Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

`விஜயகாந்த் நாளை மாலை வீடு திரும்புகிறார்!’ - சுதீஷ் தகவலால் தொண்டர்கள் உற்சாகம்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரமும், தே.மு.தி.க தலைமையும் தெரிவித்திருந்தது. அவர் விரைவாக நலம்பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

எல்.கே.சுதீஷ்

இந்தச் சூழலில், கொரோனா தொற்றிலிருந்து விஜயகாந்த் குணமடைந்துவிட்டதாகவும், நாளை மாலை அவர் வீடு திரும்ப உள்ளதாகவும் தே.மு.தி.க துணைச் செயலாளரும் அவரது மைத்துனருமான எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், ‘‘கேப்டன் விஜயகாந்த் திங்கட்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு 29 உறுப்பினர்கள் இருந்தார்கள். அதைவிட அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் 2021 தேர்தலில் வெற்றி பெறுவார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலில், தே.மு.தி.க பெரிய சக்தியாக உருவெடுக்கும். கொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் நிறைகளுடன் குறைகளும் இருந்தது. கொரோனா சொல்லிவிட்டு வரவில்லை. உலகம் முழுவதும் அந்த நோய் குறித்து யாருக்குமே எதுவும் தெரியாது. அதுகுறித்து புரிந்துகொள்வதற்கே இரண்டு மாதங்களானது. அப்படியிருக்க, தமிழக அரசைப் பொருத்தவரை சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது.

விஜயகாந்த்

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் தமிழக அரசியலில் நிச்சயமாக மாற்றம் இருக்கும். அ.தி.மு.க மீதும் அவர்களின் ஆட்சி மீதும் மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படும். அதே சமயம், இன்று வரையில் அ.தி.மு.க கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம். வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பர் அல்லது ஜனவரியில் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி தொண்டர்களின் கருத்துகளை கேட்ட பின்னர், இறுதி முடிவைத் தலைவர் எடுப்பார்’’ என்றார்.

விஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார் என்கிற தகவலால், தே.மு.தி.க தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/politics/vijayakanth-will-return-home-tomorrow-evening-says-sutheesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக