`மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மூலம் நாட்டில் கோடிக்கணக்கான விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்’ என கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
மத்திய பா.ஜ.க அரசு மூன்று வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்த மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மற்றும் அ.தி.மு.க அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. விவசாயிகள் கடுமையாக பாதிக்க கூடிய வகையில் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என முழக்கமிட்டனர். பின்னர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியாதவது, ``மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிராக, விவசாயிகளுக்கு விரோதம் ஏற்படுத்தக் கூடிய மூன்று சட்டங்கள் நிறைவேற்றியுள்ளது. இது வன்மையாக கண்டிக்க தக்கது.
நாடாளுமன்ற மேலவையில் முறையாக விவாதிக்காமல், வாக்கெடுப்பு நடத்தாமல் இவை நிறைவேற்றப்பட்டது, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது என எல்லோரும் கண்டிக்கிறார்கள். குடியரசு தலைவரிடம் இந்த சட்டங்களை அமல்படுத்த கூடாது நிராகரிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் முறையிட்டும், இந்த சட்டங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்த சட்டங்கள் மூலம் நாட்டில் கோடிக்கணக்கான விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகுவார்கள்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றுகிறார். அவருடைய பேச்சு மக்களின் மனசாட்சிக்கு விரோதமான குரலாக ஒலிக்கிறது. விவசாயிகளுக்கு எந்தளவுக்கு துரோகம் விளைவிக்க முடியுமோ அந்தளவுக்கு துரோகம் செய்து வருகிறார் மோடி. விவசாயிகளை ஏமாற்றும் வகையில் பொய்யை திரும்ப திரும்ப கூறுகிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் ஒரு விவசாயி என அடிக்கடி கூறுகிறார், அதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் இந்தியாவிலேயே இந்த சட்டத்தை ஆதரிக்கிற ஒரே ஒரு விவசாயி எடப்பாடி பழனிசாமி மட்டும் தான். விவசாயிகளுக்கு, விவசாயத்திற்க்கு எதிரான இந்த சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் அண்ணாவின் பெயரால் நடைபெறும் ஆட்சியில் தந்தை பெரியார் சிலை தெடார்ந்து அவமதிக்கப்படுகிறது. ஆனால் இப்படி செய்கிறவர்களை கைது செய்யாமல், யாருக்கோ பயந்து, அஞ்சி, நடுங்கி சமூக விரோதிகளை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு செயல்படுவது வெட்ககேடானது, மிக மிக வன்மையாக கண்டிக்கதக்கது. தஞ்சாவூர் மாவட்டம் வேளாண்மை மிகுந்த மாவட்டம் தற்போது இப்பகுதியில் உரத்தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. குறுவை அறுவடை நடந்துள்ளது. ஆனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் அவதிப் படுகின்றனர், எனவே கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்” என தெரிவித்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/mutharasan-attacks-bjp-and-admk-in-agriculture-bill-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக