"அ.ம.மு.க., தே.மு.தி.க இரண்டு கட்சிகளும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் துரோகத்தால் அகற்றப்பட்ட கட்சிகள். தற்போது இரு கட்சியினரும் மக்களுக்காகச் சேவை செய்யக் களத்தில் இறங்கியுள்ளோம். பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கிவிடலாம் என்கிற மனநிலையில் சிலர் தேர்தலைச் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும’’ என்று அ.தி.மு.க., தி.மு.க-வைக் கடுமையாக விமர்சனம் செய்தார் விஜய பிரபாகரன்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் மனோகரனை ஆதரித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தாராநல்லூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், ``தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவை, அதற்காக எங்கள் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
அ.ம.மு.க - தே.மு.தி.க தொண்டர்கள் ஒற்றுமையாக இருப்பதைப் பார்க்கையில் 2011-ல் அ.தி.மு.க- தே.மு.தி.க கூட்டணிவைத்து வெற்றி பெற்றதைப் போன்று, தற்போதும் இந்தக் கூட்டணி நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் அ.ம.மு.க-வில் இருக்கிறார்கள்.
பணத்தைக் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க-வினர் தேர்தல் களத்தைச் சந்தித்துவருகின்றனர். ஆனால், மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வாக்குக்குச் சொற்ப ரூபாயைக் கொடுத்துவிட்டு உங்களை வாழ்நாள் முழுக்க லாக்டௌனில் தள்ளிவிடுவார்கள்.
இதே போன்றதான், ஒவ்வோர் இலவசப் பொருளின் பின்னாலும் கோடிக்கணக்கில் ஊழல் நிறைந்திருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள், மாற்றுத் துணிக்கே வழியில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் உங்களிடம் வாஷிங் மெஷின் கேட்டார்களா? அந்த மெஷினைக் கொடுத்துவிட்டால் மாதா மாதம் யார் மின் கட்டணத்தைக் கட்டுவது? பணத்தையும், இலவசப் பொருள்களையும் மட்டுமே எதிர்பார்த்தால், கடவுளே வந்தாலும் மக்களைக் காப்பாற்ற முடியாது. எனவே, இவற்றுக்கு மாற்றாக மக்களுக்குச் சேவையாற்றுகிற எங்களை ஆதரியுங்கள். கட்சியின் தலைவர் விஜயகாந்த், கடந்த 40 ஆண்டுகளாக மக்களுக்காகவே உழைத்துக்கொண்டிருக்கிறார்.
அ.ம.மு.க மற்றும் தே.மு.தி.க இரண்டு கட்சிகளும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் துரோகத்தால் அகற்றப்பட்ட கட்சிகள். தற்போது இரண்டு கட்சியினரும் இணைந்து மக்களுக்காகக் குரல் கொடுக்க வந்திருக்கிறோம். தற்போது இலவசம் என்று கூறுபவர்கள் புராண காலத்தில் அந்த இலவசங்களை வழங்கவில்லை, அப்போது மக்கள் தேவைப்படவில்லை. அதனால் கண்டுகொள்ளவில்லை, இப்போது ஓட்டுக்காக இலவசம் என்று அறிவித்து விலைக்கு வாங்க, குருட்டு நம்பிக்கையில் இரண்டு கட்சியினரும் பார்க்கிறார்கள்.
டி.டி.வி.தினகரனும், விஜயகாந்த்தும் பணத்தைச் சம்பாதிக்கவில்லை, மக்கள் மனத்தைச் சம்பாதித்ததால்தான் இன்று இருவரும் மக்கள் மனதை நம்பி கூட்டணி அமைத்துள்ளனர். எனது அப்பாவின் கனவான உங்கள் அனைவரையும் தங்கத்தட்டில் வைத்துத் தாலாட்ட வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற நான் வந்திருக்கிறேன்... அதற்காகவே சாதி, மத, மொழி, இனத்துக்கு அப்பாற்பட்டு இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம். இந்தத் தொகுதிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மனோகரன் அவர்கள் நிறைவேற்றுவார். குக்கர் உங்களது வயிற்றை நிரப்பும். முரசு உங்கள் மனதை நிரப்பும்” என்றார்.
source https://www.vikatan.com/news/politics/we-are-both-on-the-field-due-to-eps-ops-betrayal-vijayakanths-son-in-trichy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக