Ad

திங்கள், 28 செப்டம்பர், 2020

திடீர் சீக்ரெட் மேன் அவதாரம்... எங்கே டி.டி.வி.தினகரன்?

சசிகலாவை மையமாகவைத்து அ.தி.மு.க, அ.ம.மு.க என இரண்டு கட்சிகளிலும் ரகசியப் பேசசுவார்த்தை, பேரங்கள் ஆரம்பித்துவிட்டன. ராயப்பேட்டை ஏரியாவே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது. இன்று (செப்டம்பர் 28) அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் ராயப்பேட்டை, லாயிட்ஸ் ரோட்டிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதே ராயப்பேட்டையின் இன்னொரு பகுதியிலுள்ள, அம்மா மக்கள் முன்னணிக் கழக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. இரு தரப்பினரும் டெல்லி பி.ஜே.பி தலைவர்களைச் சந்திக்க காவடி தூக்கிவருகிறார்கள். முதலில் தினகரன் தனி விமானத்தில் டெல்லிக்குப் போனார். அவரைத் தொடர்ந்து, அ.தி.மு.க அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் டெல்லிக்கு விசிட் அடித்தார்கள். இரு தரப்பினரும் அவரவர் தொடர்பிலுள்ள பி.ஜே.பி தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இவையெல்லாம் தெரிந்த விஷயங்கள். ஆனால், கடந்த சில நாள்களாகவே, அ.ம.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சீக்ரேட் மேனாக மாறிவருகிறார்.

தினகரன் - அ.தி.மு.க

அவர் எங்கே போகிறார்... யாரைச் சந்திக்கிறார் என்பதெல்லாம் பரம ரகசியமாக இருக்கின்றன. அவருடைய கட்சியின் தொண்டர்களையோ, கட்சியின் நிர்வாகிகளையோகூட சந்திப்பதில்லை. கேட்டால், சென்னை வீட்டிலிருக்கிறார். புதுச்சேரி பண்ணை வீட்டிலிருக்கிறார். பெங்களூரு போயிருக்கிறார் என்றெல்லாம் ஆளுக்கொரு கதை சொல்கிறார்கள். டெல்லியிலிருந்து திரும்பிய தினகரன், கடந்த வாரத்தில் இரண்டு, மூன்று நாள்கள் சென்னையில் இல்லை. எங்கே போனார் என்று உளவுத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாக, தினகரன் செல்லும் இடங்களில் சல்லடை போட்டுத் தேடினர். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மன்னார்குடி பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, `பெங்களூரு செல்லும் வழியில் ஓசூருக்கு அருகில் ஓர் இடத்தில் அவர் இருக்கிறார். சசிகலா விடுதலை தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்' என்றார். அங்கிருந்து அவர் கட்சியின் சீனியர்களைக் கூப்பிட்டு, `அ.தி.மு.க-வின் செயற்குழு கூடும் செப்டம்பர் 28 அன்று நம் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் கூட்டத்தைக் கூட்டுங்கள்' என்று உத்தரவு போட்டாராம்.

Also Read: ``அக்டோபர் மாதம் அ.தி.மு.க-வில் மாற்றமா?”- இணைப்புக்குத் தயாராகும் தினகரன்!

அவரிடம், ``நீங்கள் வருவீர்களா?’’ என்று கேட்டபோது, ``நான் வர மாட்டேன். கட்சியின் சீனியர் தலைவர் பழனியப்பன், வெற்றிவேல் கூட்டத்தை நடத்தட்டும்’’ என்றாராம். அவசர அவசரமாக மாவட்டச் செயலாளர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. இன்று காலை 11 மணிக்கு 35 மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் உடனே ஏற்பாடானது. அடுத்தநாள், மற்ற மாவட்டங்களின் செயலாளர்கள் வருகை தரவிருக்கிறார்கள்.

இதற்கிடையில், அமைச்சர் வீரமணி, சசிகலாவுக்கு எதிரான கருத்துகளை மீடியாக்களிடம் கூறியிருக்கிறார். `யாரும் எதுவும் பேசக் கூடாது’ என்று கட்சி கட்டுப்பாடு விதித்திருந்தநிலையில், வீரமணி பேசிய விவகாரம் கட்சியில் உற்று கவனிக்கப்படுகிறது.

அ.ம.மு.க வெற்றிவேல்

`டெல்லியில் தினகரன் யாரை சந்தித்தார்... அதேபோல், அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி யார் யாரைச் சந்தித்தார்கள்?’ என்று அ.தி.மு.க-வின் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம்..

``தினகரன் டெல்லி போனது சட்ட விஷயங்களுக்காக என்று வெளியே சொல்லப்பட்டாலும், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கும் நோக்கில்தான் சென்றார். சசிகலாவை விடுவிப்பதிலுள்ள சிக்கல்கள், அ.தி.மு.க-வுடன் இணைப்பு தொடர்பாகப் பேச உடனே புறப்பட்டு வரும்படி சொன்னதால்தான் தனி விமானத்தில் போனார். அமித் ஷாவுக்கு தற்போது உடல்நிலை சரியில்லை என்பதால், அவரின் நெருங்கிய நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சொன்னார்கள். நண்பரின் போனிலிருந்து வீடியோ காலில் தினகரன் அமித் ஷாவுடன் பேசியதாகக் கேள்விப்பட்டோம். பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் நட்டாவுடனும் பேசியதாகத் தகவல் வந்தது. அதேநேரம், எங்கள் அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்து சில விஷயங்களை பேசச் சென்றார்கள். சந்தித்தார்கள். அதைப் பற்றியெல்லாம் இப்போதைக்குச் சொல்ல முடியாது'' என்றார்

ஆக, வரும் நாள்களில் ராயப்பேட்டை ஏரியாவை அ.தி.மு.க, அ.ம.மு.க... இரண்டு கட்சிக்காரர்களும் அதகளப்படுத்துவார்கள் போலிருக்கிறது!



source https://www.vikatan.com/news/politics/ttv-dinakarans-sudden-disappearance-raises-many-eye-brows-in-tn-political-circle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக