Ad

திங்கள், 28 செப்டம்பர், 2020

ஷார்ஜாவில் மீண்டும் ஒரு புயல்... பீஸ்ட் மோடில் பேட்ஸ்மேன்கள், கலங்கி நின்ற பெளலர்கள்! #RRvKXIP

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம், வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள், குருநாதர் இல்லாத குயில்பாட்டு போல நேற்று நடந்த மேட்சும் அதிசயமோ, அதிசயம். மதுரையில் சில மாதங்கள் பட்டறையைப் போட்டு சங்கத்தமிழ் சொற்களை எல்லாம் தோண்டியெடுத்து எழுதினாலும், இந்த மேட்சின் சுவாரஸ்யத்தை எழுத்துகளில் கடத்துவது கடினமோ கடினம். "அப்படி என்னதான்டா நடந்துச்சு ஷார்ஜாவுல, பெரியவனே நீயாவது சொல்லேன்டா..." எனக் கேட்டால், ''22 வருசத்துக்குப் பிறகு ஷார்ஜாவுல புயல் அடிச்சது'' எனச் சொல்லலாம்.

ஷார்ஜவில் நடைபெற்ற ஐபிஎல்-ன் 9வது போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. சமபலம் கொண்ட அணிகள் மோதுகையில், சந்தேகமே இல்லாமல் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால், நேற்றைய மேட்சின் உண்மையான சுவாரஸ்யம், இவர்கள் சமபலம் கொண்ட அணிகள் அல்ல, செம பலம் கொண்ட அணிகள் என மிரள வைத்ததுதான்! டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார். `எவ்ளோ திமிரு இருக்கணும் உனக்கு' என எரிச்சலானார்கள் ராஜஸ்தான் வாலாக்கள்.

#RRvKXIP

ஜெயதேவ் உனத்கட் முதல் ஓவரை வீச, கே.எல்.ராகுலும் மயாங்க் அகர்வாலும் பஞ்சாபின் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் ஓவரில் இரண்டு சிங்கங்களும் இணைந்து மூன்று சிங்கிள்கள் தட்டினர். ராஜ்புத் வீசிய 2-வது ஓவரில் இன்னிங்ஸின் முதல் சிக்ஸரை அடித்து பீஸ்ட் மோடுக்கு மாறினார் மயாங்க். உனத்கட் வீசிய 3வது ஓவரில், மிட் விக்கெட்டைத் தாண்டி ஒரு பவுண்டரி, லெக் திசையில் ஒரு சிக்ஸர் விளாசினார் மயாங்க். ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரில், ஹாட்ரிக் பவுண்டரிகளைப் பொளந்து `ஆட்டோ பைலட்' மோடுக்கு மாறினார் கே.எல்.ராகுல். பாயின்ட்டில் ஒன்று, கவரில் இரண்டு என மூன்று பவுண்டரிகளை கவரில் போட்டு கொடுத்து அணுப்பினார்.

5வது ஓவரை வீச வந்தார் ராஜ்புத். அந்த ஓவரில் அகர்வால் இரண்டு பவுண்டரிகளும், ராகுல் ஒரு பவுண்டரியும் விளாசினர். ''போட்டி பஞ்சாப்புக்கும், ராஜஸ்தானுக்கும் மாதிரி தெரியலையே. அகர்வாலுக்கும் ராகுலுக்கும் மாதிரில்ல தெரியுது'' என பஞ்சாப் டீம் குதூகலமாகியது. அடுத்த ஓவரிலேயே ராஜஸ்தான் ரசிகர்களையும் கொஞ்சம் குதூகலப்படுத்தினார் ஆர்ச்சர். வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பவர் ப்ளேயின் முடிவில், விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது பஞ்சாப்.

கோபால் வீசிய 7-வது ஓவரில், பவுண்டரிகள் ஏதுமின்றி 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 8-வது ஓவரை வீசவந்தார் ராகுல் தெவட்டியா. டீப் ஸ்கொயர் திசையில் ஒரு சிக்ஸர், பின்பக்கமாக இன்னொரு சிக்ஸர், மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரி என நொறுக்கினார் மயாங்க். ''உனக்கு வேணும்டா'' என எங்கிருந்தோ சத்தம் வந்தது. திரும்பிப் பார்த்தால் சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார் ஒரு சென்னை ரசிகர்! கோபால் வீசிய அடுத்த ஓவரில், இன்னும் இரண்டு சிக்ஸர்களை விளாசி, 26-வது பந்தில் தன் அரை சதத்தை நிறைவு செய்து, பஞ்சாப் ரசிகர்களை ஆனந்தத்தில் மயங்க வைத்தார் மயாங்க்.

#RRvKXIP

சாம் கரண் அண்ணன் டாம் கரண் வீசிய 10-வது ஓவரில், ஒரு பவுண்டரி கிடைத்தது. மீண்டும் வந்தார் உனத்கட், அந்த ஓவரில் ஒரு பவுண்டரி. எல்லாம் மயாங்க்கின் வேலை. அப்போது, `ராகுல் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்' என சின்னதாய் சிந்தனை உதிக்க, `மேட்ச்லதான் இருக்கேன் பாஸ்' என கரண் ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்டி, அவரும் தன் அரை சதத்தை பதிவு செய்தார். மீண்டும் கோபாலைக் கூட்டிவந்தார் ஸ்மித். மீண்டும் ஒரு சிக்ஸரைக் கையில் கொடுத்து அனுப்பிவைத்தார் அகர்வால். அடுத்து ஆர்ச்சர் ஓவரில் இரண்டு பவுண்டரிகள், கோபால் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் என 15 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்து வலுவான நிலையில், கெத்தாக நின்றது பஞ்சாப். 15-வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரியை விரட்டி, தனது முதல் ஐபிஎல் சதத்தை நிறைவு செய்தார் மயாங்க் அகர்வால். வெறும் 45 பந்துகளில் 100 ரன்கள்!

17-வது ஓவரில் தன் விக்கெட்டை இழந்தார் மயாங்க். கரண் வீசிய லோ ஃபுல் டாஸ் பந்தினை, டீப் விக்கெட்டில் இருந்த சாம்சனின் கைகளுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். 7 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் என 50 பந்துகளுக்கு 106 ரன்கள் பங்களித்திருந்தார்.

ராஜ்புத் வீசிய 18வது ஓவரில், மேக்ஸ்வெல்லும் தன் பங்குக்கு 2 பவுண்டரிகளை விளாசினார். ஆறுதல் பரிசாக, ராகுலின் விக்கெட்டைக் கழற்றினார் ராஜ்புத். அடுத்து வந்தது நிக்கோலஸ் பூரான். உண்மையிலேயே, பலரின் முகத்தில் பூரான் விட்டார். 3 சிக்ஸர், 1 பவுண்டரி என 8 பந்துகளில் 23 ரன்கள் விளாசி, அணியின் ஸ்கோரை 223 ரன்களாக உயர்த்தினார். பஞ்சாப் ரசிகர்கள் செம குஷியாகி பட்டர் சிக்கன் ஆர்டர் செய்தார்கள். ராஜஸ்தான் ரசிகர்களோ `எனக்கு இது சரியாப்படலை' என மனம் நொந்துப்போனார்கள்.

#RRvKXIP

223 எனும் மிகக் கடினமான இலக்கை, சேஸ் செய்ய நுழைந்தது ஸ்மித் - பட்லர் ஜோடி. காட்ரெல் வீசிய முதல் ஓவரிலேயே, 2 பவுண்டரிகளைக் காற்றில் பறக்கவிட்டார் ஸ்மித். `அப்போ, அடிக்குற மூட்லதான் இருக்கீங்களா?' என ராஜஸ்தான் ரசிகர்களின் கண்கள் விரிந்தன. முரட்டு ஃபார்ம் முகமது ஷமி, 2-வது ஓவரை வீசவந்தார். அதில் ஒரு பவுண்டரியை விளாசினார் கேப்டன் ஸ்மித். 3-வது ஒவரில் பட்லருக்கு ராணுவ மரியாதை செய்தார் காட்ரெல். அடுத்துதான் வந்தார் சஞ்சு சாம்சன். சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர். ஷமி வீசிய 4-வது ஓவரில் மிட் விக்கெட் தாண்டி ஒரு சிக்ஸர், ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரியை விரட்டினார் சில்கி ஸ்மித்.

''வேகமா போட்டா அடிக்குறாய்ங்க, ஸ்பின்னரை இறக்குவோம்'' என பிஷ்னாயைக் கூட்டிவந்தார் ராகுல். அதிலும் ஒரு சிக்ஸரையும் (சஞ்சு சாம்சனின் 100-வது ஐபிஎல் சிக்ஸ்) பவுண்டரியையும் அடித்தார் சஞ்சு. அடுத்து நியூஸிலாந்தின் நீஷமை கூட்டிவந்தார் ராகுல். அவரைக் கட்டிவைத்து அடித்தார் ஸ்மித். ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள். பவர் ப்ளேயின் முடிவில் 69-1 என இந்த ஐபிஎல்-ன் அதிகபட்ச பவர்ப்ளே ஸ்கோரை பதிவு செய்தது ஆர்.ஆர்!

பிஷ்னாய் வீசிய 7-வது ஓவரில், வைடு லாங் ஆனில் ஒரு சிக்ஸரைப் போட்டார் ஸ்மித். 8-வது ஓவரில், இன்னொரு அதிசயம் நடந்தது. அஷ்வின் வீசிய ஷார்ட்-ஆப்-லென்த் பந்தை, பவுண்டரி பக்கமாக பறக்கவிட்டார் சாம்சன். பந்து பறந்த திசைக்கு ஓடிவந்த பூரான், பவுண்டரி பக்கமாக பாய்ந்து, பந்தையும் காற்றிலேயே பிடித்து, காற்றிலேயே பின் பக்கமாக தூக்கி வீசினார். யூ-டியூப் தம்ப்-நெயிலை விட விசித்திரமாக இருந்த இந்த ஃபீல்டிங், எல்லோரையுமே கிறுகிறுக்க வைத்தது.

நீஷம் வீசிய 9-வது ஓவரில், தன் அரை சதத்தை நிறைவு செய்தார் ஸ்டீவ் ஸ்மித். அடுத்த பந்திலேயே தன் இன்னிங்ஸையும் நிறைவு செய்தார். முதல் மூன்று பேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த ராயல்ஸ் அணி ரசிகர்கள், அதில் இரண்டு விக்கெட் காலியானதும் சோகமானார்கள். தாரும், சஹாராவும் ஒற்றைப் பாலைவனமாகிப்போனது. தெவட்டியா இறங்கினார், மேக்ஸ்வெல் வீசிய 4 பந்துகளை தின்றுவிட்டு, 1 ரன் மட்டுமே கூலியாகக் கொடுத்தார். ராஜஸ்தான் ரசிகர்கள், புரண்டு படுத்து அழுதார்கள். நீஷம் வீசிய 11 வது ஓவரிலும் ஒரே ஒரு பவுண்டரிதான் கிட்டியது. மேக்ஸ்வெல் வீசிய 12-வது ஓவரில் அதுவும் இல்லை. பிஷ்னாய் வீசிய 13-வது ஓவரில் மீண்டும் 4 பந்துகளை தின்றுவிட்டு, இம்முறை கூலியும் கொடுக்காமல் எஸ்கேப் ஆகினார் தெவட்டியா!

#RRvKXIP

அன்று தெவட்டியாவைப் பார்த்து சென்னை ரசிகர்களை அடைந்த ஆத்திரத்தை விட, அதிக ஆத்திரம் அடைந்தார்கள் ராஜஸ்தான் வாசிகள். இந்தப் பக்கம் சஞ்சுவோ தன்னால் முடிந்த அளவுக்கு சிக்ஸரையும், பவுண்டரியையும் அடித்துக்கொண்டிருந்தார். `நீ பேசாம ரிட்டையர் - அவுட் ஆகிடு தெவட்டியா' என திட்டித்தீர்த்தார்கள் ரசிகர்கள். 15வது ஓவரில், முதல் சிக்ஸரை அடித்தார் தெவட்டியா. அப்போது அவருடைய ஸ்கோர் 14 (21).

தெவட்டியா இருக்கும் தைரியத்தில் மீண்டும் பந்து வீச வந்த மேக்ஸ்வெல்லை, `என்னைத் தாண்டி தொடு பார்க்கலாம்' என 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார் சஞ்சு. பாவத்த, அடுத்த ஓவரில் அவரும் அவுட். 42 பந்துகளில் 85 ரன்களை குவித்துவிட்டு, பெவிலியனுக்குத் திரும்பினார். உத்தப்பா வந்தார். `உத்தப்பா, எங்கப்பா போன? இந்த தெவட்டியா பயலை பாரப்பா' என நொந்துப்போனார்கள் ராஜஸ்தான் ரசிகர்கள். உத்தப்பாவும் `நான் இருக்கேன்' என இரண்டு பவுண்டரிகளை அதே ஓவரில் சூட்டோடு சூடாக விளாசினார்.

23 பந்துகளில் 17 ரன் மட்டுமே எடுத்து களத்தில் நின்றுக்கொண்டிருந்த தெவட்டியாவின் காலடி மண்னை எடுத்து பில்லி சூனியம் வைக்காத குறை. உச்சபட்ச கடுப்பில் இருந்தார்கள் பஞ்சுமிட்டாய் சொக்காய் காரர்கள். பஞ்சாப் அணிக்கு தெவட்டியா செய்துக்கொண்டிருக்கும் தியாகத்திற்கு இராணுவ மரியாதை செய்ய கிளம்பிவந்தார் காட்ரெல். அங்குதான் எல்லாம் மாறியது!
தெவட்டியா

தெவட்டியாவுக்கு பிரஷர் ஏறியது. ஆட்டோ பைலட், பீஸ்ட் மோடுக்கு எல்லாம் வராமல், நேராக டெத் விஷ் மோடுக்கு மாறினார். முதல் பந்தில் லாங் லெக்கில் ஒரு சிக்ஸர். இரண்டாவது பந்தில் ஷார்ட் ஸ்கொயர் பவுண்டரியில் இன்னொரு சிக்ஸர். மூன்றாவது பந்தில் வைடு லாங் ஆஃபில் மற்றுமொரு சிக்ஸர். பஞ்சாப் அணியினர், கலந்தாலோசணைக் கூட்டம் நடத்தினார்கள். தெவட்டியா, கண்கள் சிவக்க களத்தில் நின்றுகொண்டிருந்தார். நான்காவது பந்தில் மிட் விக்கெட் திசையில் இன்னொரு சிக்ஸர். ஐந்தாவது பந்து டாட். கெதக் என்றது காட்ரெலுக்கு. கடைசி பந்தில், மிட்விக்கெட்டில் இன்னொரு சிக்ஸர். 18 பந்துகளுக்கு 51 ரன்கள் வேண்டும் என்ற நிலையை, 12 பந்துகளுக்கு 21 ரன்கள் என மாற்றினார் தெவட்டியா!

Also Read: மயாங்க் மயக்கும் இன்னிங்ஸ், ராகுல் கிளாசிக்ஸ்; ஆனாலும் பஞ்சாபைப் பிரித்துமேய்ந்த ராஜஸ்தான்! #RRvKXIP

''உத்தப்பா, உன் வேலையைக் காட்டப்பா'' என ரசிகர்கள் ஆர்வமாக, அவுட்டாகி கிளம்பினார் ராபின் உத்தப்பா. ''பரவாலப்பா... எங்க செல்லக்குட்டி தெவட்டியா இருக்கார்ல. அவர் பார்த்துப்பார்' என ஆரத்தி சுத்தினார் ஆர்.ஆர். ப்ளெட்ஸ். அடுத்ததாக ஆர்ச்சர் வந்தார். ஷமி ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். தெவட்டியாவும் ஒரு சிக்ஸரைப் போட்டுவிட்டு, அடுத்த பந்திலேயே டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார்! 31 பந்துகளில் 53 ரன்கள். அதிசயம். ஆனால், உண்மை!

#RRvKXIP

இப்போது 6 பந்துகளுக்கு 2 ரன்கள் மட்டுமே தேவை. முருகன் அஷ்வின் பந்து வீச வந்தார். பரக்கின் விக்கெட்டையும் கழட்டினார். ஆனால், எளிய இலக்கு. 3வது பந்தில் ஒரு பவுண்டரியோடு ஆட்டம் முடிவுக்கு வந்தது. 4 விக்கெட் வித்தியாசத்தில் அசாத்திய வெற்றியை பதிவு செய்தனர் ராஜஸ்தான் ராயல்ஸ். ஐபிஎல்-ன் அதிகபட்ச சேஸ் இதுதான்! அம்மோவ்... ஸ்பின்னர்களிடம் தினறிக்கொண்டிருந்தார் தெவட்டியா. காட்ரெல் வீசாமல் முருகன் அஷ்வின் அந்த ஓவரை வீசியிருந்தால், ஆட்டமே மாறியிருக்குமோ என்னவோ!

"இங்கே பாருங்க இது டி20 கிரிக்கெட். இப்படித்தான் எல்லாம் குண்டக்க மண்டக்க நடக்கும். நாங்க ஆடின அதே சின்ன கிரவுண்ட்லதானே அவங்களும் ஆடினாங்க. நல்ல வேளை, இது டோர்னமென்ட்டோட ஆரம்பத்திலேயே நடந்துருச்சு. நாங்களும் நல்ல கம்பேக் கொடுப்போம்" என்றார் ராகுல். சதம் அடித்திருந்த மயாங்க், சோகமாக நின்றுக்கொண்டிருந்தார்.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-rajasthan-royals-vs-kings-xi-punjab-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக