Ad

வியாழன், 3 செப்டம்பர், 2020

ரஜினி ரெடி... `அண்ணாத்த' ஷூட்டிங் எங்கே, எப்போது? #VikatanExclusive

செப்டம்பர் 1 முதல் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிற அறிவிப்பு வந்ததுமே தமிழ் சினிமாவில் பல படங்களின் ஷுட்டிங்குகள் தொடங்கிவிட்டன. ஆனால், பெரிய நடிகர்களின் படங்களின் ஷூட்டிங் மட்டும் எப்போது ஆரம்பிக்கும் என்கிற தெளிவில்லாமல் இருந்த நிலையில் ரஜினியின் 'அண்ணாத்த' படம் குறித்து விசாரித்தேன்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், `சிறுத்தை' சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் `அண்ணாத்த'. இந்தப் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இதில் ரஜினி நடித்தக் காட்சிகள்தான் பெரும்பாலும் படமாக்கப்பட்டன. பெரிய பொருட்செலவில் செட் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் கொரோனா காரணமாக லாக்டெளன் அறிவிக்கப்பட ஷூட்டிங் மொத்தமாக நிறுத்தப்பட்டது.

'அண்ணாத்த'

முதலில் இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீஸ் எனத் திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக 2021 பொங்கலுக்கு 'அண்ணாத்த' ரிலீஸாகும் என கடந்த மே 12-ம் தேதி சன்பிக்சர்ஸ் அறிவித்தது. அப்படியானால் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என்கிற குழப்பங்கள் இருந்த நிலையில் 'அண்ணாத்த' படத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினேன்.

''ஷூட்டிங் தொடங்குவதற்கான எல்லா வேலைகளும் ஆரம்பமாகிவிட்டன. கிழக்குக் கடற்கரைச்சாலையில் ஷூட்டிங் நடத்துவதற்கான இடம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இங்கே செட் போடுவதற்கான வேலைகள் இன்னும் சிலநாள்களில் தொடங்கிவிடும். எல்லா நடிகர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டுவிட்டது. எல்லோரும் ஷூட்டிங் வர ஓகே சொல்லிவிட்டார்கள். நவம்பரில் இருந்து ஷூட்டிங் தொடங்குகிறது'' என்றார்கள்.

''ரஜினி ஓகே சொன்னாரா?'' எனக் கேட்டால் ''ரஜினி ஓகே சொன்னதால்தான் இந்த ஷூட்டிங் வேலைகளே தொடங்கியிருக்கிறது. ரஜினி இல்லாத காட்சிகள்தான் முதலில் படமாக்கப்பட இருக்கிறது. 2021 ஜனவரியில் இருந்து ரஜினி ஷூட்டிங் வருவேன் எனச் சொல்லியிருக்கிறார். டிசம்பருக்குள் அவர் இல்லாத மற்றக்காட்சிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு, அதுவரைக்குமான போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளும் முடிக்கப்படும். அதிகபட்சம் ஒரு மாதம்தான் ரஜினியின் கால்ஷீட் தேவை. ஏற்கெனவே அவர் நடிக்கவேண்டிய 50 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இரண்டு சண்டை காட்சிகள்தான் எடுக்கப்படவேண்டும். அதனால் ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டுக்கு படம் நிச்சயம் ரிலீஸாகும்'' என்றார்கள்.

அண்ணாத்த

கிழக்குக் கடற்கரைச் சாலையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் செட் போடப்பட இருப்பதாகத் தெரிகிறது. கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்பதால் அதற்கு ஏற்றவகையில் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. நயன்தாரா - கீர்த்தி சுரேஷ் சம்பந்தபட்ட காட்சிகள் முதலில் எடுக்கப்பட இருப்பதாகச் சொல்கிறார்கள். குஷ்பு, மீனாவுக்கும் ஷூட்டிங் நாள்கள் குறித்த விவரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்போதைக்கு 75 பேருக்கு மட்டுமே ஷூட்டிங் ஸ்பாட்டில் அனுமதி என்று சொல்லப்பட்டிருந்தாலும் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நவம்பரில் நிலைமை மாறிவிடும், திட்டமிட்டபடி அதிக நபர்களுடன் ஷூட்டிங் நடத்தலாம் என்கிற ஐடியாவில் இருக்கிறது படக்குழு.

அண்ணன் தங்கை சென்ட்டிமென்ட் படமான 'அண்ணாத்த' படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்பு, மீனாவும் நடிக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். காமெடி கேரக்டரில் சூரியும், சதிஷூம் நடிக்கிறார்கள். படத்தின் வில்லன் யார் என்கிற அறிவிப்பை இன்னும் சில நாள்களில் எதிர்பார்க்கலாம்.
ரஜினி, குஷ்பு, மீனா

Also Read: தமிழகத்துல விவசாயி... டெல்லியில தீவிரவாதி! - விசாரணையில் வெற்றிமாறன்

ஏற்கனவே கமல் பிக்பாஸ் ஷூட்டிங்கிற்கு ஓகே சொல்லிவிட்டார். 'இந்தியன் -2' படத்தின் ஷூட்டிங்கும் அக்டோபருக்கு மேல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது 'அண்ணாத்த'யும் ஷூட்டிங்கிற்கு ஓகே சொல்லிவிட்டதால் இனி விஜய், அஜித், சூர்யா, தனுஷ் எனத் தமிழில் முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்த படங்களின் ஷூட்டிங்கும் இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-details-of-rajnikanths-annaatthe-shoot

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக