Ad

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

புதுக்கோட்டை: முதலில் சென்டிமென்ட்; இப்போ அதிரடி அறிவிப்புகள்! - அமைச்சரை விமர்சிக்கும் தி.மு.க

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை 6 சட்டமன்றத் தொகுதிகளில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத தொகுதியாகப் பார்க்கப்படுவது விராலிமலை தொகுதி. அ.தி.மு.க சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 3வது முறையாக இங்கு போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில், கடந்த முறை விஜயபாஸ்கருக்கு கடும் நெருக்கடி கொடுத்த தென்னலூர் பழனியப்பனே மீண்டும் களம் கண்டிருக்கிறார். ``நான் நிற்கும் கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். இரண்டு முறை தோற்றுவிட்டேன், என் வீட்டையும், பெட்ரோல் பங்கையும் தவிர என்னிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை, எதை இழந்தாலும் உங்களை இழக்க மாட்டேன்" என்று கண்ணீர் மல்க பழனியப்பன் வாக்கு சேகரிக்க, அதுவரையிலும் 10 ஆண்டுகளாகத் தான் செயல்படுத்திய திட்டங்களை மட்டும் கூறி மக்களிடம் வாக்கு சேகரித்த விஜயபாஸ்கரோ, "கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்திருக்கிறேன்.

விஜயபாஸ்கர்

எனக்கும் பி.பி இருக்கு, சுகர் இருக்கு, எனக்கும் உடம்புல கோளாறு இருக்கு, எனக்கும் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கு. உங்களுக்காக கண்ணீர் சிந்துபவன் விஜயபாஸ்கர் அல்ல, மாறாக வியர்வையையும் ரத்தத்தையும் சிந்துபவன் விஜயபாஸ்கர். ஏசுநாதர் சிலுவை சுமந்ததுபோல விராலிமலையை நான் சுமக்கிறேன்” என்று சென்டிமென்ட்டாகப் பேசி வாக்குச் சேகரிக்க, இருவரின் சென்டிமென்ட் பேச்சுகளால் கரைந்துபோயிருக்கின்றனர் தொகுதி மக்கள். இது ஒருபுறம் இருக்க, தமிழகம் முழுவதும் பிரதான கட்சிகள் வாக்குறுதிகள் கொடுப்பதுபோல், ஐந்து வாக்குறுதிகளை அள்ளித் தெளித்திருக்கும் விஜயபாஸ்கர், ``என்னைத் தேர்ந்தெடுத்தால் அனைத்தையும் நிறைவேற்றுவேன்’’ என்று பேசிவருகிறார்.

இங்கு காளைகளுக்கான பயிற்சி, வீரர்களுக்கான பயிற்சி, வீரர்களுக்கான இன்ஷூரன்ஸ், வீரர்களுக்கு ஏதேனும் ஒரு சிறு காயம், பெரும் ஆபத்து என்றாலும் என்னுடைய சொந்தச் செலவில் அதைச் செய்து கொடுப்பேன். ஒரு வருடத்துக்கு விராலிமலையைச் சேர்ந்த 1,000 ஏழை, எளிய மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க ஆசைப்படும் பட்சத்தில், அவங்க எந்த காலேஜ்ல எந்த படிப்பு படிக்க வேண்டும் என்றாலும் இலவசமாகப் படிக்க வைப்பேன். ஜூன் மாதத்தில் படித்த 10,000 பேருக்கு அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் நல்ல தகுதியான சம்பளத்துடன் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவேன்.

இது என்னுடைய கடமை. ஆவூர், அன்னவாசல், குளத்தூர் பகுதிகளில் மூன்று தொழிற்பேட்டைகளை உருவாக்கி 15,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்வேன். உங்கள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் மரக்கன்று தேடிவரும், அந்த மரக்கன்றைப் பாதுகாக்க இரும்புவேலியும் தேடிவரும். சிறப்பாக, முறையாகப் பராமரித்து வளர்த்தால், என்னுடைய சார்பில் உங்கள் வீடு தேடி வரும் பரிசு” என்ற ஐந்து வாக்குறுதிகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.

பழனியப்பன்

இந்த வாக்குறுதிகளையெல்லாம் சமூக வலைதளங்களில் உலாவவிட, ``கடந்த 10ஆண்டுகளாக இதையெல்லாம் நிறைவேற்றியிருக்கலாமே அமைச்சரே...’’ என்று பலரும் விமர்சித்துவருகின்றனர்.

இதற்கிடையே இது பற்றிப் பேசியுள்ள தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், ``விராலிமலையில் காலம் காலமாக ஊர்க்காரர்கள் நடத்திவந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைத்தான் தான் நடத்துவதாகவே மாற்றிவிட்டார். 1,000 பேருக்கு இலவசக் கல்வி கொடுப்பதாக அறிவித்திருக்கும் அமைச்சர், அவரது சொந்தக் கல்வி நிறுவனங்களில் ஒருவருக்குக்கூட இலவசக் கல்வி கொடுக்கவில்லையே... கடந்த 10 ஆண்டுக்காலத்தில் விராலிமலையில் ஏன் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவில்லை? இந்த திடீர் அறிவிப்புகளெல்லாம் ஏமாற்று வேலை” என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். விராலிமலையில், சென்டிமென்ட் பிரசாரம், அதிரடி அறிவிப்புகள் எனத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/politics/dmk-candidate-slams-vijayabaskar-on-promises-given

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக