அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற்றது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 293 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக உறுப்பினர்கள் சிலர் கலந்துகொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில், `நீட் தேர்வைத் திரும்பப் பெற வேண்டும்’, `இரு மொழிக் கொள்கையே தமிழகத்தில் நீட்டிக்கும்’ உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் `ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு' எனவும், ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள், `நிரந்தர முதல்வர்' எனவும் கோஷமிட்டனர். இதனால், அ.தி.மு.க-வின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த விவாதம் எழுந்தது. அதேபோல், அணிகள் இணைப்பின்போது முடிவு செய்யப்பட்டபடி, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல்குழு அமைக்கப்பட வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு வலியுறுத்தியதாகத் தகவல் வெளியானது.
அதேபோல், சசிகலா அ.தி.மு.க-வில் மீண்டும் இணையவிருப்பதாகவும் ஒருபுறம் தகவல் வெளியானது. இந்த பரபரப்பான சூழலில் அ.தி.மு.க-வின் செயற்குழு இன்று கூடியது. காலை 10 மணிக்குத் தொடங்கிய செயற்குழுவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த காரசார விவாதம் நடைபெற்றதாகத் தகவல் வெளியானது.
அதேநேரம், கட்சியின் வழிகாட்டுதல்குழு பற்றிய விவகாரத்தையும் ஓ.பி.எஸ் தரப்பு எழுப்பியதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சர் வேட்பாளர் குறித்த எந்த முடிவும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
Also Read: `செல்போனுக்குத் தடை; சசிகலா குறித்து பேசக் கூடாது?' - சென்னையில் கூடியது அ.தி.மு.க செயற்குழு
ஏறக்குறைய ஐந்து மணி நேரம் நீடித்த அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் மதியம் 2:55 மணியளவில் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ``தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து தலைமைக் கழகத்தில் அறிவிப்பார்கள்'' என்று தெரிவித்தார்.
செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் வெளியே வந்த அமைச்சர்கள் பெரும்பாலானோர் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு அவசர அவசரமாகச் சென்றதைப் பார்க்க முடிந்தது. இது தொடர்பாக வரும் 7-ம் தேதி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகே அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
source https://www.vikatan.com/news/politics/admk-to-announce-cm-candidate-on-october-7-says-kp-munusamy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக