Ad

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

வேதாரண்யம்: `தி.மு.க. பனங்காட்டு நரி... இந்தச் சலசலப்புக்கு அஞ்சாது!’ - ஸ்டாலின்

``ரெய்டு நடத்தி மிரட்டும் மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் எடுபடாது’’  என்றும், ``எடப்பாடி விவசாயி அல்ல... விஷவாயு’’ என்றும் வேதாரண்யத்தில் நான்கு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

ஸ்டாலின்

நாகை தொகுதி வி.சி.க வேட்பாளர் ஷாநவாஸ், கீழ்வேளூர் தொகுதி சி.பி.எம் வேட்பாளர் மாலி, வேதாரண்யம் தொகுதி தி.மு.க வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம், திருத்துறைப்பூண்டி தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் மாரிமுத்து ஆகியோரை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (03.03.2021) நாகை மாவட்டம் வேதாரண்யம் தெற்குவீதியில் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

ஸ்டாலின், ``இந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். பணம் என்றால் ஓ.எஸ்.மணியன். பணம் இல்லை என்றால் நோ.எஸ்.மணியன். கஜா புயலில் சுவர் ஏறி ஓடிய அமைச்சர்தான்  ஓ.எஸ்.மணியன். கஜா புயலின்போது இந்தப்  பகுதி மக்களுக்கு எந்த நிவாரண உதவியும் செய்து  கொடுக்கவில்லை. நிவாரணம் கேட்டுப் போராடியவர்கள் மீது பொய் வழக்கு போடவைத்தார். அந்த வழக்குகள் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் திரும்பப் பெறப்படும். அமைச்சர் மீது வழக்கு பதியப்படும்.

ஸ்டாலின்

நேற்று கன்னியாகுமரியில் பிரதமர் மோடி, இணையம் துறைமுகம் கொண்டுவரப்படும் என்று  பேசியுள்ளார். அந்தப்  பகுதி மக்கள் துறைமுகத்தை எதிர்த்துவருகின்றனர். ஆனால் முதல்வர் துறைமுகம் வராது என்றும், ஸ்டாலின் பொய் கூறுவதாகவும் தெரிவிக்கிறார். நான் மத்திய அரசின் ஆதாரத்தோடு சொல்கிறேன் துறைமுகத்தை கொண்டுவர மத்திய அரசு முயல்கிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி துறைமுகம் கட்டாயம் வரும் என்று உறுதி செய்துள்ளார்.  மீனவர்களைப் பாதுகாப்பதாக பிரதமர் கூறியுள்ளார். அவர் பொய் மூட்டைகளைக் கொண்டு வந்து பேசிவருகிறார்.

என் மகள் வீட்டிலும் தி.மு.க-வினர் வீட்டிலும் ரெய்டு நடத்தினார்கள். இரண்டு நாள்கள் ரெய்டு நடத்தி ஒன்றும் இல்லாமல் சென்றுவிட்டார்கள். காபி, டீ சாப்பிட்டுவிட்டு ரெய்டு நடத்திய அதிகாரிகள் தி.மு.க-வுக்குக் கூடுதலாக 25 சீட்டுகள் கிடைக்கும் என்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

தேர்தலுக்கு நான்கு நாள்கள் இருக்கும்போது ரெய்டு நடத்துவது நியாயமா... நாங்கள் தவறு செய்திருந்தால்முன் கூட்டியே நடத்த வேண்டியதுதானே? தி.மு.க பனங்காட்டு நரி. இந்தச் சலசலப்புக்கு அஞ்சாது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு செய்யலாம். அவர்கள் மோடி காலில் விழுவார்கள். ஆனால் எங்களிடம் நடக்காது. மிசா சட்டத்தை எதிர்த்து ஓராண்டு சிறைக் கொடுமைகளை அனுபவித்து வந்தவன் நான்.

ஸ்டாலின்

தாராபுரத்தில் பேசிய மோடி தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், தாராபுரம் அருகில்தான் பொள்ளாச்சி இருக்கிறது. அங்கு நடந்த கொடுமைகள், பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி உள்ளிட்ட சம்பவங்கள் அ.தி.மு.க ஆட்சியில்தான்  நடந்துள்ளன என்பது பிரதமருக்குத் தெரியாதா? மீனவர்களுக்கு பாதுகாப்பு தன்னுடைய அரசுதான் என மோடி பேசுகிறார். 

பா.ஜ.க ஆட்சியில்தான் மீனவர் பிரிட்ஜோ மீது துப்பாக்கி சூடு, பெட்ரோல் குண்டு வீச்சு, தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழப்பு  எனப் பல்வேறு தாக்குதல்களை தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்திவருகின்றனர். பழனிசாமி ஆட்சியில் மீனவர்களை ஏமாற்றுவதில் குறியோடு உள்ளனர்.

சிறுபான்மை இனத்துக்கு துரோகம் செய்பவர்கள் அ.தி.மு.க-வினர். நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்த சட்டம் CAA. இவர்கள் ஆதரித்த காரணத்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டம்தான் சிறுபான்மை மக்களை உரிமையற்றவர்களாக மாற்றுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளோம். ஆனால், முதல்வர் இந்தச் சட்டத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்று பேசினார். 

தி.மு.க தலைவர் ஸ்டாலின்

பழனிசாமி எங்கு போனாலும் நான் ஒரு விவசாயி என்று பேசுகிறார். விவசாயியை எனக்குப் பிடிக்கும், ஆனால் போலி விவசாயியை எனக்கு பிடிக்காது. பச்சைத்துண்டு போட்டால் விவசாயியா? உண்மையான விவசாயியாக இருந்தால் வேளாண் சட்டத்தை ஆதரித்திருப்பாரா?

டெல்லியில் போராடுபவர்களை புரோக்கர் என்று கூறி கொச்சை படுத்துவாரா? ரூ.1,500 கோடிக்கு தூர்வாரி கொள்ளை அடித்தவர் எடப்பாடி. நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்ளை. புயல் பாதிப்பில் கொள்ளை. முதல்வர் விவசாயி அல்ல... விஷவாயு. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நாகையில் மீன் பதப்படுத்தும் நிலையம், வேளாங்கண்ணியில் மீன் உளர்தளம், நாகையில் கடல் உணவு மண்டலம், அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகம் மேம்படுத்தப்படும். நாகூர் சுற்றுலா நகரமாக மேம்படுத்தப்படும். வேதாரண்யத்தில் குளிர் பதனக் கிடங்கு, திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி கொள்முதல் நிலையம், நாகூர் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும், நாகூர் முதல் கோடியக்கரை கடற்கரைப் பகுதிகள் மேம்படுத்தப்படும்.

10 ஆண்டுக்கால தொலைநோக்குத் திட்டங்கள் நிறைவேற தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இது வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல. மத வெறியை தமிழகத்தில் தூண்டி பா.ஜ.க குளிர்காய திட்டமிட்டுள்ளது. இது திராவிட மண். மோடி மஸ்தான் வேலை இங்கு எடுபடாது. தமிழகத்தை மீட்க, தமிழ் மொழியைக் காக்க, திராவிட மண்ணைக் காக்க மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/stalin-slams-eps-and-bjp-in-election-campaign

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக