நெல்லை மாவட்டத்தில் அ.தி.,மு.க-பா.ஜக கூட்டணிக் கட்சிகளின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நெல்லைக்கு வந்தார். தச்சநல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசினார்.
அமித் ஷா பேசுகையில், ``கோயில் நகரமான திருநெல்வேலிக்கு வந்திருப்பதற்கு நான் பெருமைகொள்கிறேன். இது தர்ம பூமி மட்டுமல்ல, மோட்ச பூமி. இந்த மண் பாரதியார் , வ.உ.சி., பூலித்தேவன், சுந்தரலிங்கனார், ஒண்டிவீரன், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த மண். நான் தமிழகத்தில் கலந்துகொள்ளும் கூட்டங்களிலெல்லாம் இந்த தியாகிகள் பற்றிப் பேசத் தவறுவதில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி, மீண்டும் எம்.ஜி.ஆரின் ஆட்சி தமிழகத்தில் நிலைக்க நாம் அனைவரும் இனைந்து பாடுபட வேண்டும்.
மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கும், ராகுல் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது. நமது பிரதமர் சாதாரண குடும்பத்தில் பிறந்து, டீ விற்று இன்று உலகமே பாராட்டும் பிரதமராக உயர்ந்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் சாதாரண ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்து, தனது உழைப்பால் முதல்வராக உயர்ந்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வினர் குடும்ப வாரிசுகளால் உருவானவர்கள். பல தலைமுறைகளாக அந்தக் கட்சிகளில் வாரிசுகள் இருந்துவருகிறார்கள்.
மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் இடையே நடைபெறும் யுத்தம்தான் இந்தத் தேர்தல். கருணாநிதி, ஸ்டாலின் உதயநிதி என வாரிசுகளால் உருவான தி.மு.க-வில் அடுத்ததாக உதயநிதியை முதல்வராக்க முயற்சி செய்யப்படுகிறது.
தி.மு.க குடும்பக் கட்சி மட்டுமல்லாமல் பணக்காரக் கட்சி. ஆனால் பாரதிய ஜனதா ஏழைகளை மையமாகக்கொண்டு வளர்ந்துள்ள கட்சி. நமது பிரதமருக்கு மீனவர்கள், விவசாயிகள், ஏழைகள் பற்றியே கவலை. ஆனால் ஸ்டாலினுக்குத் தனது மகனைப் பற்றி மட்டும்தான் கவலை. மகனை முதல்வராக்க வேண்டும் என்ற கவலையால், ஸ்டாலினிடம் கோபமும் ஊழலும் வளர்ந்து வருகின்றன. அதனால் அவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்.
தமிழகத்தின் பண்பாடு என்பது இறந்தவர்களை விமர்சிப்பது கிடையாது. அதனால் தி.மு.க-வினர் இறந்த பெண்மணியான முதல்வரின் தாயாரைப் பற்றிக் கேவலமாகப் பேசும் அளவுக்குப் போயிருக்கிறார்கள். அதனால் வரும் தேர்தலில் ஒரு பெண்ணின் ஓட்டுக்கூட தி.மு.க-வுக்குக் கிடைக்காது.
நமது நாட்டின் பிரதமரும், தமிழக முதல்வரும் சாதாரண மக்களைப் பற்றிக் கவலைப்படக் கூடியவர்கள். விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்கும் ஆட்சி பாரதிய ஜனதா ஆட்சி. விவசாயிகள் கடனை ரத்து செய்து தமிழக முதல்வர் சாமானிய மக்களின் ஆட்சியை நடத்திவருகிறார்.
நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியில் தலித் சமூகத்தவரை வைத்து அழகு பார்க்கும் கட்சி பாரதிய ஜனதா. பல்வேறு பிரிவுகளாக இருந்த பட்டியல் சமூகத்தினரை, தேவேந்திர குல வேளாளர் என ஒரே பிரிவாகப் பிரதமர் மாற்றினார்.
மத்தியில் கடந்த 10 வருடங்களாகச் சாதாரண மக்களுக்கான ஆட்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தமிழ் மொழி மீது ஈடுபாடுகொண்டவர். உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர், பிரதமர் மோடி.
2014-ல் மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு மீனவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உலகத்தின் எந்தச் சக்திக்கும் நமது தமிழக மீனவர் மீது தாக்குதல் நடத்த தைரியம் கிடையாது. மத்திய அரசு சாகர்மாலா திட்டத்துக்கு 2.15 லட்சம் கோடி ஒதுக்கி 107 மையங்களை அமைத்துள்ளது. வளர்ச்சிப் பணிகளில் அக்கறை காட்டும் அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.
இந்தக் கூட்டத்தில், நெல்லை சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகக் களமிறங்கும் நயினார் நாகேந்திரனும், நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க சார்பாகப் போட்டியிடும் தச்சை கணேசராஜாவும் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கே.ஜே.சி.ஜெரால்ட், ராதாபுரம் அ.தி.மு.க வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை, அம்பாசமுத்திரம் வேட்பாளர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் அமித் ஷா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டணி வேட்பாளர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தது பாரதிய ஜனதா தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/general-news/admk-candidates-were-not-attended-amitshas-campaign-in-nellai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக