Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

``நாய்களைப் பார்த்தால்தான் எனக்கு உயிரே வரும்!" - ஐ.டி ஊழியரின் நாட்டு நாய் வளர்ப்பு

நாம் எந்தத் தொழில் செய்துகொண்டிருந்தாலும் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குள் சென்று செல்லப்பிராணிகளை கண்டால் அத்தனையும் அடுத்த நொடியில் பறந்து போய்விடும். மனிதர்கள் மீது காட்டும் அதே அக்கறையை செல்லப்பிராணிகள் மீது காட்டினால் மனதுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த மகிழ்ச்சியோடு வருமானமும் கிடைத்தால் அது இரட்டிப்பு மகிழ்ச்சிதான். அந்த இரட்டிப்பு மகிழ்ச்சியில் செல்லப் பிராணிகளாக நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார் சென்னையடுத்த சிறுசேரியில் ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் சதீஷ்.

ராஜபாளைய நாய்கள் 

இவருடைய நாட்டு நாய் பண்ணை மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இருக்கிறது. வாரம் ஒருமுறை விடுமுறை விட்டதும் பண்ணையில் ஆஜராகிவிடுகிறார் சதீஷ். நாட்டு நாய்களை வளர்க்கும் அனுபவங்களை ஆர்வமாக அவர் பகிர்ந்து கொண்டபோது, ``நாட்டு நாய்கள் என்றால் எனக்கு உயிர். வாரா வாரம் என் நாய்களைப் பார்த்தால்தான் எனக்கு உயிரே வரும். நான் வளர்ப்பது அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டு நாய்கள்தான். ராஜபாளையம், கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராமநாதபுரம் என்ற நாய் இனங்களைத்தான் வளர்க்கிறேன்.

வெளிநாட்டு நாட்டு நாய்கள வளர்க்கிறதுக்கு நிறைய பேர் இருக்கிறாங்க. ஆனா, நம் நாட்டு நாய்கள கலப்பு இல்லாம வளர்க்கக்கூடியவங்க மிகவும் குறைவு. அந்த வகையில இந்த நாட்டு நாய்கள வளர்த்து சான்றிதழ்களோடு விற்பனை செஞ்சிட்டும் வருகிறேன். பள்ளிக்கூடத்து வகுப்பறையில் படிக்கும் அத்தனை மாணவர்களின் பெயர்களையும் ஆசிரியர் நினைவில் வைத்து அழைப்பதுபோல, எங்கள் பண்ணையின் அனைத்து நாய்களையும் தனித்தனி பெயர்களை வைத்து அழைத்து வருகிறோம்.

இப்போ பண்ணையில் 60 பெரிய நாய்கள், 30 குட்டிகள் இருக்கு. இந்த நாய்களை வருமானத்துக்காக வளர்த்தாலும், ஒவ்வொன்றின் மீதும் தனிப்பட்ட முறையில் பாசத்தைக் காட்டிதான் வளர்க்கிறோம். குட்டிகளுக்கு பால், கோழி ஈரல், சோறு இதுதான் உணவு. பெரிய நாய்களுக்கு பீப், சிக்கன், சோறு கலந்து செஞ்ச உணவை கொடுப்போம். நோய் எதிர்ப்பு சக்திக்காக உணவை சமைக்கும்போதே மஞ்சள் தூள் கலந்து கொடுப்போம். இதுமூலமா தோல் சம்பந்தமான நோய்கள் வராது.

மாதம் ஒருமுறை குடற்புழு நீக்கம் செஞ்சிடுவோம். வருஷம் ஒருமுறை தடுப்பூசி போட்டுவிடுவோம்.
இந்த நாய்கள வளர்க்கிறதுக்காக 50 சென்ட் இடத்தை ஒதுக்கியிருக்கிறோம். 4 அடி அகலம், 16 அடி நீளத்தில் குட்டி போட்ட நாய்கள பராமரிக்கிறதுக்காக அறைகளை உருவாக்கியிருக்கிறோம். பண்ணையைச் சுற்றியும் வேலி போட்டு அதில்தான் நாய்கள வளர்த்துட்டு வர்றோம். இந்த நாய்கள வளர்க்கிறதுக்காகவே 4 பேர் இருக்கிறாங்க. இவங்களோடு ஒரு கல்நடை மருத்துவரும் இருக்கிறார்.

நாட்டு நாய் குட்டிகள்

சிறுவயதில் பள்ளிக்குச் சென்றுவரும் வழியில் நாய்க்குட்டிகளைப் பார்த்தால் வீட்டுக்குத் தூக்கிட்டு வந்துவிடுவேன். அந்த நாய்க்குட்டிகளை எனக்குத் தெரியாமல் என் அப்பா எங்கேயாவது கொண்டுபோய் விட்டுவிடுவார். இதுவே எனக்கும் அப்பாவுக்கும் வாடிக்கையாக மாற, ஒருவழியாக என் விருப்பத்துக்கேற்ப ராஜபாளையம் நாய்க்குட்டி ஒன்றை வாங்கி வந்து கொடுத்து அசத்திவிட்டார் என் அப்பா.

எங்கே போனாலும் எங்களுடனே வரும். வழக்கமாகத் தனியாக வெளியே எங்கேயாவது சென்றாலும் கூட வீடு சேரும் நாய் திடீரென ஒருநாள் வீடு சேரவே இல்லை. ஏழு வருடங்களாக குடும்பத்தில் ஒருவனாக இருந்த அந்த நாயின் இழப்பை ஏற்றுக்கொள்ள மிகச் சிரமமாக இருந்தது. அந்தப் பிரிவுதான் நாய்கள வளர்க்கணும்ங்கற எண்ணத்தையே உருவாக்குச்சு.

இப்போ ஒவ்வொரு நாய் விற்பனையின்போதும் பிரிவின் வலி ஒருபுறம் இருந்தாலும், என் நாய்கள் மூலமாகத்தான் ஒவ்வொரு ஊரிலும் மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறேன்.

`நீ வாங்கும் சம்பளத்துக்கு இதையெல்லாம் வேலையாகச் செய்யலாமா’ என்ற அறிவுரைகள் உறவினர்களிடமிருந்து வந்துகொண்டே இருக்கும். உறவினர்களின் பேச்சுக்களைக் கடக்க என் மனைவிதான் பக்கபலமாக இருக்கிறார். சாஃப்ட்வேர் துறையில் நல்ல சம்பாத்தியத்திலிருந்தாலும் கூட இதில் கிடைக்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அளவுக்கு வாழ்க்கைக்கான அழைப்பாகவே நாய் வளர்ப்பைப் பார்க்கிறேன்.

நாய் கண்காட்சியின்போது சதீஷும் அவரின் நாட்டு நாயும்

நாட்டு நாய்கள் பார்ப்பதற்கு ஆக்ரோஷமானவையாக இருந்தாலும், வளர்ப்பதற்கும் மிகவும் ஏற்றவை. பழகிவிட்டால் அதைவிட அன்பு செலுத்துவற்கு வேறொரு ஆள் இருக்க மாட்டார்கள். இந்தப் பண்ணையைப் பராமரிப்பதற்கு மாசத்துக்கு 50,000 ரூபாய் செலவாகிறது. வருஷத்துக்கு 100 குட்டிகள் வரை விற்பனை செய்கிறேன். ராஜபாளையம் ஒரு தடவைக்கு 5 - 8 குட்டிகள் போடும். கன்னி, சிப்பிப்பாறை 6 - 12 குட்டிகள் போடும். ராமநாதபுரம், கோம்பை 5 - 10 குட்டிகள் வரை போடும். குட்டி போட்டதும் 45 நாள்களுக்கு தனியறையில் வைத்து பராமரிப்போம். பிறகு விற்பனை செய்வோம்.

ராஜபாளையம் 10,000 - 25,000 ரூபாய் வரை விற்பனையாகும். கன்னி, சிப்பிப்பாறை 10,000 - 15,000 ரூபாய் விற்பனையாகும். கோம்பை 8,000 - 12,000 ரூபாய் விற்பனையாகும். ராமநாதபுரம் 7,000 - 10,000 ரூபாய் வரை விற்பனையாகும். நான் நாய்களுக்காகவே நடத்தப்படும் கே.சி.ஐ என்றழைக்கப்படும் `Kennel Club of India' என்ற அமைப்பில் உறுப்பினராக இருக்கிறேன். அதனால், நாய்களின் ஒரிஜனல் தன்மைக்காக சான்றிதழ், மைக்ரோ சிப்போடு நாட்டு நாய்களை விற்பனை செய்கிறேன்.

ஒருமுறை கோவையில் நடைபெற்ற நாய் கண்காட்சிக்கு நாய்களைக் கொண்டு வர முடியுமா என, நான் நாய்களை வாங்கிய பண்ணை உரிமையாளர் கேட்க கூட்டிச் சென்றேன். வெளிநாட்டு நாய்கள்தான் அந்தக் கண்காட்சியில் 80 சதவிகிதத்துக்கும் மேலாக பங்குப்பெற்றிருந்தன. நான் வைத்திருந்த ராஜபாளையம் நாயைப் பார்த்து இது எந்த வெளிநாட்டு இன நாய் எனப் பலர் கேட்டனர். குட்டி போட்டால் எங்களுக்குக் கொடுங்கள் என்று கேட்டு என் தொடர்பு எண்ணை வாங்கிக்கொண்டனர். அப்படித்தான் நாட்டு நாய்கள் விற்பனைத் தொடங்கினேன்.

நாட்டு நாய் குட்டிகள்

முன்பெல்லாம் வெளிநாட்டு நாய்களை வளர்ப்பதுதான் கௌரவமாகப் பார்க்கப்பட்டது. இப்போது அந்தப் பந்தாவெல்லாம் மக்களிடையே குறைஞ்சிட்டு வருது. நாட்டு நாய்கள்தான் இன்று வீட்டின் அம்சமாக பார்க்கப்படுகிறது.

நம் நாட்டின் தட்ப வெப்பநிலைக்கு நாட்டு நாய்கள் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு வெளிநாட்டு நாய்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. இவ்வளவு ஏன் குளிர் பிரதேசங்களிலும் நம் நாட்டு நாய்கள் அதிகளவில் தாக்குப் பிடிக்கின்றன. உணவுக்கும் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை. எஜமானர்களிடத்திலும் விசுவாசமாக இருக்கிறது. அனைவரும் செல்லப்பிராணிகளாக நாட்டு நாய்களை வளர்க்க ஆரம்பித்தால், நாட்டு நாய்களின் சந்தை இன்னும் பெருகும். நம் பாரம்பர்யமும் காக்கப்படும்” என்றார்.



source https://www.vikatan.com/living-things/animals/chennai-it-working-man-raised-native-breed-dogs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக