2020 - 21 கேரளா பிரீமியர் லீக் சீசனை வென்று அசத்தியிருக்கிறது கோகுலம் கேரளா எஃப்.சி. இறுதிப் போட்டியில் கேரளா எலக்ட்ரிசிட்டி போர்ட் அணியை 2-1 என வென்று இரண்டாவது முறையாக பட்டம் வென்றிருக்கிறது அந்த அணி. தமிழகத்தைச் சேர்ந்த விங்கர் கணேஷ் அடித்த வின்னிங் கோல்தான் அந்த அணியை சாம்பியனாக்கியது!
தமிழத்தில் கால்பந்து என்பது மிகவும் கவலையான நிலையில் இருக்கிறது. தமிழ்நாடு கால்பந்து சங்கம், சென்னை கால்பந்து சங்கம் இரண்டுக்குமான பிரச்னையின் காரணமாக, பெருமைவாய்ந்த 'சென்னை லீக்' கடந்த சில ஆண்டுகளாக நடக்காமல் இருக்கிறது. அதனால், பல்வேறு கால்பந்து வீரர்களின் கரியர் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. ஆனால், கேரளாவில் நிலமை அப்படியில்லை.
இந்தியாவுக்கு கிரிக்கெட்தான் என்று யாரேனும் சொன்னால், ''நாங்கள் பிரிந்து போய் தென் அமெரிக்காவுடன் சேர்ந்து கொள்கிறோம்'' என்பார்கள் கேரளவாசிகள். கால்பந்து மீது அங்கு அப்படியொரு காதல். அதனால்தான், தமிழ்நாடு பிரீமியர் லீக் என்று நம்மூரில் கிரிக்கெட் லீக் நடப்பதுபோல், கேரளா பிரீமியர் லீக் என ஒரு மாநில அளவிலான கால்பந்து தொடரை 2013-ம் ஆண்டில் இருந்து நடத்துகிறார்கள்.
சென்னை லீக் இல்லாத நிலையில், சென்னை சிட்டி எஃப்.சி போல் ஒருவகையில் கோகுலம் கேரளாவும் தமிழ்நாடு கால்பந்து வீரர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறது. இந்த ஐ-லீக் சீசனில்கூட தமிழக வீரர் மாயக்கண்ணன் கோகுலம் கேரளாவோடு சாம்பியன் பட்டம் வென்றார். இந்த கேரளா பிரீமியர் லீக் தொடரில் இன்னொரு தமிழக வீரர் கணேஷ் கோகுலம் கேரளாவோடு சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
கணேஷ், இந்திய கால்பந்து ஜாம்பவான் ராமன் விஜயனின் நோபல் அகாடெமியில் இருந்து வந்தவர். காரைக்குடி மாவட்டம் பள்ளத்தூரைச் சேர்ந்த இவர் இரண்டு விங்கிலும் ஆடக்கூடியவர். போட்டி நேர முடிவில் இரண்டு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்க, கூடுதல் நேரத்தில் கோலடித்து தன் அணியை வெற்றி பெறவைத்தார் கணேஷ். ஶ்ரீனிவாசன் பாண்டியன், மாயக்கண்ணன், சிவசக்தி என ராமன் விஜயன் பட்டறையில் இருந்த வந்த வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்திய கால்பந்து வட்டத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அடுத்து கணேஷும் மிகப்பெரிய உயரம் தொடுவார் என்று எதிர்பார்க்கலாம்!
source https://sports.vikatan.com/football/gokulam-kerala-won-the-2020-21-kerala-premier-league
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக