புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். இம்மாதத்தில் மாமிசம் உண்ணாமல் விரதமிருப்பது இந்துக்களின் நம்பிக்கை. பெருமாளின் தீவிர பக்தரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் எதிரிகளை துவம்சம் செய்வதற்காக ஆஞ்சநேயர் விரதத்தை ஆரம்பித்திருக்கிறாராம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய எடப்பாடி ஆதரவாளர்கள், ``ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு விரதம் இருப்பது எடப்பாடி பழனிசாமியின் வழக்கம். மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது திருப்பதி சென்று குடும்பத்துடன் பெருமாளை தரிசித்துவிட்டு வருவார். `யார் முதல்வர் வேட்பாளர்?’ என கட்சிக்குள் எழுந்துள்ள சூறாவளி அவரது அரசியல் வாழ்க்கையை சுழற்றியடிக்கிறது.
டெல்லியுடனான உறவிலும் சுமூகமான உறவுநிலை ஏற்படவில்லை. இந்த பிரச்னைகளில் இருந்து விடுபடவும், தன் எதிரிகளை துவம்சம் செய்யவும் ஆஞ்சநேயர் விரதத்தை ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி. இதற்காக அவர் வீட்டிலேயே சிறிய அளவில் ஆஞ்சநேயர் சிலையை பூஜை அறையில் வைத்து பூஜிக்கின்றனர். `புரட்டாசி மாதத்தில் ஆஞ்சநேயர் விரதத்தை கடைபிடித்தால், மலைபோல நிற்கும் பிரச்னைகளும் பனிபோல விலகிவிடும்' என்று எடப்பாடி நம்புகிறார். ஒரு மாதத்திற்கு இந்த விரதத்தைக் கடைபிடிக்கவுள்ளார். அவர் நம்பிக்கை பலன் தருமா என்பது வரும் வாரங்களில் தெரிந்துவிடும்” என்றனர்.
Also Read: காரில் கழற்றப்பட்ட தேசியக் கொடி; வரிசைகட்டும் ஆதரவாளர்கள் - பரபரப்பான ஓ.பி.எஸ் வீடு!
வழக்கமாக எடப்பாடி பயணிக்கும் காரில் ஜெயலலிதாவின் புகைப்படம் மட்டுமே `டேஷ்போர்ட்’-ல் வைக்கப்பட்டிருக்கும். புரட்டாசி மாதம் ஆரம்பித்ததில் இருந்து புதிதாக ஆஞ்சநேயர் சிலை ஒன்றும் எடப்பாடியின் காரில் வைக்கப்பட்டிருக்கிறது.
தினமும் காவி நிற செம்பருத்தி, ரோஜா மலர்களால் ஆஞ்சநேயர் சிலை அலங்கரிக்கப்படுகிறது. காரில் ஏறி உட்கார்ந்தவுடன் ஆஞ்சநேயரையும் ஜெயலலிதாவையும் வணங்கிவிட்டுத்தான் வண்டியை எடுக்கச் சொல்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. `யார் துணையும் இல்லாமல் சென்றாலும் ஆஞ்சநேயர் துணை நிற்பார்’ என்கிறாராம். இப்படித்தான் செப்டம்பர் 28-ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்திற்கும் ஆஞ்சநேயர் சிலையோடு எடப்பாடி அ.தி.மு.க தலைமையகத்திற்கு வந்திருந்தார். எடப்பாடியின் முதல்வர் நாற்காலி ஆசையை ஆஞ்சநேயர் நிறைவேற்றித் தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read: ``முடிந்தது டீல்..? - அ.தி.மு.க செயற்குழுவில் நடந்தது என்ன?"
source https://www.vikatan.com/news/politics/edappadi-palanisamy-begins-one-month-fasting-for-lord-hanuman-blessings
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக