தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள சுப்புராஜ் நகரில் அமைந்துள்ளது ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகம். அரசு கொடுத்த, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குச் செல்லாமல், தன்னுடைய சொந்த செலவில் அலுவலகம் அமைத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். கடந்த இரண்டு முறை போடி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி.ஸ்., தற்போது மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க-வின் தங்க தமிழ்ச்செல்வன் களம் இறக்கப்படடிருக்கிறார்.
இந்நிலையில், சுப்புராஜ் நகரில் உள்ள ஓ.பி.ஸ் அலுவலகம் அருகே அமைந்துள்ள தேனி மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி என்பவரது வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மதுரை மற்றும் தேனி மாவட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் 10 பேர், காலை சுமார் 6.30 மணிக்கு குறிஞ்சிமணி வீட்டில் சோதனை செய்தனர். ஆவணங்கள், பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை.
இது தொடர்பாக குறிஞ்சிமணி கூறும் போது,``தேர்தல் வேலைகளில் நான் தீவிரமாக இருக்கிறேன். தி.மு.க-வின் கைக்கூலிகள் சிலர், வருமானவரித்துறை அதிகாரிகளிடம், என் வீட்டில் பணம் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் என் வீட்டிற்கு அதிகாரிகள் வந்து சோதனை செய்தனர். என்னுடைய செலவிற்கு வைத்திருந்த ரூ25 ஆயிரத்து 400 மட்டுமே வீட்டில் இருந்தது. அதனை என்னிடமே கொடுத்துவிட்டுச் சென்றனர்.” என்றார்.
இச்சம்பவம் ஒருபுறம் என்றால், போடி தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டியில், அ.தி.மு.க சார்பில் தேர்தல் பணி அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு, பா.ஜ.க மாவட்டச் செயலாளர் மனோகரன் தலைமையிலான கட்சியினரும், பழனிசெட்டிபட்டி பகுதி அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் பணி தொடர்பாக, கட்சியினருடன் வந்த பா.ஜ.க மாவட்டச் செயலாளர் மனோகரனை மறித்த, பழனிசெட்டிபட்டி முன்னாள் பேரூர் கழகச் செயலாளார் முருகேசன், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை, இரு கட்சியினரும் சமாதானம் செய்துள்ளனர். அப்போது, தான் மறைத்து எடுத்துவந்திருந்த அரிவாளை எடுத்து, மனோகரனை வெட்ட முயன்றுள்ளார் முருகேசன். அங்கிருந்தவர்கள், முருகேசனை தடுத்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தை பா.ஜ.க-வினர் வீடியோ பதிவு செய்ய, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மனோகரன் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலைமுயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ், முருகேசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும், பழனிசெட்டிபட்டியில், ஒரே பகுதியில் குடியிருப்பதாகவும், இருவருக்குள்ளும், நிலம் தொடர்பான பிரச்னை இருந்துவந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பா.ஜ.க நிர்வாகியை, அ.தி.மு.க பிரமுகர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம், தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
source https://www.vikatan.com/news/politics/various-incidents-have-taken-place-around-aiadmk-figures-in-theni-bodinayakkanur
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக