Ad

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

டீ குடிங்க சார் வாழ்க்கை நல்லாருக்கும்...Chadö எனும் தேநீர்! - புத்தம் புது காலை - 6 #6AMClub

"டீ குடிச்சா, நிஜமாவே டென்ஷன் குறையுதே... எப்படி?" என்று கேட்கும் டீ ப்ரியர்களுக்கு, "ஆம்... உங்களது ஒரு கப் டீயில் உள்ள மிதமான கேஃபைன், நீங்கள் பருகிய பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்குள் இரத்த நாளங்கள் வழியாக மூளையை அடைந்து, மூளையின் உற்சாக நியூரோ டிரான்ஸ்மிட்டர்களான டோப்பமைன், செரட்டோனின் ஆகியவற்றை ஊக்கப்படுத்தி, உங்களது மன அழுத்தத்தையும், மனச்சோர்வையும் போக்கி, புத்துணர்ச்சியைத் தருகிறது" என்கிறது அறிவியல்.

உண்மையில் எத்தனையோ சச்சரவுகள் ஒரு தேநீர் கோப்பையில் முடிந்துவிடுகின்றன. எத்தனையோ நட்புகள் ஒரு தேநீர் கோப்பையில் தொடங்கியுள்ளன.

நமது இல்லத்தில், அலுவலகத்தில்,

தெருமுனைகளில், பிரயாணங்களில் என நம் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கும் இந்தத் தேநீர், ஜப்பானியர்களுக்கு ஒரு மரபு என்கிறது Chadö எனும் தேநீர் தியானம்.

ஐசாய் என்ற ஜென் துறவி, சீனாவிலிருந்து கொண்டுவந்து அறிமுகப்படுத்தி, ஜென்துறவிகள் வழியாக மக்களுக்கு வந்ததாலோ என்னவோ, ஜப்பானியர்கள் தேநீரை தங்கள் ஆன்மாவுடன் ஒப்பிட்டு, தேநீர்த் தயாரிப்பையும் ஒரு தியானமாகவே மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலும் இந்த தியானத்தை அன்றாடம் மேற்கொள்வதுடன், Tea Ceremony என ஒரு விழாவாக இவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜப்பான் Tea Ceremony

அவசரமாக தேநீர் தயாரிப்பது, குடிப்பது என்பது ஜப்பானியர் வாழ்விலேயே கிடையாது. அவர்கள் தங்களது அதிகாலைத் தேநீரை தயாரிக்கும்போதே அவர்களது தியானமும் துவங்கிவிடுகிறது. பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அது கொதிக்கும்வரை காத்திருந்து, தண்ணீர் கொதிக்கும் லேசான வெப்பக்காற்றை உள்ளேயும், வெளியேயும் ஆழமாக சுவாசித்து, அதற்குப்பின் டீ இலைகள் அல்லது தூளை கொதிநீரில் போட்டு, அந்த இலைகள் மெதுவாக நீரில் கரைந்து, பொன்னிறமாக மாறுவதை ரசித்து, அதில் வரும் நறுமணத்தை நுகர்ந்தபடி வடிகட்டிய தேநீரை பிடித்தமான ஒரு கோப்பையில் ஊற்றி, பிடித்த இடத்தில் அமர்ந்து, இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி கூறி, இளஞ்சூட்டுடன் இருக்கும் தேநீரின் ஒவ்வொரு துளியையும் அதன் நிறம், மணம் மற்றும் சுவையை உணர்ந்து ரசித்து, ருசித்துப் பருகுவதைத்தான் தேநீர் தியானம் என்கின்றனர் ஜப்பானியர்கள்.

உண்மையில் தேநீர் அருந்துவதைக்கூட அந்த கணத்தில் உணர்ந்து செய்வதுதான் தேநீர் தியானம். தேவைக்கு தகுந்தாற்போல பத்து நிமிடங்களில் தேநீர் தியானத்தை முடித்துக் கொள்ளலாம் அல்லது நீண்ட நேரமும் மேற்கொள்ளலாம்.

தேநீர்

இந்த தேநீர் தியானம் அதிகாலையை அமைதியாகத் தொடங்க உதவுகிறது எனும் ஜப்பானியர்கள், தொடர்ச்சியான இப்பயிற்சி நன்றியுணர்வு, நம்பிக்கை, தெளிவு ஆகியவற்றை அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பரபரப்பை வெகுவாக குறைக்கிறது என்கின்றனர். அத்துடன் ஒரு மனிதனுக்குள் போதிய தேநீர் இல்லையென்றால், அது அவனது ஆரோக்கியத்தையும், நேர்மையையும் பாதிக்கும் என்றும் இவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

உண்மையில் இந்த ச்சாடோ என்ற தேநீர் தியானத்தின் வாயிலாக வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் உணர்ந்து, ஒவ்வொரு செயலையும் ஆழமாக ரசித்து, ஒவ்வொரு நிகழ்வையும் அனுபவித்து, முழுமையானதொரு வாழ்க்கையை வாழுங்கள் என்று நமக்குக் கற்றுத் தருகின்றனர் ஜப்பானியர்கள்.

இன்றுமுதல் நாமும் நமது முதல் கோப்பைத் தேநீரை இப்படி ஒரு தியானத்துடன் தொடங்கலாமா?!



source https://www.vikatan.com/food/miscellaneous/interesting-theories-behind-japanese-tea-ceremony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக