நாட்டின் முதல் பல்லுயிர்ச்சூழல் மண்டலமாக யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி பல்லுயிர்ச்சூழல் மண்டலத்தில் அறியப்படாத கானுயிர் ரகசியங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் ஒரு சில ஆய்வாளர்களால் அவ்வப்போது வெளிக்கொணரப்படுகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் மிகவும் அரிதாகவே காணப்படக்கூடிய பிராண்டட் ராயல் தாஜூரியா மெலஸ்டிக்மா (Tajuria melastigma) என்ற வண்ணத்துப்பூச்சி இனத்தை கோத்தகிரி சரிவுப் பகுதிகளில் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த வகை வண்ணத்துப்பூச்சியை 1888-ம் ஆண்டு ஜி.எஃப்.ஹாம்ப்சன் (G.F.Hampson) என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.130 ஆண்டுகளுப் பின்னர், தற்போதுதான் இது பதிவு செய்யப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய வின்டர்-பிளைத் சங்கத்தின் நிர்வாகியும் வண்ணத்துப்பூச்சியை ஒளிப்படம் எடுத்தவரான வினோத் ஸ்ரீராமுலு, "பிராண்டட் ராயல் என்ற பெயரில் அறியப்படும் இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் மிக அரிதான ஒன்று. நீலகிரி, திண்டுக்கல், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றைக் காண்பதே மிகவும் அரிதாகவே உள்ளது. ஏனெனில், ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சியும் ஒரு குறிப்பிட்ட தாவரத்தில் முட்டைகளை இடும். அப்படியிருக்க இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடும் தாவரங்களின் எண்ணிக்கையும் அரிதாகவே இருக்கலாம் எனக் கருதுகிறோம். தற்போது கோத்தகிரி பகுதிகளில் இந்த வகை வண்ணத்துப்பூச்சி 130 ஆண்டுகள் கழித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இவை வாழச் சாதகமான சூழல் நிலவலாம். எனவே, அவற்றை ஆய்வு செய்து பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.
இந்த அமைப்பின் மற்றொரு நிர்வாகி மனோஜ், "பிராண்டட் ராயல் வகை வண்ணத்துப்பூச்சிகளை அடையாளம் காண்பது மிகவும் கடினமான ஒன்று. இவற்றைப்போலவே வேறு சில வகைகளும் உள்ளன. உண்மையில் இந்தப் பதிவு எங்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
130 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்த வகை வண்ணத்துப்பூச்சி நம் கண்களில் தென்படத் தொடங்கியுள்ளது. இதை அப்பகுதியின் பல்லுயிரிய வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மேலும் அழுத்தமாக வலியுறுத்துகின்றது.
source https://www.vikatan.com/news/environment/rare-species-of-butterfly-spotted-at-nilgiris-after-130-years
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக