நெல்சன் திலீப்குமார் இயக்கும் விஜய்யின் 65 வது படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி ஜார்ஜியாவில் தொடங்கியது. இந்த ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்கு முதல் நாள் அதாவது ஏப்ரல் 6-ம் தேதி சென்னையில் சைக்கிளில் ஓட்டுப்போட வந்து பரபரப்பைக் கிளப்பிய விஜய், அடுத்தநாள் காலை சென்னையில் இருந்து ஜார்ஜியாவுக்கு ஃப்ளைட் ஏறினார்.
விஜய் ஜார்ஜியா போவதற்கு முன்பாகவே விஜய் 65 டீமில் இருந்து பலரும் ஏற்கெனவே அங்கே போய் சேர்ந்துவிட்டார்கள். கிட்டத்தட்ட 12 மணி நேரப்பயணத்துக்குப்பிறகு ஜார்ஜியாவின் டிபிலிஸி (Tbilisi) நகருக்குச் சென்றார் விஜய். அதுதான் ஷூட்டிங் ஸ்பாட். மூன்று நாள் க்வாரன்டீன் முடிந்ததும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் விஜய். முதல் மூன்று நாள்கள் தொடர்ந்து அங்கே மழை பெய்ததால் ஷூட்டிங்கைத் தொடர்வதில் சிக்கல்கள் இருந்திருக்கின்றன.
ஜார்ஜியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. அங்கே இரவு 9 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது என்பதால் மாலை 7 மணிக்குள்ளாகவே எல்லோரும் ஷூட்டிங்கை முடிந்து ரூம்களுக்குள் செட்டில் ஆகியிருக்கிறார்கள். மூன்று நாள்களுக்கு ஒருமுறை தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. முதல் நாள் ஜார்ஜியாவில் போய் இறங்கியதும் தொழில்நுட்பக் குழுவினரில் இரண்டு பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட அவர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. பாடல் காட்சிகள் எதுவும் படம்பிடிக்கப்படவில்லை. சண்டைக்காட்சியில் கார் சேஸிங்தான் பிரதானம். முதலில் இந்த சண்டைக்காட்சியை காஷ்மீரில் படம்பிடிக்கத்தான் படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால், காஷ்மீரில் ஷூட்டிங்கின்போது ஏதும் சிக்கல்கள் வரலாம் என்பதால் ஜார்ஜியாவுக்கு ஷூட்டிங் மாற்றப்பட்டது.
ஷூட்டிங் முடிந்ததும் நேராக ஹோட்டலில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் போய்விடுவாராம் விஜய். இரண்டு முறை ஷாப்பிங்கிற்காக வெளியே வந்திருக்கிறார். மற்றபடி ஷுட்டிங் தவிர்த்து மற்ற நேரங்களில் ஹோட்டல் அறையைவிட்டே விஜய் வெளியே வரவில்லை என்கிறார்கள். முழுக்க முழுக்க தனிமையிலேயே இருந்திருக்கிறார்.
ஷூட்டிங் நடக்கும்போது டிபிலிஸி நகரில் படிக்கும் மாணவர்கள் பலரும் விஜய்யோடு செல்ஃபி எடுக்க, ஆட்டோகிராஃப் வாங்க வந்திருக்கிறார்கள். அவர்களோடு படம் எடுத்து உற்சாகப்படுத்தி அனுப்பியிருக்கிறார் விஜய்.
ஷூட்டிங் முடிந்து நேற்று மாலை ஜார்ஜியாவில் இருந்து கிளம்பி இன்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்தார் விஜய். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட மற்றவர்கள் ஒரு விமானத்தில் வர, விஜய் வேறு ஒரு விமானத்தில் சென்னை வந்திருக்கிறார்.
ஒரு வார க்வாரன்டீனுக்குப் பிறகு மே 3 முதல் சென்னையில் விஜய் 65 பட ஷூட்டிங் தொடங்கயிருக்கிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டபடி ஷூட்டிங் மே 3-ம் தேதி தொடங்குமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-vijays-georgia-shooting-days-vijay-65-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக