Ad

சனி, 14 நவம்பர், 2020

பா.ஜ.க-வின் `B டீம்’ என விமர்சிக்கப்படும் ஒவைசி... தமிழ்நாட்டில் யார் அப்படி?

பீகாரில் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றிபெற்றுள்ளபோதிலும், தேஜஸ்வி தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளமும் (ஆர்.ஜே.டி), அதன் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியிலுள்ள கட்சிகளும் கணிசமான இடங்களில் வெற்றிபெற்றுள்ளன. இந்தத் தேர்தலில், தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்துவரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சிக்கு முடிவுகட்டிவிட முடியும் என்று எதிர்க்கட்சிகள் நம்பின. ஆனால், அவர்களின் நம்பிக்கை பொய்த்தது.

மோடி

பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள். 122 தொகுதிகள் வெற்றிபெற்றால் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில், பா.ஜ.க கூட்டணி 125 இடங்களிலும், ஆர்.ஜே.டி கூட்டணி 110 இடங்களிலும், பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் எட்டு இடங்களிலும் வெற்றிபெற்றன. ஆர்.ஜே.டி கூட்டணியைக் காட்டிலும் பா.ஜ.க கூட்டணி 15 இடங்கள்தான் அதிகம் பெற்றிருக்கிறது. இந்தநிலையில், ஆர்.ஜே.டி கூட்டணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாகக் கைகாட்டப்படுகிறார் ஏ.ஐ.எம்.ஐ.எம் (அகில இந்திய மஜ்லிஸ்–இ-இட்டேஹதுல் முஸ்லிமீன்) கட்சியின் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்.பி-யுமான அசாதுதீன் ஒவைசி.

அடிப்படையில் ஏ.ஐ.எம்.ஐ.எம் ஓர் இஸ்லாமியக் கட்சி. அசாதுதீன் ஒவைசி தொடர்ந்து பா.ஜ.க-வை விமர்சிப்பவராகவும் இஸ்லாமியர்களுக்காகக் குரல் கொடுப்பவராகவும் இருந்துவருகிறார். பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாடுகொண்டவராக இருந்தாலும், இவர்மீது சந்தேகப் பார்வையுடன் பல அரசியல் கட்சிகள் விமர்சனங்களை வைப்பது உண்டு.

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இவர் மீதான விமர்சனங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. காரணம், பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்த்துவரும் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் நின்று பா.ஜ.க-வைத் தோற்கடிக்கக் களமிறங்கின. இந்தநிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒவைசி தன் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தினார்.

ஒவைசி

அங்கு, பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து, ஆர்.ஜே.டி கூட்டணிக்கு அந்த வாக்குகள் சென்றுவிடாமல் தடுத்து, பா.ஜ.க-வின் வெற்றிக்கு மறைமுகமாக ஒவைசி உதவியிருக்கிறார் என்பதுதான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. `பா.ஜ.க-வின் B டீம்’ என்றும், ‘வாக்குகளைத் துண்டாடுபவர்’ என்று ஒவைசி விமர்சிக்கப்படுகிறார்.

பா.ஜ.க-வின் இந்துத்வா அரசியலை எதிர்த்தும், விமர்சித்தும் வருகிற தன் மீதான இந்தக் குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த ஒவைசி, `தேர்தலில் போட்டியிட என் கட்சிக்கு உரிமை உண்டு. தேர்தலில் போட்டியிட யாரிடமும் நான் அனுமதி வாங்க வேண்டியதில்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பீகாரில் பெரிய கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். ஆனால், எங்களைத் தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினர்’ என்று கூறியிருக்கிறார். அடிப்படையில் ஒரு முஸ்லிம் கட்சி என்பதால், முஸ்லிம் வாக்குகளைக் குறிவைத்து தேர்தல் அரசியலில் ஒவைசி செயல்பட்டுவருகிறார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒவைசியின் கட்சி ஆந்திரா, தெலங்கானா மட்டுமல்லாமல் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிட்டுவருகிறது.

ஒவைசி

பீகாரில் கிஷான்கஞ்ச், அராரியா, பூர்ணியா, கடிஹர் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய 'சீமாஞ்சல்' என்ற பகுதியில் முஸ்லிம்கள் பெருவாரியாக வசித்துவருகிறார்கள். சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரரீதியாக இந்தியாவில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் சீமாஞ்சலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு, 24 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. பாரம்பர்யமாக ஆர்.ஜே.டி-யும் காங்கிரஸ் கட்சியும் செல்வாக்கு பெற்ற சீமாஞ்சலில், 2015 சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 12 இடங்களில் வெற்றிபெற்றது.

இந்த முறை மாயாவதியின் பி.எஸ்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹா தலைமையிலான ராஷ்டிரிய லோக் சமதா கட்சி உள்ளிட்ட `மகா ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணி' என்ற கூட்டணியில் இணைந்து ஒவைசியின் கட்சி போட்டியிட்டது. சீமாஞ்சல் பகுதியில் இந்தக் கூட்டணி 20 இடங்களில் போட்டியிட்டது. அவற்றில் 14 இடங்களில் ஒவைசியின் கட்சி போட்டியிட்டது. எனவே, பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் ஆர்.ஜே.டி கூட்டணிக்குப் போகாமல், ஒவைசியின் கட்சிக்கு விழுந்தன. இதனால், இங்கு பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. ஆர்.ஜே.டி கூட்டணி ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

மாயாவதி

பீகார் சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட ஒவைசியின் கட்சி, ஐந்து தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. இந்த வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் ஒவைசி, இன்னும் சில மாதங்களில் வரக்கூடிய மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலிலும், 2022-ல் வரவிருக்கும் உ.பி சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். இதனால், மேற்கு வங்கத்தில் மதச்சார்பற்ற வாக்குகளைப் பிரித்து, தங்களுக்கு பின்னடைவை ஒவைசி ஏற்படுத்துவார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அச்சமடைந்திருக்கின்றன. எனவேதான், `வாக்குகளைத் துண்டாடுபவர்’ என்று ஒவைசியை மேற்குவங்க காங்கிரஸ் கட்சித் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி விமர்சித்திருக்கிறார்.

Also Read: பீகார் தேர்தல்: தேஜஸ்விக்குத் துணை நின்ற தோழர்கள்…கம்யூனிஸ்ட் வெற்றி சாத்தியமானது எப்படி?

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஒவைசியிடம், `உ.பி சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பீர்கள்?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, `அதைக் காலம்தான் முடிவுசெய்யும்’ என்று கூறியிருக்கிறார். `பீகார் ஃபார்முலா’வையே மேற்கு வங்கத்திலும் உ.பி-யிலும் ஒவைசி பின்பற்றுவார் என்றும், பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளை சிதறடித்து மதச்சார்பற்ற கட்சிகளின் வெற்றிக்கு பங்கம் விளைவிப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.

கமல்ஹாசன்

பாபர் மசூதி இடிப்பு, என்.ஆர்.சி., சி.ஏ.ஏ உள்ளிட்ட விவகாரங்களில் பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துவரும் ஒவைசி, பா.ஜ.க-வின் வெற்றிக்கு உதவும் வகையில், பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைச் சிதறடிக்கும் வகையிலான யுக்தியைத் தேர்தலில் ஏன் கையாள வேண்டும் என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுப்பப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியை `பா.ஜ.க-வின் B டீம்’ என்று அழைக்கிறார்கள். இது குறித்த கேள்வியை அவரிடமே செய்தியாளர்கள் பலமுறை முன்வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்த விமர்சனம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஒவைசிபோல கமல் ஆத்திரப்படவில்லை. `நாங்கள் தமிழ்நாட்டின் ‘A டீம்’’ என்று பதில் சொன்னார். இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வரப்போகிறது. தமிழ்நாட்டின் ’A டீம்’ யார், பா.ஜ.க-வின் ’B டீம்’ யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/owaisi-said-to-be-b-team-for-bjp-in-bihar-who-is-b-team-for-bjp-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக