Ad

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

கரூர்: `போலி ஆவணம்;எம்.ஆர்.விஜயபாஸ்கரை தகுதி நீக்கம் செய்ய மனு!' - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

கரூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, ``தி.மு.க ஆட்சிக்கு வந்து, தளபதி ஸ்டாலின் 11 மணிக்கு கையெழுத்து போட்டவுடன், 11.05-க்கு மாட்டு வண்டி உரிமையாளர்கள், யாரையும் கேட்காமல் ஆற்றுக்குள் வண்டிகளை இறக்கி, மணலை அள்ளலாம். யாரும் உங்களை தடுக்கமாட்டார்கள். அப்படி தடுக்கும் அதிகாரிகள் யாரும் இங்கே இருக்கமாட்டார்கள்" என்று பேசி, சர்ச்சைக்கு வித்திட்டார். பலரும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். இதன் காரணமாக, செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சமூக ஆர்வலர்கள்

இந்த நிலையில், கரூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``மாட்டுவண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுவிட்டது" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அனுமதி கடிதம் என்று ஓர் ஆவணத்தையும் காட்டினார். இதற்கு எதிராக, சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள். இதுசம்பந்தமாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் மனு அளிக்க வந்திருந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

Also Read: கரூர்: 'மணல்' பேச்சு; செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு!

அப்போது, பேசிய முகிலன்,

``கடந்த மார்ச் 31 - ம் தேதி கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி' என்ற செய்தியை செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

அப்போது, அவர் ஒரு பொய்யான ஆவணத்தை செய்தியாளர்களிடம் வழங்கி, 'மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கிவிட்டது' என தெரிவித்துள்ளார். இந்த ஆவணத்தில் ஆணை வெளியிடப்பட்ட தேதியும், எண்னும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல, இந்த ஆணையை வழங்கிய அதிகாரியின் கையொப்பம் அதில் இல்லை. கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் கொள்ளை நடப்பது குறித்து, அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை 100 புகார்கள் அளிக்கப்பட்டால், ஒரு மனு மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்க வரும் போது, '1,500 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுகிறது' என புகார் அளித்தோம்.

சமூக ஆர்வலர்களுடம் முகிலன்

ஆனால், உரிய ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டும், நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல, நேற்று கூட அமராவதி ஆற்றங்கரையில் விஸ்வநாதபுரி எனுமிடத்தில் அ.தி.மு.கவினர் திருட்டுத்தனமாக மணல் வருவதாக புகார் அளித்தோம். மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளுவது குறித்து பேசிய தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சரே இப்படி போலியான ஆவணத்தைக் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளார் என்பதால், அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/controversy/karur-social-activists-speech-against-mrvijayabaskar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக