Ad

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

மறைக்கப்பட்ட போர் வரலாறு: நேதாஜியின் INA படை Vs பிரிட்டிஷ் இந்தியப் படை யுத்தம் பற்றி தெரியுமா?

அரகான் மலைக் காடுகள், இந்தியாவையும் பர்மாவையும் பிரிக்கும் எல்லைக்கோடுகள். காட்டாற்று ஓடைகள், செங்குத்தான பாறைகள், இரத்தம் உறிஞ்சும் பெரிய கொசுக்களும் அட்டைகளும் என ஆபத்து அடர்ந்திருக்கும் ஒரு காட்டுப்பகுதி! சிறிய பாறைகள் உருண்டு செல்வது போன்று நகர்ந்துகொண்டிருந்தன. அரகான் காட்டின் ஆமைகள். அவற்றின் கால் தடங்களுக்குப் போட்டியாக புழுதி கிளப்பியபடி, புயல்வேகத்தில் போய்க்கொண்டிருந்தது அவர்களின் பூட்ஸ் கால்கள். நாடுகள் கடந்த ஒரு பாரிய படையெடுப்பில் ஆபத்தான சாகசப் பயணங்கள் என்பதெல்லாம் சகஜமான ஒன்றுதான். ஏற்கனவே மலேசியா, சிங்கப்பூர், சுமத்ரா தீவுகள் என பிரிட்டிஷ் பிடியிலிருந்த கிழக்காசியப் பகுதிகளைக் கைப்பற்றி, அங்கு வெற்றிக்கொடி நாட்டிய உற்சாகமும், உத்வேகமும் அவர்களுக்கு இருந்தது. அதுவே பர்மாவை கைப்பற்றிய பின்னர் அடுத்த இலக்காக இருந்த பிரிட்டிஷ் இந்தியாவைக் நோக்கி அடியெடுத்துவைக்கும் தைரியத்தையும் கொடுத்தது!

காடுகள்

அது 1944-ம் ஆண்டு. இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலம். பிரிட்டிஷ், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நேச நாடுகளின் கூட்டுப்படைகளைச் சிதறவிட்டு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற அச்சு நாடுகளின் கைகள் ஓங்கியிருந்த சமயம். ஆள் அரவமற்ற அரகான் காடுகளைப் பிளந்துகொண்டு, ஆரவாரத்தோடு சென்றுகொண்டிருக்கும் அவர்கள் ஜப்பானியப் படை வீரர்கள்.

இந்தியா மீது படையெடுத்து செல்வது ஜப்பானியர்கள் மட்டுமல்ல, அவர்களுடன் கைகோர்த்து சென்றுகொண்டிருப்பது நேதாஜியின் ஐ.என்.ஏ. படை வீரர்களும் தான். என்ன... இந்தியாவின் மீது போர்த்தொடுத்து இந்திய தேசிய ராணுவமே செல்கின்றதா? என்ற ஐயம் உங்களுக்கு எழலாம், ஆனால் உண்மை அதுதான்!

இதன் பின்புலம் பற்றி அறிய சற்று நாம் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும். களத்தில் நின்றபடியே ஆரம்ப வரலாற்றுக்குச் சென்று வருவோம்!

ஐ.என்.ஏ

``இந்திய விடுதலை" என்பது தான் காந்தி நேதாஜியின் ஒற்றை இலக்கு! ஆனால், அதை அடையும் வழிமுறையில் தான் இருவரும் நேர் எதிர். அகிம்சை வழியில் போராடி, பிரிட்டிஷாரின் மனதைமாற்றி படிப்படியாக விடுதலை பெறலாம் என்றது காந்திய வழி. அடிக்கு அடிதான், கெஞ்சியும் கேட்டும் பெறும் யாசகப் பொருளல்ல விடுதலை! ரத்தம் சிந்தி போராடிப் பெறவேண்டிய உரிமையே விடுதலை என்றது நேதாஜியின் வழி. இது முரண் நாம் எல்லோரும் அறிந்ததே. இதையும் தாண்டி சொல்லப்போனால், காந்தி சௌரிசௌரா சம்பத்தைக் காரணம்காட்டி ஒத்துழையாமை இயக்கத்தை ரத்து செய்தது. உப்புச் சத்தியாகிரகத்தை கைவிட்டது, இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டது, உடனடி பூரண இந்திய சுதந்திரத் தீர்மானத்தை ஏற்காமல், முதலில் டொமினியன் அந்தஸ்து பிறகு படிப்படியான விடுதலை என்ற கருத்தை முன்மொழிந்தது என காந்தியின் பல்வேறு கொள்கை முடிவுகளுக்கு உடன்படாமல், நேரடியாகவே முரண்பட்டு நின்றார் நேதாஜி.

மேலும், 1933-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற மூன்றாவது இந்திய அரசியல் மாநாட்டில்,

என மிகத்தீவிரமாகப் பேசினார்.

1939-ல் காங்கிரஸிலிருந்து வெளியேறியவர் ஃபார்வர்டு பிளாக் என்ற புதிய கட்சியைத் தொடங்கி தன்னிச்சையாக செயல்பட்டார். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக, இந்திய மக்களை அணிதிரட்டும் முயற்சியில் நேதாஜி ஈடுபட்டதால், அச்சமுற்ற பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை சிறையில் அடைத்தது.

காந்தி நேதாஜி

அதே காலகட்டத்தில், இரண்டாம் உலகப்போர் தீவிரமாக வெடித்தது. நேசநாடுகளின் அங்கமான பிரிட்டன், அச்சுநாடுகளை எதிர்கொள்ளும் தனது போரில், பிரிட்டிஷ் இந்தியப் படைப்பிரிவில் இருக்கும் இந்திய வீரர்களை ஈடுபடுத்திக்கொள்ள நினைத்தது. ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த காந்தி, தனது பாசிச எதிர்ப்புக் கொள்கையால் சம்மதம் தெரிவித்தார். ஆனால், நேதாஜி உள்ளிட்ட வேறு சில தலைவர்களும் இதனை கடுமையாக எதிர்த்தனர்.

சிறையில் இருந்த நேதாஜி, பிரிட்டனை எதிர்த்து போர்செய்ய இதுதான் சரியான தருணம் என்று எண்ணினார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பதைப்போல, பிரிட்டனின் எதிரி நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற அச்சு நாடுகளுடன் கூட்டுசேர்ந்து, அவற்றின் உதவியோடு பிரிட்டிஷ் அரசை வீழ்த்தி, சுதந்திர இந்தியாவை மீட்டெடுக்கவேண்டும் எனத் திட்டமிட்டார். விளைவு, சிறையிலிருந்து தப்பித்து, மாறுவேடத்தில் ஐரோப்பா சென்றார். அங்கு ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்து ஆதரவு கோரினார்.

நேதாஜி - ஹிட்லர்

பின்னர் அங்கிருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் புறப்பட்டு சென்றவர், ஜெர்மனியின் கூட்டாளியான ஜப்பானுடன் கைக்கோர்த்தார். ஜப்பானின் தார்மீக ஆதரவு கிடைத்ததும் நேதாஜிக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. இந்தியர் ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, கலைந்துபோன இந்திய தேசிய ராணுவத்தை, மீட்டுருவாக்கம் செய்தார். மலேசியா, சிங்கப்பூர் போன்ற கிழக்காசிய நாடுகளில் இருந்த இந்தியத் தொழிலாளர்களை, குறிப்பாக தமிழர்களை ஒன்றிணைத்து ஐ.என்.ஏ. படையில் சேர்த்தார்.

இதுமட்டுமல்லாமல், ஜப்பானுடனான யுத்தத்தில், போர்க்கைதிகளாக சரணடைந்த பிரிட்டிஷ் இந்தியப் படையின் இந்திய வீரர்களை மீட்டெடுத்து, அவர்களையும் ஐ.என்.ஏ.வில் சேர்த்து புரட்சிக்கான புது ரத்தம் பாய்ச்சினார். ஜப்பான் உதவியோடு இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்த அனைவருக்கும் முறையான ராணுவப் பயற்சி அளிக்கப்பட்டது. டோக்கியோ கேடட்ஸ் எனும் படைப்பிரிவை ஏற்படுத்தி விமானப்படை பயிற்சியும் கொடுக்கப்பட்டது.

ஜப்பான் ராணுவம், பிரிட்டனிடம் போரிட்டு கைப்பற்றிய மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் ஐ.என்.ஏ.வின் இயங்கு தளமானது. 1943-ம் ஆண்டு சிங்கப்பூரில் வைத்து, ஆஸாத் ஹிந்த் (விடுதலை இந்தியா) எனும் நாடுகடந்த சுதந்திர அரசு பிரகடனத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். ஜப்பான், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட 9 நாடுகளின் அங்கீகாரத்தோடு, இந்திய அரசாங்கத்தின் தேசியத்தலைவராக இந்தியக்கொடியை பறக்கவிட்டார்.

நேதாஜி படை

அதே ஆண்டு, அந்தமான் நிக்கோபர் தீவுகளை கைப்பற்றிய ஜப்பான் ராணுவம் அதை நேதாஜியின் ஐ.என்.ஏ. வசம் ஒப்படைத்தது. 1943 டிசம்பர் இறுதியில், முதன்முறையாக இந்திய மண்ணான போர்ட் பிளேரில் சுதந்திரக்கொடியை ஏற்றினார் நேதாஜி. மேலும், அத்தீவுகளுக்கு சாஹேத், சுவராஜ் (தியாகம், சுதந்திரம்) என்று புதிய பெயர்களையும் சூட்டினார். (நேதாஜியின் இந்த வரலாற்று நிகழ்வை பெருமைப்படுத்தும் விதமாக,அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள ரோஸ், நீல், ஹேவ்லாக் ஆகிய மூன்று தீவுகளின் பெயர்களை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு, சாஹேத் தீவு, சுவராஜ் தீவு என இந்திய அரசாங்கம் கடந்த 2018-ம் ஆண்டு பெயர்மாற்றம் செய்ததும் குறிப்பிடத்தக்கது).

நேதாஜி இந்திய தேசிய கொடி

இவ்வாறாக, நேதாஜியின் ஐ.என்.ஏ. படைக்கும், ஜப்பான் படைக்கும் இடையேயான ராணுவ நல்லுறவு வலுப்பெற்றது. இருவருக்கும் பொது எதிரியான பிரிட்டனை வீழ்த்தவே, இருபடைகளும் கூட்டுசேர்ந்து அரகான் காட்டின் எல்லைப்பகுதியில், நிலைகொண்டு நிற்கிறது என்ற புரிதல் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும்.

சரி வாருங்கள், மீண்டும் போர்க்களம் புகுவோம்!

அரகான் காடுகளின் ஆபத்துநிறைந்த பகுதிகளை ஜப்பான் ராணுவமும், ஐ.என்.ஏ. படையும் கடந்துவருவது சாத்தியமில்லை என்றே கருதியது பிரிட்டிஷ் இந்தியா. ஆனால், அவற்றின் யூகங்களெல்லாம் ஜப்பான்-ஐ.என்.ஏ படை வீரர்களின் பூட்ஸ்கால்களின் வேகம் தவிடுபொடியாக்கியது. சுமார் 15,000 ஜப்பான் வீரர்கள், 2,000 ஐ.என்.ஏ. வீரர்களுடன் அசூரவேகத்தில் புறப்பட்ட கூட்டம் பர்மா எல்லையைக்கடந்து இந்திய எல்லைக்குள் நுழைந்தது. நேதாஜியின் கட்டளைப்படி, கர்னல் சவுகத் அலி மாலிக் (S.A.Malik) ஐ.என்.ஏ படைக்கு தலைமை தாங்கினார். ஜப்பான் படைகளை முடாகுச்சி (Mutaguchi) வழிநடத்தினார்.

அடிமை விதையும் சுதந்திர வேரும்!

கடுமையான சமர். வெறும் 1,500 படை வீரர்களே எதிரணியான பிரிட்டிஷ் இந்தியப் படையில் இருந்தனர். ஜப்பான்-ஐ.என்.ஏவின் யூ கோ (U GO) தாக்குதல் யுக்தியை சமாளிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்தது பிரிட்டிஷ் இந்தியப் படை. உண்மையில் சொல்லப்போனால், இந்தியர்களே இந்திய விடுதலைக்காக, இந்தியர்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் தர்மசங்கடமான சூழல்தான் அந்தப்போர்க்களம். ஆம், பிரிட்டனுக்கும் ஜப்பானுக்குமான அதிகாரப்போட்டியில் இரண்டுபக்கங்களிலும், அப்பாவி இந்தியர்களே ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். தாய்நாட்டின் விடுதலைக்காக, சொந்தநாட்டு மக்களே எதிரெதிரணியின் நின்றுகொண்டிருப்பது தான் காலத்தின் அவலமாக, களத்தின் பெருத்த சோகமாக அமைந்தது.

ஜப்பான்-ஐ.என்.ஏவின் ஓயாத தாக்குதல் அலை, பிரிட்டிஷ் இந்தியப்படைகளைப் அடித்து பின்னால் போட்டது. 1944, ஏப்ரல் 14-ல் மணிப்பூரில் இருக்கும் மொய்ராங் எனும் இடத்தை வெற்றிகரமாக கைப்பற்றியது. வரலாற்றில் முதல்முறையாக போர் நடவடைக்கையின் மூலம் ஐ.என்.ஏ. பெற்ற முதல் இந்தியப் பகுதியானது மொய்ராங். அங்கு கர்னல் எஸ்.ஏ.மாலிக் மற்றும் மைரேம்பம் கொயெரெங் சிங் (Mairembam Koireng Singh) உள்ளிட்ட மணிப்பூர் மக்களின் பேராதரவுடன் இந்திய தேசியக்கொடியை உயரத்தில் பறக்கவிட்டு, முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.

ஐ.என்.ஏ. போர் படை

Also Read: ”நேதாஜி சாகவில்லை..மலேசிய காட்டில் இருக்கிறது மர்மம்!”- ஐ.என்.ஏ வீரர் துரைராஜ்

தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தது படை. ஜப்பான் - ஐ.என்.ஏவுக்கு மணிப்பூர் பழங்குடிகள் உறுதுணையாக நின்றனர். பலர் படையில் சேர்ந்து போரை வலுப்படுத்தினர். அதேபோல், பிரிட்டிஷ் இந்திய படைகளுக்கு நாகா பழங்குடியினர் பக்கபலமாக நின்றனர். மேலும், மவுண்ட்பேட்டன் உத்தரவின்பேரில், ராணுவதளபதிகள் ஜெஃப்ரி ஸ்கூனெஸ், ஜெனரல் வில்லியம் ஸ்லைம் உள்ளிட்டோருடன் பல்லாயிரக்கணக்கான படைவீரர்களும் வந்துசேர்ந்து பிரிட்டிஷ் இந்திய படைகளின் பலத்தை மேலும் பெருக்கினர். நாகலாந்தின் கோஹிமா நகரையும் ஐ.என்.ஏ. தன்வசப்படுத்தியது. பின்வாங்கிக்கொண்டே சென்றிருந்த பிரிட்டிஷ் இந்திய படை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜப்பான் படைகள் வரும் துமு, திமாபூர் உள்ளிட்ட சாலைகள் ஒவ்வொன்றாக துண்டித்து.

வடகிழக்கு இந்தியா

இருப்பினும் இடைவிடாத போர் இன்னும் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. அடுத்த இலக்காக மணிப்பூரின் இம்பால் நகரம் தீர்மானிக்கப்படுகிறது. ஜப்பானின் 15-வது படைப்பிரிவும் ஐ.என்.ஏ.நேத்வின் பகதூர் படையின் சூறாவளி தாக்குதல் இம்பால் நகரையே சுற்றி வளைத்தது. வெற்றிக்கான இடைவெளியில் கேர்ரிசன் மலைத்தொடரின் (Garrison Hill) ஒரு சிறிய டென்னிஸ் கோர்ட் மட்டுமே இருந்தது. ஆனால், துர்திஷ்டவசமாக களத்தை மாற்றி எழுதியது காலநிலை!

பருவமழை, நோய்தொற்றுகள், நேரம் பார்த்து பிரிட்டிஷ் இந்தியப் படைகளின் பதிலடி தாக்குதல் என எல்லாம் ஒன்றுசேர்ந்து ஜப்பான் - ஐ.என்.ஏ. படையை ஒன்றுமில்லாமல் ஆக்கியது. மார்ச் மாதம் தொடங்கி ஜூலை வரை சுமார் ஏழு மாதங்கள் தொடர்ந்த இந்த போர், வரலாற்றில் மிகவும் கொடூரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம், பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஜப்பான், ஐ.என்.ஏ. படைவீரர்களில் ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் காட்டிலேயே மாண்டுபோயினர். நோய்வாய்பட்டு திரும்பியவர்கள் பலரும் பசிக்கொடுமையின் கோரப்பிடியில் பாதி வழியிலேயே தங்கள் உயிரைவிட்டனர். பலர் காணாமல் போயினர். ஈடுசெய்யமுடியாத இழப்புடன் ஜப்பான் - ஐ.என்.ஏ. படை தோல்வியைத் தழுவ, பிரிட்டிஷ் இந்தியா மீண்டும் எழுந்தது.

``Battle of Imphal" என்றழைக்கப்படும் இந்தப்போர் தான் இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டன் நடத்திய மிகப்பெரிய யுத்தம் என 2013-ம் ஆண்டு லண்டன் தேசிய ராணுவ அருங்காட்சியத்தில் நடந்த கூட்டத்தில் தேர்வுசெய்யப்பட்டது. ஆனால், வரலாற்றில் இது ஒரு மறக்கப்பட்ட போராக (forgotten war) இன்றளவும் இருந்து வருகிறது. மொய்ராங் இந்திய தேசிய இராணுவ அருங்காட்சியகத்தின் போர் கருவிகளும், கோஹிமா இம்பாலில் நடப்பட்டிருக்கும் போர் நினைவுச்சின்னங்களும் இன்னும் அப்படியேத்தான் உள்ளது. மாபெரும் யுத்தத்தின், தியாக வரலாற்றைத் தாங்கியபடி துயிலுறங்குகிறது.

இம்பால் போர் நினைவுத் தூண்

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் உள்ளிட்ட அச்சு நாடுகள் சரணடைந்து வீழ்ந்த பின்பு நேதாஜியின் மர்ம மரணம் நடந்தேறிய பின்பு, பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் எஞ்சியிருந்த ஏராளமான ஐ.என்.ஏ. படைவீரர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தண்டணையளிக்க முயற்சித்தது. இது இந்திய மக்களின் மனதில் அனுதாபத்தையும், ஆத்திரத்தையும் தூண்டியது. பிரிட்டிஷ் இந்தியப் படையில் இருந்த இந்திய வீரர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, மனமாற்றத்தைத் தூண்டியதாகவும் சொல்லப்படுகிறது. இந்திய வீரர்களின் விசுவாசம் இனியும் நமக்கு கிடைக்காது, எந்நேரமும் நமக்கு எதிராகக்கூட இவர்கள் மாறலாம் என்று எண்ணியதால்தான், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டு வெளியேற முடிவெடுத்தது என்றும் நேதாஜி ஐ.என்.ஏ ஆதரவாளர்களால் அப்போதும் சொல்லப்பட்டது.

நேதாஜி படை

இந்த சம்பவங்கள் குறித்து, பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களான எட்வர்ட் மற்றும் மைக்கேல் தாங்கள் எழுதிய ``The Last Years Of British India" (page: 93) எனும் நூலில் கூறியிருப்பதாவது,

என பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இரண்டு பக்கங்களிலும் இருந்து சண்டையிட்டது இந்திய வீரர்களே! ஆனால் யார் சரியான பக்கத்தில் இருந்தார்கள் என்பது இன்றுவரையிலும் விவாதத்திற்குரிய ஒன்றாகவே பேசப்பட்டுவருகிறது.



source https://www.vikatan.com/news/politics/do-you-know-about-netajis-ina-force-vs-british-indian-army-war

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக