Ad

வியாழன், 2 மார்ச், 2023

``கும்மிடிப்பூண்டியை தாண்டாத ஸ்டாலின் நேஷனல் லீடரா? ; அது பகல் கனவு" - அண்ணாமலை பேச்சு

பா.ஜ.க-வின் சக்திகேந்திர பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று விழுப்புரத்தில் தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்த பகுதிகளில் பா.ஜ.க மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த கட்டத்திற்கு பா.ஜ.க சென்றிருக்கிறது. குறிப்பாக, உள் கட்டமைப்புகளை வைத்து இங்கு அரசியல் நடப்பதே கிடையாது. சாதியை சார்ந்துதான் இங்கு அரசியலே நடந்திருக்கிறது. அதை பா.ஜ.க உடைத்துக் கொண்டிருக்கிறது. மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் வந்து கொண்டிருக்கின்றன.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா - தேர்தல் முடிவுகள்

இந்த மூன்று மாநிலத்திலும் அரசியலில் நிரந்தரமாக யாரும் ஜெயிக்க முடியாது. ஒரு குழப்பமான தேர்தல் காலம் அது. அதனை பா.ஜ.க உடைத்திருக்கிறது என்பதுதான் மக்கள் நமக்கு கொடுத்திருக்கும் முதல் செய்தி. 1947 - 2014 வரை இந்திய பிரதமர்களாக இருந்த அனைவரும் சேர்ந்து எத்தனை முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றார்களோ... அதைவிட அதிகமாக கடந்த 9 வருடங்களில் மோடி அவர்கள் அப்பகுதிகளுக்கு சென்றிருக்கிறார்.

அண்ணாமலை - விழுப்புரம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொருத்தவரை, எப்போதுமே தேர்தலின் தீர்ப்பு வந்த பிறகு மக்கள் கொடுத்திருக்கக் கூடிய செய்தியை நாம் தலைவணங்கி ஏற்க வேண்டும். அது நம் அரசியலில் மிக முக்கியமானது. அப்படித்தான் அனைத்து தேர்தலையும் பா.ஜ.க பார்க்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 மாதமே இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல 2024 தான் எங்களுக்கான தேர்தல்.

மேலும், 'இந்த இடைத்தேர்தல் பாஜக-விற்கானது இல்லை. அதனால் நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை' என்பதை தெளிவாக முன்பே சொல்லியிருந்தோம். கூட்டணி தர்மத்தின் படி, எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளருக்காக உயிரைக் கொடுத்து பாடுபட்டிருக்கிறோம். எனவே, வந்திருக்கும் முடிவை தலைவணங்கி ஏற்கிறோம். 2024 களம் முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும். இதுவரை 87% இடைத்தேர்தல் முடிவுகள்... தமிழகம் மற்றும் இந்திய அளவிலான அரசியல் வரலாற்றிலும் ஆளுங்கட்சியை நோக்கித்தான் போயிருக்கிறது. 2024 தேர்தலை நாங்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த இடைத்தேர்தல் நிலவரத்தை பொருத்தமட்டில், 'தி.மு.க அரசின் செயல்பாட்டை மக்கள் ஆராய்ந்து ஓட்டு போட்டுள்ளனர்' என்ற கருத்தை நான் ஏற்கமாட்டேன். அரசியலில், அதிகாரத்தில் இருக்கும் ஒரு ஆளுங்கட்சியை எதிர்க்கும் போது எந்த அளவிற்கு பலம் தேவைப்படுகிறது என்பதை இது உணர்த்தியிருக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

தி.மு.க மீது மக்களிடம் அதிருப்தி இருக்கிறது. 2024 வரை வேறெந்த இடைத்தேர்தலும் வரக்கூடாது. அனைத்து எம்.எல்.ஏ-களும் உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க வேண்டும். திருமாவளவன் அண்ணன், தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியில் வருவதற்கு ஒரு காரணத்தை தேடுகிறார். அவர், ஒரு புது அரசியலை ஸ்டாலின் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார். கூட்டணியில் இருந்து வெளியில் வருவதாக இருந்தால் தைரியமாக வாருங்கள். வெளியில் வருவதற்கு கூட தைரியம் இல்லாமல் பேசுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் சொல்வதெல்லாம்... சித்தாந்தத்தின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். பா.ஜ.க என்றும் தேசியத்தின் பக்கம்.

நரேந்திர மோடி அவர்களை எந்த கட்சி முழுமையாக ஏற்றுக் கொண்டு களத்தில் இருக்கிறார்களோ, அந்த கட்சியோடு பா.ஜ.க கூட்டணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அண்ணன் திருமா அவர்கள், வெளியில் வருவதாக இருந்தால் தைரியமாக வரலாம். சாக்குப் போக்கு சொல்வது ஏன் என தெரியவில்லை. திட்டுவதற்கெல்லாம் ஒரு கூட்டமா..? அவர்களுடைய தோழர்களே ஒரு கடையை உடைத்துவிட்டு, மருத்துவமனையில் படுப்பதை போல் எல்லா கட்சியும் இருக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

பா.ஜ.க வித்தியாசமான கட்சி. எங்களோடு வந்து பார்த்தால்தான் திருமா அண்ணனுக்கு தெரியும். எப்போதும் அந்தப் பக்கமே நாற்காலியை போட்டு அமர்ந்திருப்பதால், பா.ஜ.க மகிமை சில நேரங்களில் அவருக்கு தெரிவதில்லை. 
திருமாவளவன், அண்ணாமலை

நான், நேற்று பேசியதை தான் நாளையும் பேசுவேன். ராணுவ வீரர்கள் எல்லையில் நிற்பது அத்து மீறுபவர்களை சுடுவதற்கு தான். யார் வந்தாலும் எல்லையில் சுட்டு வீழ்த்த வேண்டும். அவர்களை உள்ளே விட்டு விட்டால் அப்பாவி மக்களை குண்டு வைத்துக் கொள்வார்கள். பா.ஜ.க ஆட்சியில் அது நடக்காது. உதாரணமாக, காஷ்மீரில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள். அதுதான் எங்களுடைய அரசு. அந்த அரசின் ஒரு தொண்டனான இந்த அண்ணாமலை, அப்படித்தான் பேசுவான். இதற்கெல்லாம் திருமாவிற்கு பயமாக இருந்தால் என்ன பண்ண முடியும். இவர்களுடைய அரசியல் இவ்வளவு தான். இதையெல்லாம் பார்ப்பதற்கு எங்களுக்கு நேரமும் இல்லை, காலமும் இல்லை.

தி.மு.க கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். வரும் காலங்களில் பா.ஜ.க இன்னும் அதிகமாக உழைக்கும். அ.தி.மு.க கூட்டணி பலமாகத்தான் இருக்கிறது. இடைத்தேர்தல் முடிவை வைத்து எந்த ஒரு கருத்தையும் சொல்ல முடியாது. பட்டியல் சமூக மக்கள் பா.ஜ.க பக்கம் வர ஆரம்பித்து விட்டதால், திருமா அவர்களுக்கு கோபம். தடா பெரியசாமியுடன் முதலில் திருமா விவாதிக்கட்டும். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இணைவது அந்த கட்சிக்கான முடிவு. கூட்டணியில் இருக்கும் நாங்கள் அதைப் பற்றி சொல்ல முடியாது. தேசியக்கட்சி என்றால் இத்தனை இடங்களில் தேர்தலில் நின்றிருக்க வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது.

மோடி - ஸ்டாலின்

அரவிந்த் கெஜ்ரிவால் கூட, சரியோ தவரோ... வேறு மாநிலங்களின் தேர்தலில் நின்று பார்த்துவிட்டு, டெல்லியோடு இப்போது ஒதுங்குகிறார். ஆனால், "நான் ஏற்கனவே தேசிய அரசியலில் வந்து விட்டேன்" என்று சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கும்மிடிப்பூண்டியை தாண்டாதவர்... எப்போது தேசிய அரசியலில் வந்தீர்கள்..? மம்தாவின் பதவியேற்பு விழாவிற்கு சென்று ஒரு முறை பேசிவிட்டால் தேசிய அரசியலா? எனவே, தமிழகத்தில் இருந்து யாராவது தேசிய அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னால் அது பகல் கனவு. தி.மு.க., மற்ற மாநிலங்களில் தனது கிளைகளை தொடங்கி, அங்கு நடைபெறும் தேர்தலில் 1% ஓட்டையாவது வாங்கிவிட்டு, 'தேசிய அரசியலில் வந்துவிட்டோம்' என்று சொல்லட்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/annamalai-attack-stalin-thiruma-in-villupuram-press-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக