும், வயிற்றுவலி என்று பொய் சொல்லி கடைக்குப் போய் பானிபூரி சாப்பிடுமிடத்திலும், “கணவனை மன்னித்து விட்டேன்... ஆனால் பசிக்குது” எனச் சொல்லி அழும் காட்சியிலும் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். கணவனின் முன்னாள் காதலியைப் பற்றி அறிய நேரும்போது ஏற்படும் கோபம், ஆற்றாமை, வெறுமை, ஏக்கம், பரிதவிப்பு என வெவ்வேறு பரிமாணங்களைத் தொட்டிருக்கிறது அவரின் நடிப்பு.

சானியாவிற்கு அடுத்தபடியாக கனத்த நடிப்பால் கவனமீர்ப்பது சானியாவின் மாமனார் மாமியாராக வரும் அசுதோஷ் ராணா - ஷீபா சட்டா.

'பக்லைட்' (PAGGLAIT)

“உங்கள் மருமகளுக்குத் துரோகம் செய்ய எனக்கு லஞ்சம் கொடுக்கப்பார்க்கறீங்களா?” என்ற இன்ஷூரன்ஸ் நிறுவன ஊழியரின் கேள்வியில் நிலைகுலைந்து பின் வீடு வந்து மனைவியிடம் பேசும்காட்சியில் அபாரமான நடிப்பு.

கணவனை இழந்த இளம் மனைவி, மூப்பினால் அனைத்தையும் மறந்து எல்லாரையும் மருமகளின் பெயரைச்சொல்லி விளிக்கும் பாட்டி, சூழல் தெரியாமல் ஷேக்ஸ்பியரின் வசனத்தைச் சொல்லி தன் மேதாவித்தனத்தை காட்டும் உறவுக்கார மாமா, மகனுக்கு ரெஸ்டாரன்ட் வைக்க தேவைப்படும் பணத்திற்காக மறுமணத்தை முன்னெடுக்கும் கணவனின் சித்தப்பா, பதின்மத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் சிறுவன் மற்றும் சிறுமி என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவ்வளவு யதார்த்தம். அண்ணியை விரும்பும் கொழுந்தன், கணவனின் முன்னாள் காதலி, உனக்கு திருஷ்டி கழிக்க வேண்டும் எனும் அம்மா, என்ன ஆனாலும் பணம் நம்ம குடும்பத்தை விட்டுப்போகக்கூடாது எனச் சொல்லும் குடும்பத்தின் பெரியவர், இஸ்லாமிய பெண் விருந்தாளிக்கு பிரத்யேகமாக வேறு கப்பில் ஸ்பெஷல் டீ கொடுத்து அவளை ஹோட்டலில் சாப்பிட வைக்கும் பழைமைவாத குடும்பம் என இப்படத்தில் நாம் பார்க்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் நிச்சயமாக நம் வாழ்வில் நாம் ஒரு முறையேனும் கடந்து வந்திருப்போம்.

திரைக்கதையில் நாயகி தடுமாறுமிடங்களில் 'குயின்' பட கங்கனா நினைவிற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. பழைமைவாதத்தைத் தூக்கிச் சுமக்கும் குடும்ப அமைப்புகளின் 'சுத்த பத்தங்களை' நயமாக நையாண்டி செய்யும்படியாக டிரை ஹியூமரை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால் பல இடங்களில் டிரை ஹியூமர் வெகு டிரையாக இருப்பதே படத்தின் பின்னடைவு. கூடவே சயானி குப்தா - சானியா மல்ஹோத்ராவிற்கு இடையிலான பல காட்சிகளும், ஜவ்வாக இழுக்கப்பட்டிருக்கும் இரண்டாம் பாதியும், திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்துகின்றன.

மனைவியை இழந்தவர்கள் மற்றும் விவாகரத்தானவர்களுக்கான வெப்சைட்டில் சந்தியாவிற்கான துணையைத் தேடலாமா என்கிறார் உறவுக்கார மாமா. ஒரு பெண்ணின் வாழ்க்கை குறித்த முடிவுகளை குடும்பமும் குறிப்பாக அக்குடும்பத்திலுள்ள ஆண்களும் மட்டுமே எடுக்கிறார்கள் என்பதை பல காட்சிகளில் பதிவு செய்கிறது இத்திரைப்படம்.

'பக்லைட்' (PAGGLAIT)

தன் படிப்பு, பதவி, சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொந்த வீடு என எல்லாவற்றிலும் தனக்கான தனி அடையாளத்துடன் இருக்கும் அனன்யாவிற்கே (சயானி குப்தா) திருமணம் என வரும்போது தனக்குப் பிடித்தவனை தேர்வு செய்ய இயலாமல் போகும் சூழல்தான் இன்றும் இங்கு நிலவுகிறது என்ற நிதர்சனத்தை அவரின் பாத்திரத்தின் மூலம் நிறுவி இருக்கிறார் இயக்குநர்.

சிறுவயதில் தான் என்ன விளையாட வேண்டும் என்பது தொடங்கி, தன் திருமணம் குறித்த முடிவுகள், பொருளாதார ரீதியில் பெற்றோரையும் பிறரையும் சார்ந்திருந்தல் என தனது இன்றைய நிலைக்குக் காரணம் இவை அனைத்துமே என்று உணரும் சந்தியா க்ளைமேக்ஸில் எடுக்கும் முடிவு அருமை. ஆனாலும், பணி தொடர்பான எவ்வித முன் அனுபவமும் இல்லாத சந்தியா எப்படி பூஜ்ஜியத்தில் இருந்து தன் வாழ்க்கையைத் தொடங்க முடிவெடுத்தாள், ''மகனை இழந்து மறுகும் மாமனாரை மகனின் ஸ்தானத்திலிருந்து கவனமாகப் பார்த்துக் கொள்வேன்” என்பவள், தனது இரண்டு தங்கைகளைக் கரை சேர்க்கும் நிலையில் இல்லாத தன் பெற்றோரைப் பற்றி நினைத்தே பார்க்கவில்லையா என்கிற கேள்விகள் எழுகின்றன.

Also Read: யோகி பாபுவின் `மண்டேலா'... இந்தப் படத்தை ஏன் கொண்டாடவேண்டும்?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

இருமனம் இணையாத திருமணம் என்பது ஐந்து மாதங்கள் அல்ல எத்தனை மாதங்கள் ஆனாலும் ஒரு தம்பதியை ஒன்றிணைக்காது என்பதை தொட்டு செல்கிறது திரைக்கதை. கூடவே மரண வீட்டில் இருக்கும் மனிதர்களின் உணர்வுகளை மிக நெருக்கமாக காட்சிப்படுத்திய படமாகவும் இது உள்ளது.

ரஃபி மஹ்மூதின் ஒளிப்பதிவு சாந்தி குன்ச் எனும் பூர்வீக வீட்டின் இடுக்குகளையும், கைசர்பாக்கின் தெருக்களையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

'பக்லைட்' (PAGGLAIT)

முதன் முறையாக இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் அரிஜித் சிங்கின் பின்னணி இசை அங்கங்கே ஈர்க்குமளவிற்கு பாடல்கள் ஈர்க்கவில்லை.

ஏன் எதற்கு போன்ற கேள்விகளை கேட்காமல் வீட்டிலுள்ளவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்றார்போல் தங்களின் வாழ்க்கையை வாழும் பெண்களும், குடும்பத்தில் இருக்கும் பெண்கள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் அவர்களைக் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாக எடுக்கும் ஆண்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்!



source https://cinema.vikatan.com/bollywood/sanya-malhotra-starrer-netflix-movie-pagglait-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக