Ad

புதன், 30 செப்டம்பர், 2020

ஓர் அறுவடையில் ஏக்கருக்கு 7 டன் மகசூல்... செடி முருங்கைச் சாகுபடி வழிகாட்டுதல்!

செடி முருங்கைச் சாகுபடிக்குச் செம்மண் நிலம்தான் சிறந்ததாக இருக்கும் என்றாலும் மற்ற மண் வகைகளிலும் நன்றாக வளரும். ஈரப்பதம் குறைவான நிலப் பகுதியாக இருப்பதுதான் முக்கியம். நிலத்தை உழவு செய்து, பார் பிடித்து, ஏக்கருக்கு 6 டிராக்டர் தொழுஉரம் இட வேண்டும். 4 அடிக்கு 2 அடி இடைவெளியில் முருங்கை விதையை விதைக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும்.

செடி முளைக்க ஆரம்பித்த 20-ம் நாள் ஏக்கருக்கு 5 லிட்டர் பஞ்சகவ்யாவைச் சொட்டு நீரோடு கலந்து கொடுக்க வேண்டும். அதிலிருந்து 15 நாள்களுக்குப் பிறகு, செடி வளர்ச்சிக்காக ஒரு டேங்குக்கு 500 மி.லி என்ற கணக்கில் 5 லிட்டர் பஞ்சகவ்யாவைத் தெளிக்க வேண்டும். 30-ம் நாள் கொழுந்தைக் கிள்ளி விட வேண்டும். அப்போதுதான் செடியில் அதிக கிளைகள் உருவாகும். இல்லை என்றால் செடி மேல்நோக்கி உயரமாக வளர்ந்துவிடும். களை அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வோர் அறுவடைக்குப் பிறகும் ஒரு களை எடுக்க வேண்டும்.

காய்கறிச் சாகுபடி

45-ம் நாள், ஆமணக்குப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு மூன்றையும் தலா 50 கிலோ எடுத்துக்கொள்ள வேண்டும். மொத்தம் 150 கிலோ பிண்ணாக்குடன் 200 கிலோ தொழுவுரத்தைக் கலந்து ஒவ்வொரு செடிக்கும் ஒரு கையளவு வைக்க வேண்டும். 60-ம் நாள், 10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி தேமோர் கரைசலைக் கலந்து 10 டேங்க் தெளிக்க வேண்டும். இலையில் பூச்சித் தாக்குதல் இருந்தால் வேப்பிலை, இஞ்சி, பூண்டு மூன்றையும் தலா ஒரு கிலோ எடுத்து அரைத்து, சாறு எடுத்துப் பஞ்சகவ்யாவோடு கலந்து கொடுக்கலாம்.

120-ம் நாள் முதல் முருங்கை இலைகளை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 60 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு, ஒரு அறுவடைக்கு 5 முதல் 9 டன் வரை மகசூல் கிடைக்கும். சராசரியாக ஏக்கருக்கு 7 டன் கிடைக்கும். 10 வருஷத்துக்கு மேல இலை நல்லா தழைக்கிற வரைக்கும் மகசூல் எடுக்கலாம்.

முருங்கைச் சாகுபடி சம்பந்தமாகத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தோட்டக்கலை உதவிப் பேராசிரியர் முனைவர் எஸ்.முத்துராமலிங்கத்திடம் பேசினோம்.

``முருங்கையை அனைத்து வகையான மண்ணிலும் சாகுபடி செய்யலாம். ஆனால், முருங்கை மணல் கலந்த களிமண்ணில் நன்றாக வளரும். சற்று காரத்தன்மை அதிகமுள்ள மண்ணிலும் வளரும். மண்ணின் பி.ஹெச் அளவு 6.0-7.5 ஆக இருக்க வேண்டும். நிலத்தை உழும்போது மண் பொலபொலப்பாக இருக்குமாறு பார்த்து உழ வேண்டும். 1 மீட்டர் இடைவெளி விட்டு குழிகள் எடுத்து சுற்றிலும் உயரமாக மண் அணைக்க வேண்டும். நீர் தேங்குவதைத் தவிர்ப்பதற்கு முறையான வடிகால் வசதி செய்யப்பட வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு விதைக்க 1-2 கிலோ விதை தேவைப்படும். பி.கே.எம்.1 ரக முருங்கை ஏற்றது. மண் சார்ந்த நோய்களைத் தடுக்க ஒரு கிலோவுக்கு 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு ஒரு நாள் முன்பு தண்ணீரில் விதைகளை ஊறவைக்க வேண்டும். பின்னர், விதைகளுக்கு இடையில் 1 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். விதைத்த பின்னர் உயிர்த்தண்ணீர் கொடுக்க வேண்டும். முருங்கைக்குச் சொட்டுநீர்ப் பாசனம் நல்ல பலனைக் கொடுக்கும்.

முருங்கை விதை முளைக்கும் வரை ஈரப்பதமான சூழல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விதைத்த நாளிலிருந்து முளைக்க 8 நாள்கள் வரை ஆகலாம். விதை முளைத்த பிறகு, தட்பவெப்பநிலையைப் பொறுத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

விதைப்பு முடிந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்து மண் அணைக்க வேண்டும். ஒவ்வோர் அறுவடைக்குப் பிறகும் களையெடுத்தல் மற்றும் செறிவூட்டல் ஆகியவை செய்யப்பட வேண்டும். விதைத்த 70 முதல் 75 நாள்களுக்குப் பிறகு, முருங்கையில் முதல் அறுவடை செய்யலாம். செடியானது தரை மட்டத்திலிருந்து 45 - 60 செ.மீ உயரத்தில் இருக்கும்போது அறுவடை செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு 40-50 நாள்களுக்கு இடைவெளியில் அடுத்தடுத்த அறுவடை செய்யப்பட வேண்டும்" என்றார்.

முருங்கை சாகுபடி

- முருங்கை இலை சூப் பவுடர், முருங்கை இலை மாத்திரை, முருங்கை இலை டீ எனச் சமீபகாலமாக வெளிநாடுகளில் முருங்கை இலை சார்ந்த பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இது சார்ந்த உற்பத்தி நிறுவனங்களும் தமிழகத்தில் தற்போது அதிகமாகி வருகின்றன. பராமரிப்பு மற்றும் தண்ணீர் செலவு குறைவாக இருப்பதாலும், நிலையான வருமானம் கிடைப்பதாலும் விவசாயிகள் பலரும் முருங்கை இலை சாகுபடியை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்கா காகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி சுந்தரம். பரம்பரை விவசாயி. 5 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை விவசாயத்துக்குத் திரும்பியவர், முருங்கை இலை, மரவள்ளிக்கிழங்கு, கீரை வகைகள் எனப் பயிரிட்டு அசத்தலான மகசூலை எடுத்து வருகிறார். அவரது அனுபவப் பகிர்வுகளை உள்ளடக்கிய பசுமை விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க கிளிக் செய்க - https://bit.ly/36iVtm2

3 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 5,25,000 வருமானம்! - முருங்கை இலையில் முத்தான லாபம்! https://bit.ly/36iVtm2

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Pasumai Youtube Channel

இதுபோன்ற விவசாயம் தொடர்பான செய்திகள் மற்றும் பயனுள்ள வீடியோக்களைக் காண பசுமை விகடன் யூ-டியூப் சேனலுக்கு வாங்க. பசுமை விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய: bit.ly/pasumaiYoutube



source https://www.vikatan.com/news/agriculture/farmer-boopathy-shares-his-success-formula-for-drumstick-cultivation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக