தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவரது தம்பிகளான சிலுவைதாஸ், துரைராஜ் ஆகியோருக்குச் சொந்தமான காந்திநகர் அருகிலுள்ள தங்களின் 5 ஏக்கர் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த தெற்கு மாவட்ட அ.தி.மு.க., வர்தகப்பிரிவு செயலாளரான திருமணவேலுக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த இடத்தை ஒட்டி தனிஸ்லாஸின் மகன்கள் பீட்டர்ராஜா, பங்காருராஜன், செல்வன் ஆகியோருக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி செல்வனை திருமணவேலின் ஆதரவாளர்கள் காரில் கடத்திச் சென்று தாக்கியதில், பலத்த காயமடைந்தார். திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்த செல்வனுக்கு ஜீவிதா என்ற மனைவியும், மரிய செல்வசைனி என்ற 3 மாதக் கைக்குழந்தையும் உள்ளனர்.
Also Read: சாத்தான்குளம்: `நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி அளித்துள்ளது!’ - உயர் நீதிமன்றம்
இதையடுத்து திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது நான்கு பிரிவுகளில் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தெற்கு மாவட்ட அ.தி.மு.க. வர்தகப்பிரிவு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதுடன், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் திருமணவேல் நீக்கப்பட்டார். தன் மகனின் இறப்பிற்கு திருமணவேல், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர்தான் காரணம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் செல்வனின் தாய் எலிசபெத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி பிரிவு போலீஸார் விசாரணையை துவக்கி நடத்தி வருகின்றனர். இந்த இடத்தை திருமணவேல், ஆக்கிரமித்து வேலி அமைத்து பயன்படுத்தி வந்தது தொடர்பாக இரு தரப்பினருக்கும் கடந்த இரண்டு ஆண்டாக பகை இருந்து வந்துள்ளது.
மகன் செல்வனின் இறப்பிற்குப் பிறகு மிகவும் சோகமாகக் காணப்பட்ட அவரது தாயார் எலிசபெத், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். செல்வனின் சகோதரி பவிலாவிடம் பேசினோம், ``எங்க அம்மா, அப்பாவுக்கு நாங்க 8 ஆண் பிள்ளைகள், நான் ஒரே ஒரு பொண்ணு. 2 ஆண் பிள்ளைகள் இறந்துட்டாங்க. அம்மாவுக்கு சரியா கண் தெரியாது. அப்பாவுக்கு சரியா காது கேட்காது.
6 பிள்ளைகள் உள்ளூரில் இருந்தாலும், தம்பி செல்வன்தான் அம்மா, அப்பாவைப் பார்த்துக்கிட்டான். எங்களுக்குச் சொந்தமான இடத்தை திருமணவேல் ஆக்கிரமிச்சதுனால, தண்ணீர் லாரி வச்சு பிழைப்பை நடத்தினான். அவன் உண்டு, அவன் தொழில் உண்டுன்னு இருந்த நிலையில, நிலப்பிரச்னை இடியா வந்து இறங்கி, இப்போ அவன் உயிரையே காவு வாங்கிடுச்சு. தம்பி இறந்ததுல இருந்தே அம்மா ரொம்ப தளர்ந்திட்டாங்க.
Also Read: செல்வன் கொலை வழக்கு: `உடைக்கப்பட்ட எம்.எல்.ஏ கார்; பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு’ - நடந்தது என்ன?
சரியா சாப்பாடு சாப்பிடலை. அவனை நினைச்சே எப்பவும் அழுதுக்கிட்டு இருந்தாங்க. நாங்க எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் கேட்கலை. அம்மாவின் தவிப்பை எங்களால தாங்கிக்க முடியலை. நாலு நாளா நடமாடக்கூட முடியாத நிலையில் ரொம்ப சோர்ந்துட்டாங்க. `எய்யா செல்வா.. செல்வா.. என் கண்ணு' எனச் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஏற்கெனவே தம்பியை இழந்துட்டு தவிச்சிட்டு இருக்கோம்.
இந்த நிலையில அம்மாவின் இறப்பு எங்களை வதைக்கிறது. பாசமா பார்த்துக்கிட்ட மகனையும், மனைவியையும் இழந்துட்டு எங்க அப்பா இப்போ தனி மரமாயிட்டார் இதுக்குமேல என்னத்த சொல்லன்னே தெரியல” என்றார். செல்வனின் தாயார் எலிசபெத் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/death/thoothukudi-selvans-mother-died-of-ill-health
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக