வாழை உற்பத்தியில், உலகளவில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது. மொத்த வாழை உற்பத்தியில் 2018-19-ல் சுமார் 26.61 சதவிகிதம் இந்தியா பங்களித்திருக்கிறது. தேசிய தோட்டக்கலை வாரியத்தின் இரண்டாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2019-20-ம் ஆண்டு இந்தியாவில் வாழை 8.78 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 315.04 லட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. ஆந்திரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை வாழை பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களாகும்.
மண் மற்றும் தட்பவெட்ப சூழ்நிலை காரணமாக பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் ஆகிய ரகங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மையாகத் திகழ்கிறது. ஈரோடு, தேனி, தூத்துக்குடி, கடலூர், திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. பூவன் ரகமானது தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் இலை நோக்கத்துக்காகவும் பயிர் செய்யப்படுகிறது.
தற்போது கோயம்புத்தூர் மற்றும் திருச்சி சந்தைக்கு, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து பூவன் வரத்தும் சத்தியமங்கலம், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து கற்பூரவள்ளி வரத்தும் வருகிறது. நேந்திரன் வரத்தானது மேட்டுப்பாளையம் மற்றும் கேரளாவிலிருந்து வருகிறது. வரும் மாதங்களில் வாழைக்கான தேவை நிலையானதாக இருக்கும்.
இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 10 ஆண்டுகளாகக் கோயம்புத்தூர் சந்தையில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வு முடிவின் அடிப்படையில், நவம்பர் 20 முதல் டிசம்பர் 20 மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு ரூ.12-ம், கற்பூரவள்ளி ரூ.20 மற்றும் நேந்திரன் வாழையின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.30 வரை இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பருவமழை மற்றும் வரும் விழாக்காலம் எதிர்கால விலையை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு,
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்,
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641003.
தொலைபேசி: 0422 2431405
தொழில்நுட்ப விவரங்களுக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
பழப்பயிர்கள் துறை,
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்- 641003.
தொலைபேசி: 0422 6611269
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/tnau-releases-price-forecast-for-banana-for-nov-dec
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக