கொரோனா பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பல்வேறு தளர்வுகளுடன்கூடிய 8-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஊரடங்கை நீட்டிப்பது, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். அதற்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
வழக்கமாக முதல்வர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொள்வதுண்டு. ஆனால், இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. அதேநேரம், கிரீன்வேஸ் சாலையிலுள்ள வீட்டில், தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் ஆலோசனைக் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தார். இது, அ.தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
`முதல்வர் வேட்பாளர்’ பஞ்சாயத்துக்கு நேற்று நடந்த அ.தி.மு.க செயற்குழுவில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதியைக் குறிப்பிட்டு கூட்டம் முடித்துவைக்கப்பட்டது. `செப்டம்பர் 30-ம் தேதி ஆலோசனை நடத்திவிட்டு, அக்டோபர் 7-ல் அறிவிப்பு வெளியிடப்படும்’ என அ.தி.மு.க தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. நேற்றைய கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் பற்றிய காரசார விவாதத்தில் இரு தரப்பிலும் பல்வேறு கருத்துகள் எடுத்துவைக்கப்பட்டன.
செயற்குழுவில் பேசிய ஓ.பி.எஸ்., `ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் நான்தான்’ என்று குறிப்பிட்டதை ரசிக்காத எடப்பாடியும் அதற்கு பதில் கொடுத்தார். வழிகாட்டுதல்குழு விவகாரத்தில் அடுத்தகட்டம் குறித்து எதுவும் பேசப்படவில்லை. இந்தச் சூழலிலேயே முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் அ.தி.மு.க வட்டாரத்தில்.
முதல்வர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற அதேநேரத்தில், அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். ஓ.பி.எஸ் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு வெளியே வந்த முன்னாள் எம்.பி வைத்திலிங்கம், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் என இருவருக்குமே தனது ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார்.
மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிற்பகலில் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. `சொந்த ஊர் செல்ல இருப்பதால், அந்தக் கூட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ள மாட்டார்’ என்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/politics/ops-absent-in-cm-epss-meeting-with-district-collectors
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக