Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

ஒரு கிலோ விபூதி ₹500... நாட்டு மாடுகள் வளர்ப்பில் முதியவரின் அசத்தலான பிசினஸ்!

சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சம்பத். ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டாலும்கூட, தன்னுடைய ஆர்வத்தை சற்றும் குறைத்துக் கொள்ளாமல் இயற்கை விவசாயத்திலும், நாட்டு மாடு வளர்ப்பிலும் அசத்திவருகிறார்.

நாட்டு மாடுகள் மூலம் விபூதி

``நான் அரசு அங்கீகாரம் பெற்ற ஏலதாரர். என் அப்பா, தாத்தா என்று எல்லோரும் இயற்கை விவசாயிகள். அதனால நஞ்சால் விளையும் பொருட்களை உற்பத்தி செய்வதில் நாட்டமில்ல. என் மகன்கள், மகள் குடும்பத்தினர் உதவியோடு வெவ்வேறு இடங்களில் இயற்கை விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். அவர்கள் படித்து மற்ற துறைகளில் பணி செய்தாலும் பாரம்பர்ய இயற்கை விவசாயத்தையும் தொடர்கின்றனர். எந்த ஒரு செயல் செய்தாலும் ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொள்வேன். எங்களுக்குப் பிரதானமான தொழில் விவசாயம் என்பதால் இரசாயன உரத்தை நம்பியதில்லை. இயற்கை சார்ந்து வாழவேண்டும் என்பதை, எப்போதும் நினைத்துக் கொள்வேன். அனுதினமும் கடவுளை எண்ணுவதால் எனக்கு விபூதி இட்டுக்கொள்ளும் பழக்கம் உள்ளது. ஆனால் தூய்மையான விபூதி கிடைக்கவில்லையே என மனம் வருத்தப்பட்டது.

அதனால் என்னுடைய தேவைக்கு இரண்டு நாட்டு மாடுகளை வாங்கி, அதிலிருந்து சாணத்தில் பஸ்பம் செய்து தூய்மையான விபூதியைப் பெற்றேன். வாசம், வெண்மை நிறம் இல்லை என்றாலும் நெற்றியில் இட்ட திருப்தி கிடைச்சது. அதிலிருந்து தொடர்ந்து நான் தயாரிக்கும் விபூதியைத்தான் சூடுகிறேன். பின்னர் இந்த தூய்மையான விபூதியை பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டு பல நாட்டு மாடுகளை வாங்க ஆரம்பித்தேன்.

விபூதிக்கு சாண உருண்டை

நாகூரி, வெச்சூர், காங்கேயம், மலைநாட்டுக் கிடா, சாகிர்வால், தர்பார்கர், தஞ்சாவூர் குட்டை என இந்தியாவின் பாரம்பர்ய நாட்டு இன மாடுகளை பல இடங்களிலிருந்து வாங்கிவந்தேன். இப்ப என்கிட்ட கிட்டத்தட்ட 50 மாடுகள் இருக்கு. இதில் அதிகளவு பசுக்கள்தான். 8 வகையான இன மாடுகள் இருக்கு. இதில் காங்கேயம் மட்டும் 15. இந்த நாட்டு மாடுகள் சாணத்திலிருந்து மாதம் சராசரியாக 400 கிலோ விபூதி எடுக்கிறேன்.

இதற்காக 20 தொழிலாளர்கள் பணி செய்றாங்க. ஒவ்வொரு நபரும் மாடுகளையும், அதிலிருந்து பெறும் சாணத்தையும் ஒரு ஆன்மிக உணர்வோடு கையாளுகின்றனர். மாட்டிலிருந்து பெறும் சாணத்தை சேகரித்து உருண்டையாக்கி, ஈரப்பதம் இல்லாமல் காய வைத்து பின்பு பஸ்பம் ஆக்குகிறோம். பெற்ற சாணத்திலிருந்து விபூதியாக மாற்றமடைய 1 மாசம் வரை தேவைப்படும். அதனால் 3 நாட்களுக்கு ஒரு முறை மொத்தமாக சேகரித்து அடுத்த படிநிலைக்கு கொண்டுபோறோம். கிடைக்கும் வீபூதியை ஆன்மிக அன்பர்கள் தாங்கள் விரும்பும் கோயில்களுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர். மேலும் தனிப்பட்ட நபர்கள் ஒரு கிலோ, 2 கிலோ என்று கொரியர் மூலம் விபூதியைப் பெற்றுக்கொள்கின்றனர்.

விபூதி

விபூதி கிலோ - 500 ரூபாய் வரை கொடுக்கிறேன். கிராமங்களில் தற்போதும் விபூதியை நெத்தியில் இட்ட பின் மீதம் உள்ள விபூதியை வாயில போட்டுக்குவாங்க. அப்படி விபூதிய உணர்வுபூர்வமாக கையாளும்போது அதில் கிரானைட் கல் பொடியும், செயற்கை வாசனை திரவியமும் கலந்திருந்தால் ஆரோக்கியமா அமையுமா? அதனால்தான் விபூதியில் எந்தக் கலவையும் சேர்ப்பதில்லை.

இதை தொழிலா பார்க்காம ஆன்மிக தொண்டாகவும் நினைக்கிறேன். அதனால தூய்மையான தயாரிப்பில் சமரசம் ஆவதில்லை. எங்களுடைய தயாரிப்பு ராமேஸ்வரம், திருச்செந்தூர், வடபழனி, சபரி மலை, ஐய்யனார் கோயில்கள்னு பல முக்கிய கோயில்களுக்கும் சென்றுள்ளது. விபூதி போக கோமியத்தையும் விற்பனை செய்கிறேன். தேவைப்படும் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யம் செய்து நேரடியாக வழங்குறேன். மாடுகளில் கோமியத்தை சேகரிக்க பிரத்யேக தொட்டியும் அமைத்திருக்கேன்.

நாட்டு மாடுகள்

மாட்டிலிருந்து கிடைக்கும் பாலை, கன்றுகளின் தேவை போக வீட்டுத் தேவைக்கும் பயன்படுத்திக் கொள்கிறோம். இதில் எனக்கு பெரிய அளவு லாபம் இல்லை என்றாலும் போதுமான வருவாய் கிடைக்கிறது. இந்தக் கால்நடைகள் நடுவே சுற்றி வருவதால் என்னுடைய எல்லா கஷ்ட, நஷ்டங்களையும் நிமிடத்தில் மறந்துவிடுவேன்" என்றார் கணிவாய்.



source https://www.vikatan.com/news/agriculture/sivagangai-man-shares-how-he-started-vibhuti-business-from-native-breed-cows

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக