தொடர்ந்து தேசிய கவனம் பெறும் மகாராஷ்டிரா!
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த சில மாதங்களாகவே பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு நடந்த பா.ஜ.க சிவசேனா முதல்வர் ரேஸ் யுத்தம், தொடர்ந்து ஆட்சி அமைக்கும் காட்சிகள், மாறுபட்ட கொள்கையை உடைய கட்சிகளின் கூட்டணி என பரபரப்பு சற்று ஓய்ந்த நிலையில் கொரோனா பாதிப்பு தொடங்கியது, லாக் டெளனில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம், தொடர்ந்து கங்கனா ரணாவத்-ன் மகாராஷ்டிரா அரசுக்கு எதிரான அட்டாக் என தொடர்ந்து தேசிய அளவில் அரசியல் கவனம் பெற்ற மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது.
இந்த சிக்கல்கள் அனைத்திலும் சிவசேனா கட்சி தரப்பில் மூத்த எம்.பி சஞ்சய் ராவத்- தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். குழப்பங்களுக்கு சிவசேனா தரப்பில் பதில் சொல்லும் முகமாக மாறி போனார் சஞ்சய் ராவத். கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடங்கி கங்கனா ரணாவத்-க்கு பதிலளிப்பது வரை என அனைத்திலும் சஞ்சய் ராவத் தேசிய கவனம் பெற்றார். இந்த நிலையில் தற்போது பா.ஜ.க-வின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை மும்பையில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேசி, புதிய பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் சஞ்சய் ராவத்.
நட்சத்திர ஓட்டலில் நடந்த சந்திப்பு!
மும்பை நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. சிவசேனா கட்சியானது தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு, பா.ஜ.க சிவசேனா தலைவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி வந்தனர். மேலும் அவர்கள் சந்தித்து அதிக நேரம் பேசியதில்லை. இதனால் இந்த சந்திப்பு அதிக கவனம் பெற்றது. இந்த சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை என பாரதீய ஜனதா கட்சியின் சில நிர்வாகிகள் விளக்கம் கொடுத்து உள்ளனர்.
சஞ்சய் ராவத் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் நிர்வாக ஆசிரியர் என்ற பொறுப்பிலும் இருந்து வருகிறார். சாம்னாவில் பால் தாக்கரே, உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் ஆகியோரின் பேட்டிகள் வெளியாயிருக்கிறது. தொடர்ந்து பா.ஜ.க மூத்த தலைவ்ரும் முன்னாள் முதல்வருமான பட்னாவிஸை பேட்டி எடுப்பது தொடர்பான சந்திப்பு தான் நிகழ்ந்தது என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த 2 மணி நேர சந்திப்பில் பேட்டி அளிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
அரசியலில் எதுவும் நடக்கலாம்
மகாராஷ்டிர மாநில பா.ஜ.க செய்தி தொடர்பாளர் கேசவ் உபாத்தாய், ``ராவத் சாம்னாவுக்காக பட்னாவிஸை பேட்டி எடுக்க விரும்பினார். அதுதொடர்பாகவே 2 பேரும் சந்தித்து பேசினர். பீகார் தேர்தல் பிரசாரத்திற்கு சென்று வந்த பிறகு பேட்டி அளிப்பதாக பட்னாவிஸ், சஞ்சய் ராவத்திடம் கூறினார்’’ என்று தெரிவித்தார். பா.ஜ.கவினர் பலரும் இந்த சந்திப்பில் அரசியல் பேச வில்லை என்றாலும், சிலர், ``அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்றும் பகீர் கிளப்பி வருகிறார்கள்.
இந்த பரபரப்பு சந்திப்பு குறித்து சஞ்சய் ராவத் பேசுகையில், ``முன்னாள் முதல்வரையும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்து பேசுவது குற்றமா? சரத் பவாரை பேட்டி எடுத்த போதே, பட்னாவிஸ், ராகுல் காந்தி, அமித் ஷா உள்ளிட்டோரை பேட்டி எடுக்க விருப்பம் தெரிவித்திருந்தேன். எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து பேசுவது ஒன்று குற்றமில்லையே... எங்களுக்குள் கொள்கை முண்பாடுகள் இருக்கலாம். ஆனால் நாங்கள் எதிரிகள் இல்லை. முதல்வருக்கு தெரிந்து தான் இந்த சந்திப்பு நடைபெற்றது” என்றார்.
Also Read: மகாராஷ்டிரா அரசின் எச்சரிக்கை... அமித் ஷாவுக்கு நன்றி! Y+ பாதுகாப்பில் கங்கனா?
பா.ஜ.க சட்ட மேல்-சபை எதிர்கட்சி தலைவர் பிரவின் தாரேகர் என்பவர் இந்த சந்திப்பு தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், ``வரும் காலங்களில் இது போன்ற சந்திப்புகள் அதிகம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். அரசியலில் எதுவும் நடக்கும்” என்றார். அரசியலில் இந்த கூற்றையும் புறந்தள்ளிவிட முடியாது.
source https://www.vikatan.com/news/politics/ex-maharashtra-cm-devendra-fadnavis-meets-shiv-sena-mp-sanjay-raut
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக