Ad

திங்கள், 28 செப்டம்பர், 2020

`பெங்களூர் பயங்கரவாதத்தின் மையமாகிவிட்டது!'- சர்ச்சையான பா.ஜ.க தேசிய இளைஞரணித் தலைவர் கருத்து

பா.ஜ.க தேசிய இளைஞரணியின் புதிய தலைவரான தேஜஸ்வி சூர்யா, `பெங்களூர் பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறிவிட்டது' என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, கர்நாடகாவை பா.ஜ.க-தான் ஆளுகிறது என்று சுட்டிக்காட்டி மக்கள் பேசிவந்த நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் புதிய இளைஞரணித் தலைவரை, பா.ஜ.க பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய அளவில் புதிதாகப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டார். தேசிய இளைஞரணித் தலைவராக இருந்த முன்னாள் எம்.பி பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜனின் பதவி பறிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த எம்.பி. தேஜஸ்வி சூர்யா இளைஞரணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஜே.பி நட்டா

கடந்த ஆகஸ்ட் மாதம், பெங்களூருவின் கிழக்குப் பகுதியான டி.ஜே.ஹல்லி, கே.ஜே.ஹல்லி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கடும் மோதல்களில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டு, 60 போலீஸார் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் அவரது உறவினர்களுக்குத் தொடர்பு இருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்தநிலையில், பெங்களூர் பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறிவிட்டதாக பெங்களூர் தெற்கு தொகுதி எம்.பி தேஜஸ்வி சூர்யா கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ``கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் சிலிகான்வேலி என்று கொண்டாடப்படும் பெங்களூரு பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறியுள்ளது. நகரில் உள்ள புலனாய்வு அமைப்பின் கைதுகள் மூலம் பயங்கரவாதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, பெங்களூரில் தேசிய புலனாய்வு முகமையின் (National Investigation Agency - NIA) விசாரணை மையத்தை திறக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ``பெங்களூரில் NIA அலுவலகம் விரைவில் நிறுவப்படும்" என்று அவர் உறுதியளித்திருக்கிறார்'' என அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் தேஜஸ்வி பதிவிட்டிருந்தார்.

தேஜஸ்வி - அமித் ஷா

பெங்களூரில் அண்மையில் நடந்த கும்பல் தாக்குதல்களை சுட்டிக்காட்டிய தேஜஸ்வி, `கடந்த ஆகஸ்டில் நடந்த வன்முறை தொடர்பான என்.ஐ.ஏ விசாரணையில், பல பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பெங்களூரை மையமாக பயன்படுத்துவதாகத் தெரியவந்திருக்கிறது. இது மிகவும் கவலையளிக்கக் கூடியது. பெங்களூர் பயங்கரவாதத்தின் மையமாக மாறியுள்ளது" என்றும் கூறியிருக்கிறார்.

Also Read: கேரளா, மேற்குவங்கத்தில் அதிகாலை ரெய்டு; சிக்கிய 9 அல்-கொய்தா தீவிரவாதிகள்! - என்.ஐ.ஏ அதிரடி

பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில், அக்கட்சியின் தேசிய இளைஞரணித் தலைவர் சூர்யாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேஜஸ்வி சூர்யாவின் பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பு குரல்களும் வலுத்து வருகிறது. இந்நிலையில், இளம் எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு அம்மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய எடியூரப்பா, ``நான் சில ஆண்டுகளாக பெங்களூரில் என்.ஐ.ஏ அலுவலகம் வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டு வருகிறேன். தற்போது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரும் ஒப்புக் கொண்டதற்கு என் வாழ்த்துக்கள்" என்று கூறினார். மேலும், ``ப்போதெல்லாம் பெங்களூரில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்துதான் எம்.பி. சூர்யா அவ்வாறு கருத்து தெரிவித்திருப்பார்'' என்றும் அவர் தேஜஸ்வி சூர்யாவிற்கு ஆதரவு குரல் கொடுத்தார்.

எடியூரப்பா

கர்நாடகாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.கே.சிவகுமார்,``தற்போது பா.ஜ.க கட்சியின் மாநிலப் பிரிவுக்குத் தலைமை தாங்கி வரும் தேஜஸ்வி சூர்யா, பெங்களூரை அவமானப்படுத்தும் அளவுக்கு கருத்துத் தெரிவித்து வருகிறார். ஆளும்கட்சியான பா.ஜ.க-வுக்கு இது அவமானம். அதனால், அவரை பா.ஜ.க உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.



source https://www.vikatan.com/news/politics/bengaluru-has-become-epicenter-of-terror-activities-says-tejasvi-surya

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக