Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

அமைச்சர் செங்கோட்டையனின் தடாலடி அறிவிப்புகளும் தடுமாறும் மாணவர்களும்! 

''2021 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் யார், இரண்டாவது தலைநகரமாக மதுரை, திருச்சி ஆகிய இரண்டு நகரங்களில் எதைக் கொண்டு வரலாம்'' என அ.தி.மு.க அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்தைத் தெரிவித்து அது பின் சர்ச்சையாவது நாடறிந்த விஷயம்தான். சமீபமாக, எஸ்,பி,பியின் மறைவுக்கு, அ.தி.மு.க எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்தது என அ.தி.மு.க அமைச்சர்களின் அட்ராசிட்டிக்கு அளவே இல்லைதான். ஆனால், எல்லாவற்றையும் விட உச்சமாக,'காலையில் ஈரோட்டில் ஓர் உத்தரவு, மதியம் கோவை விமான நிலையத்தில் ஓர் உத்தரவு, மாலை சென்னையில் ஓர் உத்தரவு' என தான் சொன்ன கருத்தையே அடிக்கடி மாற்றிச் சொல்லி தமிழக மக்களை மிகப்பெரிய குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார் ஒருவர். அவர்தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். மற்ற அமைச்சர்களின் கருத்துகள் கேலிக்குரிய விவாதமாகவும் அதிகபட்சம் அந்தக் கட்சிக்குள் வேண்டுமானால் சிறு சலசலப்பை ஏற்படுத்தலாம். ஆனால், மாநிலத்தின் கல்வி அமைச்சராக, அமைச்சர் செங்கோட்டையனின் மாறுபட்ட கருத்துகள், பல லட்சம் மாணவர்களின் உளவியலோடு தொடர்புடைய விஷயமாக இருக்கிறது.

பள்ளிகள் திறப்பு குறித்து மட்டுமல்ல பல விஷயங்களில் அவரின் போக்கு இப்படித்தான் இருக்கிறது. அப்படி அமைச்சர் செங்கோட்டையன் இதுவரை மாற்றி மாற்றிச் சொன்ன விஷயங்கள் என்னென்ன, அதற்கான காரணம் என்ன, அதனால், மாணவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் ஆகியவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.

எட்டாம் வகுப்பு

ஐந்தாம் & எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு!

ஐந்தாவது மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்கிற விதிமுறையை மத்திய அரசு கடந்த வருடம் ஜனவரி மாதம் அறிவித்தது. இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, மேல்நிலை, மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று செய்திகள் (பிப்ரவரி மாதத்தில்) வெளியாகின. மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளியில் பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும், எட்டாம் வகுப்பு மாணவர்கள் ரூ.100 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தகவல்கள் வெளியாகின.

அரசின் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் செயற்பாட்டாளர்கள் மத்தியில் மிகக் கடுமையான கொந்தளிப்பை உண்டாக்கியது. பத்து வயதில், பன்னிரண்டு வயதில் உள்ள குழந்தைகளை எல்லாம் பொதுத்தேர்வு எழுதச் சொல்வது அவர்கள் மீது திணிக்கப்படும் வன்முறை எனவும் குழந்தைகள் உளவியலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பாகல்பட்டி பஞ்சாயத்தில், குடியரசு தினம் அன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில், 'அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற'ச் சொல்லி பள்ளி மாணவர்களே கோரிக்கை மனு கொடுத்த சம்பவமெல்லாம் அரங்கேறியது.

தொடர்ந்து, பிப்ரவரி 22-ஆம் தேதி (2019) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், ''5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடப்பாண்டு மட்டுமல்ல, எப்போதும் இல்லை. பொதுத்தேர்வு உள்ளது என வெளியாகும் தகவல்கள் தவறானவை. மாநில அரசு விரும்பினால் பொதுத்தேர்வு நடத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சரவைதான் முடிவு செய்யும்'' என அறிவித்தார்.

சரி தேர்வு இல்லை என பெற்றோர்களும் கல்வியாளர்களும் நிம்மதியடைந்த வேளையில், மே மாதம் ஈரோட்டில் புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தைப் பார்வையிட வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் செங்கோட்டையன். அப்போது பேசியவர், ''இந்த ஆண்டு 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கிடையாது’’ என அறிவித்தார். தொடர்ந்து, 'இந்தாண்டு மட்டுமல்ல, எப்போதும் நடத்தக் கூடாது' என எதிர்ப்புகள் கிளம்பின.

இந்தநிலையில், 2019 செப்டம்பர் 13-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், '5 -ஆம் வகுப்பு 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்' என ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. இப்படி மாற்றி மாற்றி அறிவிப்பு வரவும் அது பெற்றோர்கள் மத்தியிலும், கல்வியாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கியது. குழந்தைகள் வாழ்க்கையில் விளையாடுவதை அமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 'மாணவர்களைத் திட்டமிட்டு கல்வி நிலையங்களிலிருந்து வெளியேற்றுவதற்கான வேலைதான் இது, தமிழக அரசு இதற்கு ஒத்திசைவது வெட்கக்கேடானது' என எதிர்க்கட்சிகள் கடுமையான அறிக்கைப் போர்களைத் தொடுத்தன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

தொடர்ந்து, 2020 பிப்ரவரி 4-ஆம் தேதி, அமைச்சர் செங்கோட்டையன், ''5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது'' என அறிவித்தார். தமிழகம் முழுவதும் அமைச்சரின் கருத்தை இரு கைகூப்பி வரவேற்றனர். 'மாணவர்களுக்குக் கிடைத்த விடுதலை' என குழந்தைகள் செயற்பாட்டாளர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இப்படி அமைச்சர் தான் மட்டுமல்ல,பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் சேர்த்தே குழப்பினார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு!

கொரோனா காரணமாக மார்ச் மாதம் 27-ஆம் தேதி நடைபெறவிருந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. தேதிகள் குறிப்பிடப்படாமல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ``கொரோனாவின் தாக்கம் குறைந்து ஊரடங்கு தளர்வு ஏற்பட்டவுடன் தேர்வு நடக்கும்'' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். தொடர்ந்து, ஜூன் மூன்றாவது வாரத்தில் தேர்வுகள் நடக்கும் என தேர்வுத்துறை வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகின. ஆனால், கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருந்த மே மாதத்தில், `ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்புத் தேர்வு நடக்கும்' என பள்ளிக் கல்வித்துறையால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 'தேர்வை ரத்து செய்யவேண்டும்' என கல்வியாளர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அதிரடியாக ஒருவாரம் தள்ளிவைத்து மீண்டும் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் அமைச்சர் செங்கோட்டையன். 'ஒரு வாரத்தில் தனது சொல்பேச்சைக் கேட்டு கொரோனா ஓடிவிடும்' என நினைத்தாரோ என்னவோ அப்படி ஓர் அறிவிப்பைச் செய்தார் அமைச்சர்.

ஆன்லைன் வகுப்புகள்

அரசின் முடிவை எதிர்த்து பலர் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, 'மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு தேர்வுகளை ஒத்திவைக்க முடியாதா...' என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. எதிர்க்கட்சிகளும் 'தேர்வுகளை ரத்து செய்யவேண்டும்' என தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்தன. தொடர்ந்து ஜூன் 9-ஆம் தேதி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு முடிவுகள், வருகைப் பதிவு ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் அறிவித்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பல பள்ளிகள், மாணவர்களுக்கு மதிப்பெண்களை அள்ளிக் கொட்டின. மாநிலம் முழுக்க பல மாணவர்களும் 500-க்கு 500 மதிப்பெண் எடுத்து அதிர்ச்சி கொடுத்தனர் தவிர தனித் தேர்வர்களுக்கு முடிவுகள் வராதது என ஏகப்பட்ட குளறுபடிகளும் அரங்கேறின.

ஆன்-லைன் வகுப்பு  குளறுபடிகள்!

ஆரம்பத்தில் சொன்னதுபோல ஒரே நாளில், குறிப்பிட்ட மணி நேர இடைவெளியில், தான் சொன்ன கருத்தை தானே மறுத்துப் பேசி, அமைச்சர் சாதனை புரிந்தது ஆன்-லைன் வகுப்புகள் குறித்த விஷயத்தில்தான். கடந்த மே மாதம் 27- ஆம் தேதி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் '' ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. அவ்வாறு இணையவழி மூலம் பாடங்கள் எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் அமைச்சரின் இந்தக் கருத்தை வரவேற்றுத் திரும்புவதற்குள்ளாகவே, “ஆன்லைன் வகுப்பு எடுப்பதை நாம் தடுக்க முடியாது. மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது'' என அன்று மாலையே ஓர் அதிர்ச்சி கொடுத்தார். 'தனியார் பள்ளிகளிடமிருந்து வந்த அழுத்தம்தான் அமைச்சர் இப்படி ஜகா வாங்கக் காரணம்' என வெளியான செய்திகள் அமைச்சரின் ஆளுமைத் திறனை கேள்விக்குறியாக்கியது.

செங்கோட்டையன்

அதனைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் என்ன , ''அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை வரும் 13- ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார்'' எனும் அறிவிப்பை கடந்த ஜூலை 8-ஆம் தேதி வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன். அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 'அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவை. அவர்கள் அனைவரின் வீடுகளிலும் அலைபேசி இருக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை இருந்தாலும் இணையத்துக்குப் பணம் போட முடியுமா, ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்தால் என்ன செய்வது, மிகமிகச் சிறிய வீட்டு அமைப்பைக் கொண்ட மாணவர்கள் அந்தச் சூழலில் எப்படிப் படிக்க முடியும்' என குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்கள் கொதித்தெழுந்தனர். தவிர, 'கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், மாணவர்கள் உளவியல் ரீதியாக மிகவும் சோர்வடைந்திருப்பார்கள். இந்த நேரத்தில் இது தேவையா...' எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு அடுத்த நாள் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ''தமிழகத்தில் ஆன்-லைன் வழிக்கல்வி இல்லை. டி.வி மூலமே பாடம் கற்பிக்கப்படும்'' என்று ஜகா வாங்கினார்.

Also Read: ஆன்லைன் (அ) தொலைக்காட்சி வழி வகுப்புகள்... அமைச்சருக்கு சில கோரிக்கைகள்!

பள்ளிகள் திறப்பு குளறுபடிகள்!

அதன் தொடர்ச்சியாக தற்போது பள்ளிகள் திறக்கப்படுவதிலும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்து வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன். ''டிசம்பர் வரை பள்ளிகள் திறக்கப்படவே மாட்டாது'' என அறிவித்திருந்தார் அமைச்சர் செங்கோட்டையன். அதை நம்பி பெற்றோர்களும் மாணவர்களும் நிம்மதியாக இருக்க, திடீரென, '10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்' என, கடந்த 25-ம் தேதி தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு வெளியானது. மேலும், ''மற்ற வகுப்பு மாணவர்களுக்கு எப்போது என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார்'' எனவும் தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.

'பாடங்களில் சந்தேகங்களை கேட்க விரும்பும் மாணவர்கள் மட்டுமே பெற்றோரின் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம்' எனவும் அறிவிக்கப்பட்டது . கூடவே ஆன்-லைன் வகுப்புகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் மாணவர்களும் பெற்றோர்களும் பலவாறாகக் குழம்பிப் போயுள்ளனர். கூடுதலாக, மாணவர்கள் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள, கட்டணமில்லாத தொலைபேசி சேவையை வேறு அறிமுகப்படுத்தியிருப்பது மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்பத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.

இந்தநிலையில், இந்தக் கட்டுரையை டைப் செய்துகொண்டிருந்த நேரத்தில், ''பள்ளி திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அவர்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக மட்டுமே அக்டோபர் 1-ம் தேதி பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகளுடன் கருத்து கேட்கப்பட்டு வருகிறது'' என அமைச்சர் செங்கோட்டையன், கோபி அருகே உள்ள நம்பியூரில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருக்கிறார். ஒருவேளை இன்று மாலை சென்னையிலோ, அல்லது சென்னை செல்வதற்கு முன்பாக கோவை விமான நிலையத்திலோ பத்திரிகையாளர்களை அமைச்சர் சந்திக்கும் பட்சத்தில் இதிலும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது என்பதே கடந்தகால வரலாறு.

தனியார் பள்ளிகள்

இது மட்டுமல்ல, 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்தபிறகு, மறுகூட்டல் தேதி அறிவிக்காமல் தாமதப்படுத்தியது; மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடங்கள் தவிர்த்து மூன்று முதன்மைப் பாடத் தொகுதிகள் மட்டுமே இருக்கும் என்கிற அரசாணையை வெளியிட்டு பின்பு எதிர்ப்பு வரவும் பழையபடி பழைய முறையில் இருந்தவாறே நான்கு முதன்மைப் பாடத்தொகுப்புகள் இந்தக் கல்வியாண்டிலும் தொடரும் என அறிவித்தது; எந்தவித முன்னறிவிப்புமின்றி தேர்வு முடிவுகளை வெளியிட்டது; கல்விக்கட்டணம் தொடர்பாக பெற்றோர்களைத் தொந்தரவு செய்யும் தனியார் பள்ளிகள் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது; கொரோனா காரணமாக பாடத்திட்டத்தைக் குறைக்க அமைக்கப்பட்ட குழுவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராமப்புற பள்ளிகள், அரசுப்பள்ளிகள், ஆசிரியர் சங்கங்கள் சார்பிலான பிரதிநிதிகள் யாருமே இல்லாமல் அரசு அதிகாரிகளையும் தனியார் பள்ளி முதலாளிகளையுமே இடம் பெறச் செய்தது... என பள்ளிக்கல்வித் துறையின் போதாமையான செயல்பாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குறிப்பாக அடிக்கடி, அறிவிப்புகளை மாற்றிக்கொண்டே இருப்பதுதான் மாணவர்களையும் பெற்றோர்களையும் கடும் குழப்பத்துக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கிவருகிறது.

என்ன காரணம்?

பொதுவாக கல்வித் துறையில் முடிவுகளை எடுக்கும் முறை என்பது, ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், ஆசிரியர் சங்கம், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் என கீழிருந்து மேலாக அனைவரின் கருத்துகளையும் பெற்று இறுதியாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அல்லது அமைச்சரால் இறுதி செய்யப்பட்டே முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால், அமைச்சர் செங்கோட்டையன் அதைத் தலைகீழாக மாற்றிவிட்டார். அ.தி.மு.க-வில் மற்ற அமைச்சர்கள் எப்படி மைக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தங்களின் வாய்க்கு வந்த கருத்துகளைத் தெரிவிக்கிறார்களோ, அதேபோல இவர் தன் இஷ்டத்துக்கு ஏதாவது ஒரு கருத்தைத் தெரிவித்து விடுகிறார். உடனடியாக அதற்கு மக்களிடமிருந்து எதிர்ப்போ அதிகாரிகள் தரப்பில் இருந்து மாற்றுக் கருத்தோ வரும்போது மாட்டிக்கொண்டு வேறொரு கருத்தைத் தெரிவிக்கிறார் என்பதே கல்வியாளர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அதுபோல, கல்வி குறித்து திட்டமிடும் குழுக்களில் தனக்கு வேண்டப்பட்டவர்களை உறுப்பினர்கள் ஆக்குகிறார். தனியார் பள்ளிகளுக்கே சேவகனாக செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்படுகின்றன.

ஆன்லைன் கல்வி

ஆசிரியர்கள் எனச் சொல்கிறார்கள்?

''இந்த அரசாங்கம் வலிமையான அரசாங்கமாக இல்லாமல், ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லாமல் இருப்பதே முதன்மையான காரணம். அடுத்ததாக, ஆளும் கட்சிக்குள்ளேயே மாறுபட்ட கருத்துகள், குழப்பங்கள் நிலவி வருகின்றன. கட்சிக்குள்ளேயே முடிவெடுப்பதில் பலரின் தலையீடுகள், தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக பலரின் அழுத்தங்கள் இருக்கின்றன. அதனால்தான் அவரால் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியவில்லை. மற்றபடி சீனியர் அமைச்சரான செங்கோட்டையனை நாம் முழுமையாக குறைத்து மதிப்பிடவும் முடியாது. தவிர இந்த அரசாங்கம் பள்ளிக் கல்வியில் சில நல்ல விஷயங்களையும் செய்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. பாடப்புத்தகம் எழுதும்போதெல்லாம் அரசிடமிருந்து எந்த அழுத்தமும் வரவில்லை. கடந்த அரசாங்கங்களில் எல்லாம் ஏகப்பட்ட தலையீடுகள் இருக்கும். அதேபோல, பள்ளிகளை சோதனையிடப் போகும்போதெல்லாம் மிகவும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்கிறார் அமைச்சர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடைகளும் நல்ல தரமானவையாக இருக்கின்றன. பள்ளிகளில் உயர் நவீன ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், இது எல்லாவற்றையும் அமைச்சரின் போதாமையான, முன்னுக்குப் பின் முரணான செயல்பாடுகள் காணாமல் ஆக்கிவிடுகின்றன. அதை நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்கின்றனர் ஆசிரியர்கள்.

மாணவர்களுக்கு என்ன பாதிப்பு?

ஆன்-லைன் வகுப்புகள் புரியாததால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது, அலைபேசி பற்றாக்குறையால் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது என விரும்பத்தகாத பல சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. அது மட்டுமல்ல, அடிக்கடி அரசாங்கம் முடிவுகளை மாற்றிக்கொள்வதுபோல, மாணவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொள்ள முடியாது. அப்படிச் செய்யும்போது, 'அட்ஜஸ்ட்மென்ட் டிஸார்டர்' (adjustment disorder) எனும் பாதிப்பு உண்டாகும். உடனடியாக, ஒரு புதிய விஷயத்துக்குத் தங்களைத் தகவமைத்துக்கொள்ள மிகுந்த சிரமம் ஏற்படும். அது அவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக இருந்தால் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், மிகப்பெரிய விளைவுகளை, பதற்றங்களை உண்டாக்கக்கூடிய அறிவிப்புகள் வரும்போது அது மனதளவில் பல்வேறு பாதிப்புகளையே மாணவர்களுக்கு உண்டாக்கும். இதுபோன்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை அணுகும்போது நன்றாகத் திட்டமிட்டு முடிவு செய்தபிறகு தான் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மாணவர்களை சோதனைப் (Experiment) பொருளாக நினைத்து தங்களின் முடிவுகளைத் திணிப்பதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்பதே உளவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

குழந்தைகள்

ஒரு சமுதாயத்தின் விலைமதிப்பில்லா சொத்துகளே மாணவச் செல்வங்கள்தான். அவர்களை மிகவும் கவனமாக அணுக வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்றோ, தனிமனித விருப்புகளுக்காகவோ, ஆளுமைப் போட்டிக்காகவோ அவர்களை பலிகடா ஆக்கக்கூடாது. இதுவரையிலும் சரி, இனிமேலாவது மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் குழந்தைகள் நலன் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் இந்த அரசும் அமைச்சரும் நடந்துகொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்!

செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...



source https://www.vikatan.com/social-affairs/policies/school-educational-minister-senkottaiyans-department-activities

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக