Ad

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

ஆசிரியர் கொடுத்த அந்த வாய்ப்பு... இன்று உலகே வியக்கும் `இ-பே' பியரியின் கதை! #BusinessMasters - 3

வெற்றி என்பது என்ன? நினைத்ததை அடைவது. அதன்மூலம் பொருள் ஈட்டுவது; அங்கீகாரம், புகழ் பெறுவது; மனநிறைவோடு வாழ்வது... அதற்கு என்ன செய்ய வேண்டும்?

``ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். அது, உங்கள் வாழ்க்கையை வடிவமைப்பதாக இருக்க வேண்டும். எப்போதும் அந்தத் திட்டத்தைப் பற்றியே யோசியுங்கள்; அதைப் பற்றியே கனவு காணுங்கள்; அதனுடனேயே வாழுங்கள். மூளை, சதை, நரம்பு என உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அது நிறைந்திருக்கட்டும். மற்ற திட்டங்களை ஓரங்கட்டிவிடுங்கள்.இதுதான் வெற்றி பெறுவதற்கான ஒரே வழி’’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். இதை அட்சரம் பிசகாமல் கறாராகக் கடைப்பிடித்தார் ஒருவர். அதனால் 31 வயதிலேயே கோடீஸ்வரரானார். அவர், இபே (ebay) நிறுவனர் பியரி ஒமிட்யார் (Pierre Omidyar).

Pierre Omidyar

பிரான்ஸ் To அமெரிக்கா...

1967-ம் ஆண்டு பாரிஸில் பிறந்தார் பியரி. அம்மாவும் அப்பாவும் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள். மேற்படிப்புக்காக ஈரானிலிருந்து பிரான்ஸுக்கு இடம்பெயர்ந்தவர்கள். அப்பா, சைரஸ் ஒமிட்யார் ஒரு மருத்துவர்; சிறுநீரகவியல் அறுவைசிகிச்சை நிபுணர். அமெரிக்காவிலுள்ள பால்டிமோரிலிருக்கும் ஒரு மருத்துவமனையில் அவருக்கு வேலை கிடைக்க, அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது ஒமிட்யார் குடும்பம்.

முதல் வருமானம் ஆறு டாலர்...

பியரி ஒமிட்யார் விர்ஜினியாவிலுள்ள ஒரு பள்ளியில் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். விளையாட்டு பீரியடில் மற்ற மாணவர்களெல்லாம் பேஸ்பால், ஃபுட்பால், பாட்மின்டன் என்று ஓடிக்கொண்டிருக்க, பள்ளியிலிருக்கும் கம்ப்யூட்டர்முன் பழியாகக் கிடந்தார் ஒமிட்யார். கம்ப்யூட்டரில் கண்டதையும் நோண்டுவதும் விளையாடுவதும் அவருக்கு அவ்வளவு பிடித்திருந்தது. ஒரு விளையாட்டு பீரியடில் பள்ளியை வலம்வந்த ஸ்கூல் பிரின்சிபால் கண்ணில்பட்டார் . ``இந்தப் பையன் இங்கே என்ன செய்கிறான்?’’ அறைக்குள் எட்டிப் பார்த்தவருக்கு விஷயம் புரிந்துபோனது. அடுத்த நாள் அவரைத் தன் அறைக்கு அழைத்தார். விசாரித்தார்.

ebay

``கம்ப்யூட்டர்னா உனக்கு அவ்வளவு இஷ்டமா?’’

``யெஸ்’’... தலையாட்டினார் ஒமிட்யார்.

``ஒரு வேலை செய். நம்ம ஸ்கூல் லைப்ரரிக்கு கொஞ்சம் கேட்லாக் கார்ட்ஸ் பிரின்ட் பண்ண வேண்டியிருக்கு. அதுக்கு கம்ப்யூட்டர்ல ஒரு புரோக்ராம் ரெடி பண்றியா?’’

சந்தோஷமாக ஒப்புக்கொண்டார் ஒமிட்யார். அந்த வேலைக்கு ஒரு மணி நேரத்துக்கு ஆறு டாலர் பணம் கிடைத்தது. தொகை அதிகமில்லைதான். ஆனால், அதுதான் வெற்றிக்கான ஆரம்பம்.

காதலிக்காக ஒரு வெப்சைட்...

கம்ப்யூட்டர் என்கிற காந்தம் ஒமிட்யாரை சதா ஈர்த்துக்கொண்டிருந்தது. டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படித்து முடித்ததும், சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் செய்யும் ஆப்பிளின் துணை நிறுவனமான கிளாரிஸில் (Claris) கொஞ்ச காலம் வேலை; பிறகு சின்னதாக ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தது; அதன்பிறகு, `ஜெனரல் மேஜிக்’ என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணி; சைடு வருமானத்துக்கு வெப் பேஜ் டிசைன் செய்வது என ஓடிக்கொண்டிருந்தது காலம். ஆனாலும், உள்ளுக்குள் இதைவிட வேறு ஏதாவது சிறப்பாக ஒரு பிசினஸை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் சிறு கங்காகக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அதற்கான நேரமும் வாய்த்தது.

ebay, paypal

அந்தக் காலகட்டத்தில்தான் ஒமிட்யாருக்கு அறிமுகமானார் பமீலா வெஸ்லி. நல்ல தோழியாகவும் ஆனார். பின்னாளில் ஒமிட்யாரையே மணந்துகொண்டார். பமீலாவுக்கு ஒரு ஹாபி இருந்தது... `பெஸ் டிஸ்பென்ஸர்ஸ்’ (Pez Dispensers) என்ற பொம்மைகளைச் சேகரிப்பது (நம் ஊரில் பென்சிலுக்கு மேல் தொப்பிபோட்ட பொம்மைத்தலை இருக்குமே... அது மாதிரி). ஆனால், விதவிதமான பொம்மைகள் கிடைப்பது சவாலாக இருந்தது. பமீலா, ஒமிட்யாரின் உதவியை நாடினார். அவருக்காகவே ஒரு வெப்சைட்டை உருவாக்கினார் ஒமிட்யார். ‘இங்கு உங்கள் பொருள்களை விற்கலாம்; தேவைப்படும் பொருள்களை வாங்கலாம்’ என வாங்குபவருக்கும் விற்பவருக்கும் பாலமாக இருக்கும் ஓர் ஆன்லைன் விற்பனைச் சந்தை அது.

உடைந்துபோன லேசர் பாயின்ட்டர்...

அந்தத் தளத்துக்கு முதலில் விற்பனைக்கு வந்தது ஓர் உடைந்துபோன லேசர் பாயின்ட்டர். மேலும், சில பொருள்கள் விற்பனைக்கு வந்தன... பார்பி பொம்மை, டெடிபியர், வீட்டுச் சாமான்கள்... இப்படி. ஆரம்பத்தில் அந்த இணையதளக் கடையை ஒமிட்யார் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அதன் வீச்சு அபாரமாக இருந்தது. பிறகு ஒரு பொருளைத் தன் இணையதளத்தில் காட்சிப்படுத்த, பொருள்களுக்கேற்ப ஒரு சிறு தொகையைக் கட்டணமாக வாங்க ஆரம்பித்தார். என்ன... அவரால் விற்கப்படும் பொருள்களுக்கு கியாரன்டி கொடுக்க முடியாது; எந்தப் பொருளுக்கும், பரிவர்த்தனைக்கும் பொறுப்பேற்க முடியாது; வாங்குபவர், விற்பவருக்கு இடையே நிகழும் சண்டை, சச்சரவுகளைத் தீர்க்க முடியாது. ஆனால், இதையெல்லாம் தாண்டி, அவரே எதிர்பார்க்காத அளவுக்கு அவரின் இணையதளமான ‘இ-பே’ நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போனது.

ஆன்லைன் ஷாப்பிங்

Also Read: ஒரு காதல், ஒரு கனவு, ஒரு வெற்றி... Zoom-ஐ எரிக் சாத்தியப்படுத்தியது எப்படி? #BusinessMasters - 2

விற்பனையில் களைகட்டிய இ-பே...

ஒமிட்யாரின் திட்டம் அவருக்கு அள்ளிக்கொடுக்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில், அந்த பிசினஸின் வளர்ச்சி அவருக்கே மலைப்பை ஏற்படுத்த, மற்ற எல்லாவற்றையும் தூக்கிப்போட்டார். இ-பேயில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 1997-ம் ஆண்டு, இணையதளத்தில் மிக அதிகம்பேர் பார்வையிட்ட தளமாக `இ-பே’ பதிவானது. 1,50,000 பேர் அதை ரெகுலராகப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். ஒரு நாளைக்கு 7,94,000 பொருள்கள் விற்பனையாகின. அதோடு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகிக்கொண்டே போனது.

இன்றைக்கு இ-பே ஒரு பொதுத்துறை நிறுவனம். பார்பி பொம்மையிலிருந்து, புராதனப் பொருள்கள் வரை எதை வேண்டுமானாலும் வாங்கும், விற்கும் ஒரு சேவை மையமாக வளர்ந்து நிற்கிறது. அதோடு, `பேபால்’, `ஃபர்ஸ்ட்லுக் மீடியா’ என்று அவர் தொடங்கிய அடுத்தடுத்த பிசினஸ்கள் எல்லாமே அவருக்கு செல்வத்தை அள்ளிக் கொடுத்தன.

ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஒமிட்யார் இப்படிச் சொன்னார்... ‘மக்கள் பொருள்களை வாங்கவும் விற்கவும் என் சேவையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி அல்ல... மனிதர்களுக்கு பிற மனிதர்களைச் சந்திக்கப் பிடித்திருக்கிறது. அதற்கான இடம்தான் இ-பே.’’ இந்த மனப்பான்மை வாய்த்தால், எந்த பிசினஸிலும் வெற்றியே!

(பாடம் எடுப்பார்கள்...)


source https://www.vikatan.com/business/news/how-pierre-omidyar-successfully-established-ebay-business-masters

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக