Ad

சனி, 24 ஏப்ரல், 2021

அதிகாலையில் இயங்கும் லேப்டாப்; வாக்குகள் மாற்றப்பட்டதா என சந்தேகம் - புகார் மனு அளித்த நேரு

``வாக்குப்பெட்டி இருக்கும் மேல் தளத்தில் அதிகாலை 3 மணியளவில் லேப்டாப்பை வைத்து வேலைசெய்கிறார்கள். வாக்குகளை மாற்றியிருப்பார்களா என்கிற சந்தேகம் எழுகிறது. எங்களது சந்தேகத்தைத் தீர்த்து வைய்யுங்கள்" என்று தி.மு.க முதன்மை செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என் நேரு அதிகாரிகளிடம் மனுகொடுத்திருக்கும் சம்பவம் தொண்டர்கள் மத்தியில் சிறு சலசலப்புகளை உண்டாக்கியுள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகள் உள்ளன. இதில், திருச்சி மேற்கு மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்சி சுப்பிரமணிய புரம் பகுதியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, முழு நேரத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அந்தக் கட்டிடங்களுக்கு வெளியே வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் போலீஸார் 24 மணி நேரமும் நேரடிக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன் மேல் தளத்தில் வாக்கு எண்ணிக்கை அறை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேல் தளத்தில் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு வீரர்கள் தங்கியிருக்கின்றனர். கடந்த 20-ம் தேதி லேப்டாப் மற்றும் செல்போனை அவர்கள் பயன்படுத்துவதால் அவர்களை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டதது.

தி.மு.க நிர்வாகிகளுடன் கே.என் நேரு

பின்பு அதிகாரிகளும் அவர்களை வேறு இருப்பிடத்திற்கு மாற்றுவதாகவும் கூறினார்கள். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் அங்கேயே தங்கியிருப்பது தான் சந்தேகத்தை அதிகரித்திருப்பதாகவும், தாங்கள் உடனடியாக இதில் தலையிட்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் வாக்குபெட்டியின் பாதுகாப்பை உறுதி செய்து தருமாறும் திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதனிடம் தி.மு.க வேட்பாளர் கே.என்.நேரு நேரில் புகார் மனு அளித்தார்.

பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த தி.மு.க வேட்பாளர் கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு ``இன்று காலை வாக்கு எண்ணும் மையத்திற்கு மடிக்கணினியை எடுத்துச் செல்வதற்கு முகவர்கள் அனுமதி கொடுக்கவில்லை.

அதிகாரியிடம் முறையிட்ட நேரு

அனுமதியில்லாமல் காவலர்கள் எப்படி மடிக்கணினியை எடுத்துச் செல்ல அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் இரவு மூன்று மணியளவில் வாக்குப்பெட்டிகள் இருக்கும் மேற்தளத்தில் இருந்துகொண்டு போலீஸார் லேப்டாப்களை இயக்குவதாகவும் தகவல்கள் வருகிறது. வாக்குப் பெட்டியில் உள்ள வாக்குகளை மாறுதல் செய்திருக்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. லேப்டாப்களை பறிமுதல் செய்யவேண்டும். அத்தோடு வாக்குப்பெட்டிகளுக்குப் போதிய பாதுக்காப்பையை உறுதி செய்யவேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-kn-nehru-raises-doubts-of-voting-machine-manipulation-in-trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக