Ad

புதன், 30 செப்டம்பர், 2020

எங்களுக்கு பவுண்டரி வேணாம் சாரே... ஓடி, ஓடியே ரன் சேர்த்த ஐதராபாத்... பம்மிய டெல்லி! #DCvSRH

கடைசி இரண்டு மேட்சிலும் கெத்தாக ஜெயித்து அபுதாபிக்கு வீரநடைப் போட்டுவந்தது டெல்லி கேப்பிடல்ஸ். அப்படியே நேரெதிராக கடைசி இரண்டு மேட்சிலும் கெத்தாக தோற்று சோகநடைப் போட்டுவந்தது சன்ரைஸர்ஸ் ஐதராபாத்.

`முழிச்சுகோ, சன்ரைஸர்ஸ் ஜெயிச்சுக்கோ' என ஒருபக்கம் வேண்டுதலும், `இது பழைய டெல்லி இல்ல. புது டில்லி. வெர்ஷன் 2.0' என சீண்டுதலும் அபுதாபியில் அசிரீரியாக எதிரொலித்துக்கொண்டிருந்தது. டாஸ் ஜெயித்த ஷ்ரேயாஸ், பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார். டெல்லி அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலாக இணைந்தார் இஷாந்த் சர்மா.

#DCvSRH

`நாலு பேர் நாலு விதமாக பேசினாலும், நாலு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஒரு அணிக்கு அனுமதி என்பதுதான் ஐபிஎல்-ன் விதி. 'என்ன செய்ய, எங்க தலைவிதி' என இரண்டு வாரமாக சோகத்தில் இருந்தார்கள் சன்ரைஸர்ஸ் ரசிகர்கள். வார்னர்தான் கேப்டன் என்பதால், அவரே அவரை டிராப் செய்யமாட்டார். வார்னருக்கு நல்ல பேச்சுத் துணையாகவும் பேட் துணையாகவும் இருக்கிறார் என பேர்ஸ்டோவையும் டிராப் செய்ய மாட்டார். ரஷித்கான் பெயரை எல்லாம் தனியாக எழுதத் தேவையில்லையென பேப்பரிலேயே ப்ரின்ட் அடித்து வைத்திருப்பார்கள். மீதமிருப்பது ஒரு இடம், அதை கேன் வில்லியம்சனுக்கு கொடுப்பதில்தான் இத்தனை நாள்களும் நடந்தது இழுபறி!

சன்ரைஸர்ஸின் டாப்-ஆர்டர் முடிந்ததும் லோயர் ஆர்டர் வந்துவிடும். மிடில் ஆர்டர் என்கிற ஒன்று அங்கு இல்லவே இல்லை. `இந்தப் பிரச்னையை சமாளிக்க கேன் வில்லியம்சன்தான் சரி. ஏன் இனி இழுபறி' என காரசாரமாய் அக்கட தேசத்தினர் திட்டித்தீர்த்தனர். வார்னரும், வார்னிங்கை புரிந்துகொண்டு வில்லியம்சனைக் களத்துக்குள் இறக்கினார். சாஹாவுக்கு பதிலாக அணியில் இணைந்தார் அறிமுக வீரர் அப்துல் சமத். செந்தட்டிக் காளையும் செவத்தக் காளையுமாக வார்னரும் பேர்ஸ்டோவும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இஷாந்த் ஷர்மா முதல் ஓவரை வீசவந்தார். பவுண்டரியே இல்லாமல் சிங்கிள், டபுள்ஸ், ட்ரிப்ள்ஸ் தட்டி 9 ரன்கள் சேர்த்தனர். 

#DCvSRH

ரபாடா வீசிய இரண்டாவது ஓவரில், மிட் ஆன் திசையில் பவுண்டரி ஒன்றை அறைந்தார் வார்னர். அதே ஓவரின் கடைசிப்பந்து, இம்முறை பேர்ஸ்டோவின் மர்ம இடத்தைத் தாக்கியது. வலியில் சுருண்டார் பேர்ஸ்டோ. இப்படி, 142 கி.மீ வேகத்தில் வீசிய பந்து பேட்ஸ்மேனை `டிச்' செய்துவிட்டதே எனும் வருத்ததில் `உச்ச்' கூட கொட்டாமல் சிரித்தார் பெளலர் ரபாடா. இதெல்லாம் பாவம் மை சன்! இஷாந்த் வீசிய 3-வது ஓவரில், வெறும் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தன. நோர்க்யா வீசிய 4-வது ஓவரிலும் அதே 3 ரன்கள். ஸ்டாய்னிஸ் வீசிய 5வது ஓவரில் ஒரு லெக் பைஸ் உட்பட, வெறும் 4 ரன்கள். `பவர்ப்ளேயில் வீசின பால் எல்லாம், டாட் பாலா போகுதே' என தலையில் அடித்துக்கொண்ட ரசிகர்களை, அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து உற்சாகம் அளித்தார் வார்னர். பவர்ப்ளேயின் முடிவில் விக்கெட் இழப்பின்றி நிதானமாக ஆடிக்கொண்டிருந்தது ஐதராபாத் அணி.

ஆறாவது ஓவரை வீசவந்தார், அமேசான் காடுகளின் அரியவகை மூலிகைகளைக் கொண்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருக்கும் அமித் மிஷ்ரா. மிட்-ஆன் பக்கம் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் பேர்ஸ்டோ. ஸ்டாய்னிஸ் வீசிய 8 ஓவரில் பவுண்டரிகள் ஏதுமில்லை. 9-வது ஓவரில் இஷாந்த் வீசிய ஒரு ஸ்லோயர் பந்தை, சிக்ஸருக்கு தூக்கி கடாசினார் வார்னர். மாலை ஆறு மணிக்கு எழுந்து, வெண்பொங்கல் சாப்பிட்டதுபோல் மந்தமாக நகர்ந்துக்கொண்டிருந்த மேட்ச், 10வது ஓவரில்தான் கொஞ்சம் களைகட்டியது. ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வார்னர், மூன்றாவது பந்தில் கேட்சாகி அவுட்டானார். வார்னரின் க்ளவுஸில் சன்னமாய் உரசிக்கொண்டு போன பந்து, பன்ட் கைகளில் தஞ்சமடைந்தது. அதே ஒவரின் கடைசிப் பந்தில், ஒரு பவுண்டரியைப் பறக்கவிட்டார் பேர்ஸ்டோ.

#DCvSRH

அக்‌ஸர் பட்டேல், 11-வது ஓவரை வீச வந்தார். பேர்ஸ்டோவுக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. விக்கெட் எடுத்த குஷியில், 12 ஓவரை வீசிய மிஸ்ராவுக்கு, இம்முறை பாண்டேவின் விக்கெட்டும் கிடைத்தது. டெல்லி ரசிகர்கள் குஷியாக, அதனினும் குஷியானார்கள் ஐதராபாத் ரசிகர்கள். ஏன்னா, கேன் வில்லியம்சன் என்ட்ரி! நிதானமாக தனது இன்னிங்ஸைத் தொடங்கியவர், நோர்க்யா வீசிய 16-வது ஓவரிலும், ஸ்டாய்னிஸ் வீசிய 17-வது ஓவரிலும் தலா இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டார். இருந்தாலும், ஐதராபாத்தின் இன்னிங்ஸ் இரண்டாவது கியரிலேயே தவழ்ந்துக்கொண்டிருந்தது. 18-வது ஓவரில், அரை சதம் கடந்திருந்த பேர்ஸ்டோ அவுட்டானதும் களத்துக்குள் நுழைந்தார் அறிமுக வீரர் அப்துல் சமத். மிகவும் சமத்தாக, 19-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் பறக்கவிட்டார். ரபாடா வீசிய கடைசி ஓவரில், கேன் வில்லியம்சனையும் அவுட் செய்து நான்கு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். 20 ஓவரின் முடிவில், 162/4 என நிறைவு செய்தது ஐதராபாத்.

163 ரன்கள் எடுத்தால் `ஹாட்ரிக்' வெற்றி என இன்னிங்ஸைத் துவங்கினர் தவான்-ஷா ஜோடி. `நாங்க சப்பையான ஸ்கோர் அடிச்சு, அந்த சப்பையான ஸ்கோரைக் கூட அடிக்கவிடாம எதிரணியை சுருட்டுறதுலதான் நாங்க ஸ்பெஷலிஸ்டே' என தைரியமாக முதல் ஓவரை வீசினார் புவி. 5-வது பந்தை அருமையான அவுட் ஸ்விங்கராக வீசி, ப்ரித்வி ஷாவின் விக்கெட்டைக் கழட்டிய புவி, இந்த சீசனின் தன் முதல் விக்கெட்டை பதிவு செய்தார். கலீல் அகமது வீசிய 2வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே. புவி வீசிய 3வது ஓவரிலும், நடராஜன் வீசிய 4வது ஓவரிலும், கலீல் வீசிய 5வது ஓவரிலும் தலா ஒரு பவுண்டரிகளை விளாசினார் கப்பார். 5வது ஓவரில் ஷ்ரேயாஸுக்கும் ஒரு பவுண்டரி கிட்டியது. பவர்ப்ளேயின் முடிவில் 34/1 என குழப்பம் கொடுத்தனர் டெல்லி வாலாக்கள்.

#DCvSRH

அபிஷேக்கும் ரஷீத்தும் வீசிய சுழற்பந்துகளில், டெல்லி பேட்ஸ்மேன்கள் பேட்டைச் சுழற்றத் திணறினர். பவர்ப்ளே முடிந்து, அடுத்த 6 ஓவர்களில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தனர். ரஷித்கானோ, ஷ்ரேயாஸ் மற்றும் தவான் என இரண்டு பெரிய விக்கெட்களைக் கழற்றியிருந்தார். அபிஷேக் வீசிய 13-வது ஓவரில், இந்த சீசனின் தன் முதல் சிக்ஸரை அடித்தார் பன்ட். அதற்கு துணையாக, அடுத்த பந்திலேயே இன்னொரு சிக்ஸரையும் அடித்தார். பன்ட்டுக்கு துணையாக ஹெட்மயரும், 15-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை வெளுத்தார். `இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர், ஒண்ணுக்கு ஒண்ணு துணையா இருந்து மேட்சை ஜெயிச்சுடலாம்பா' என ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள் கேப்பிடல்ஸ் ரசிகர்கள். அடுத்த ஓவரிலேயே ஆனந்தக் கண்ணீர், அழுகையாக மாறியது. ஹெட்மயரின் விக்கெட்டைக் கழற்றினார் புவி. 

Also Read: பேர்ஸ்ட்டோ, வார்னர், வில்லியம்சன் பக்குவம், கிங் கான் சூழல்... டெல்லியைத் தள்ளிய ஐதராபாத்! #DCvSRH

ஆட்டத்தின் போக்கைக் கண்டு பொங்கியெழுந்து வந்த ஸ்டாய்னிஸ், அதே ஓவரில் ஒரு பவுண்டரை விரட்டினார். அவருக்கு துணையாக பன்ட்டும் ஒரு பவுண்டரியை விளாசினார். மீண்டும், `இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர்...' எனும் வசனத்தை டெல்லி வாலாக்கள் சொல்லி முடிப்பதற்கு முன், பன்ட்டின் விக்கெட்டைக் கழற்றினார் ரஷீத்.

18வது ஓவரில், நடராஜன் வீசிய பந்தில் அவுட்டாகி நடையைக் கட்டினார் ஸ்டாய்னிஸ். ரிசல்ட் தெரிந்துவிட்டது! ரபாடா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என பேட்டிங் பயிற்சி எடுத்தார். 147/7 என சுருண்டது டில்லி. `அதான் சொன்னோம்ல. அதுலதான் நாங்க ஸ்பெஷலிஸ்டே' என பெருமூச்சு விட்டார்கள் சன்ரைஸர்ஸ் ரசிகர்கள்.

"எங்களைவிட இந்த மைதானம், ஐதராபாத் அணிக்குதான் அத்துப்படி. அதான் நாங்க வாங்கினோம் முரட்டு அடி" என்றார் ஷ்ரேயாஸ். அடுத்து பேசிய வார்னர், "பவுண்டரி அடிக்கமுடியலைனா என்ன, ஓடி ஓடியே ரன் எடுப்போம். டெத் ஓவர் பெளலிங்கை கொஞ்சம் ட்யூன் பண்ணோம். வித்தையை காட்டிட்டாங்க" என்றார். ஆட்டநாயகன் விருதை வென்றார் ரஷீத்கான்.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-delhi-capitals-vs-sunrisers-hyderabad-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக