Ad

திங்கள், 28 செப்டம்பர், 2020

தீயாய் சிக்ஸர்கள் கொளுத்திய ராகுல் திவேதியா யார் என்று தெரியுமா? #RahulTewatia #RRvKXIP

I am a Villain and I am a Hero... இந்த வசனம், ராகுல் திவேதியாவுக்கு அற்புதமாகப் பொருந்தும். 223 ரன்களைத் துரத்திக் கொண்டிருந்த பரபரப்பான நொடிகளில், முதல் 23 பந்துகளில் வெறும் 17 ரன்களை மட்டும் அடித்து, வில்லனாக இருந்தவர், அடுத்த சில பந்துகளில் ஹீரோவாக மாறிவிட்டார்.

3 ஓவர்களுக்கு 51 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருந்த போது, யாருமே எதிர்பார்க்காத வகையில், ஒரே ஓவரில், 5 சிக்ஸர்களை அடித்துக் கொடுத்து, போட்டியை பஞ்சாப்பிடம் இருந்து, மொத்தமாக ராஜஸ்தான் பக்கம் திருப்பிவிட்டார் திவேதியா.

#RahulTewatia

சிஎஸ்கேவுடன் நடைபெற்ற முதல் போட்டியில், ஷேன் வாட்சன், சாம்கரண் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் விக்கெட்டை எடுத்துவிட்டு, சென்னை ரசிகர்களுக்கு வில்லனாகக் காட்சியளித்தவர், ஒரே ஓவரில், அனைவரும் கொண்டாடும் ஹீரோவாக மாறிவிட்டார். இவ்வளவு நாளாக, மீடியாவின் கண்களிலும், ரசிகர்களின் கண்களிலும் தெரியாமல், பெரிய வெளிச்சம் படாதவராக இருந்தவர், நேற்று, ஒரே நாள் இரவில், அனைத்து இந்திய ரசிகர்களாலும், 'யார் இந்த ராகுல் திவேதியா?' எனத் தேடப்படுபவராக மாறி விட்டார். யார் இவரு, இவ்ளோ நாள் எங்க இருந்தாரு?!

ஹரியானா மைந்தன்!

1993-ல், ஹரியானாவில் பிறந்த ராகுல் திவேதியா, வலது கை லெக் ஸ்பின்னர் மற்றும் இடதுகை பேட்ஸ்மேன். 20 வயதில், கர்நாடகா அணிக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில், தனது முதல் போட்டியை ஆடினார். முதல் போட்டியில், மொத்தமே 17 ரன்கள் மட்டுமே எடுத்த இவரால், விக்கெட்டுகள் எதுவுமே வீழ்த்த முடியவில்லை.

அதற்குப் பிறகு, சொல்லிக் கொள்ளும்படியாக, பெரிய திருப்பங்கள் அமையவில்லை. 7 வருடங்களில், மொத்தமே, 7 ரஞ்சிப் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ஒயிட் பால் கிரிக்கெட்டில், 21 போட்டிகள் மட்டுமே ஆடி 484 ரன்கள் மற்றும் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

திவேதியா

ரஞ்சி கைகொடுக்காதபோதும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. 2014-ம் ஆண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இவரை 10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. அந்த ஆண்டு, வெறும் 3 போட்டிகளில் மட்டுமே ஆடியவர், 16 ரன்களை எடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2015-ம் ஆண்டிலோ, வெறும் ஒரு போட்டியில் ஆடும் வாய்ப்புதான் கிடைத்தது. 2016-ம் ஆண்டு ஏலத்தில் ராஜஸ்தான் கழற்றிவிட யாரும் திவேதியாவை எடுக்கவில்லை.

2017-ம் ஆண்டு, பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனாலும் அங்கேயும் திருப்பங்கள் எதுவுமே பெரியதாக அமையவில்லை. வெறும் மூன்று போட்டிகள் மட்டுமே ஆட வாய்ப்புக் கிடைத்தது. திறமையை நிரூபிக்க முடியாமால் தவித்துக்கொண்டிருந்தார்.

Also Read: ஷார்ஜாவில் மீண்டும் ஒரு புயல்... பீஸ்ட் மோடில் பேட்ஸ்மேன்கள், கலங்கி நின்ற பெளலர்கள்! #RRvKXIP

திருப்புமுனை ஐபிஎல்!

யாருமே கண்டுகொள்ளாமல் இருந்த ராகுல் திவேதியாவுக்கு, 2018-ல் ஜாக்பாட் அடித்தது. திடீரென இவரை ஏலத்தில் எடுக்க, 3 அணிகள் போட்டி போட்டுக் களத்தில் குதித்தன. ஆர்சிபி, சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி போட, இறுதியில் 3 கோடிக்கு, டெல்லி கேப்பிடல்ஸ் இவரைத் தட்டிச் சென்றது.

2018-ம் ஆண்டு, இவருக்கு அதிகப் போட்டிகள் ஆட வாய்ப்பும் கிடைத்தது. 8 போட்டிகளில் ஆடியவர், 50 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த ஆண்டோ, 5 போட்டிகளில் விளையாடி, வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். ஏலத்தில் பெரிய தொகைக்கு எடுக்கப்பட்டும், சில போட்டிகளில் ஆட வாய்ப்பும் கிடைத்தும், ஜொலிக்க முடியாமல் இருந்தவரை கழற்றிவிட்டது டெல்லி. அப்போதுதான் ஏலத்தில் இல்லாமல் அஜிங்கியா ரஹானேவை டெல்லிக்கு அனுப்பிவிட்டு அவருக்கு பதிலாக திவேதியாவை மீண்டும் அணிக்குள் கொண்டுவந்தது ராஜஸ்தான்.

#RahulTewatia

சிஎஸ்கேவுடன் நடைபெற்ற முதல் போட்டியில் வாட்சன், சாம் கரண், கெய்க்வாட் என 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, "இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு நல்ல பவுலராக இருக்கப் போகிறார்" என்று மட்டும் நினைத்தவர்களுக்கு தான் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.

திவேதியா, ராஜஸ்தானின் பயிற்சியாளர் ஆண்ட்ரு மெக்டொனால்டுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். துணிச்சலாக திவேதியாவை ராபின் உத்தப்பாவுக்கு முன்பாக நம்பர் 4 பேட்ஸ்மேனாக இறக்கினார். மெக்டொனால்ட் இவரை களமிறக்க காரணம், லெக் ஸ்பின்னர்களை இடது கை ஆட்டக்காரரான திவேதியா சமாளிப்பார் என்றுதான். ஆனால், ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாவில் தடவிக்கொண்டிருந்தவர் காட்ரெல் சிக்கியதும் அடித்து நொறுக்கிவிட்டார். ஒரே ஓவரில் விழுந்த அந்த 5 சிக்ஸர்களும் ஐபிஎல் வரலாற்றில் ராகுல் திவேதியாவின் பெயரை பதித்துவிட்டது.

திவேதியாவுக்கு 2020 செம சிறப்பாக இருக்க வாழ்த்துகள்!



source https://sports.vikatan.com/ipl/who-is-rahul-tewatia-the-overnight-hero-for-the-rajasthan-royals

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக