புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அதன்படி கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் துவங்கியது. கடலூர் மாவட்டம், புதுப்பேட்டையை அடுத்திருக்கும் மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்துக்கு நிஷா, கவியரசன், தீனா என மூன்று குழந்தைகள்.
நிஷா அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பும், கவியரசன் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். சண்முகம் தனது வீட்டில் பசுமாடு ஒன்றை வளர்த்துவந்தார். வழக்கம்போல நேற்று அதனை தனது வீட்டுக்குப் பின்புறமுள்ள நிலப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு கட்டியிருந்தனர்.
நேற்று மாலை மழை பெய்யத் துவங்கியதும், “மாடு நனையுதும்மா. தம்பிக் கூட நான் போயி கூட்டிக்கிட்டு வந்துர்றேன்” என்று தனது அம்மா ருக்குவிடம் கூறியிருக்கிறார் நிஷா.
அதற்கு ”நீங்க மழையில நனையாதீங்க. நான் வேலையை முடிச்சிட்டு போய் அவுத்துவந்து கட்டிக்கறேன்” என்று கூறியிருக்கிறார் ருக்கு. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் மழை வலுக்க ஆரம்பிக்கவே, “அம்மா மாடு பாவம்மா.. இடி இடிக்குது. அது பயந்துடும்மா.. நாங்க போயி கூட்டிட்டு வந்துடறோம்” என்று கூறிவிட்டு தனது தம்பி கவியரசனை அழைத்துக் கொண்டு மாடு கட்டப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி குடையுடன் ஓடினார் நிஷா.
கட்டியிருந்த மாட்டை அவிழ்த்த நேரத்தில், நிஷாவையும், கவியரசனையும் பலமாக இடி தாக்கியது. அதில் இருவரும் உடல் கருகிய நிலையில் மயங்கி விழுந்தனர். இடி சத்தத்தைக் கேட்டு வெளியே வந்து பார்த்த தாய் ருக்கு குழந்தைகள் பேச்சு மூச்சற்று மயங்கிக் கிடப்பதைப் பார்த்து கதறியிருக்கிறார். அதையடுத்து குழந்தைகள் இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் அவர்களை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
Also Read: புதுக்கோட்டையில் இடி தாக்கி 4 பெண்கள் பலி; 17 பேர் படுகாயம்! - விவசாயப் பணி செய்தபோது நேர்ந்த சோகம்
ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதனால் அந்தக் கிராமத்து மக்கள் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/accident/in-cuddalore-district-brother-and-sister-died-by-the-thunderstorm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக