Ad

சனி, 13 மே, 2023

'அம்மாவின் வலிகள்... புரிந்துகொள்ள முடியாதவையா?' | #MothersDay!

இன்று அன்னையர் தினம்... டிவியில் ஒலிக்கும் அறிவிப்பைக் கேட்கும்வரை அல்லது நானாகச் சென்று அறிவிக்கும்வரை இப்படியொரு நாள் அன்று கொண்டாடப்படுவதே அம்மாவுக்குத் தெரியாது. நவீன அம்மாக்கள் வேண்டி விரும்பி அடைந்துள்ள சிறிதளவு சுதந்திரத்தின் நிழல்கூட படாதவர். மாற வாய்ப்பிருந்தும் `எனக்கு எதற்கு' என்ற வார்த்தையோடு நின்றுவிடுவதே அம்மாவின் இயல்பாகியிருந்தது. 

mother (Representational Image)

அம்மாவை பற்றி கூற வேண்டுமெனில், கருத்த முகம், பெருத்த உருவம், பைசா அளவில் நெற்றியின் மீது சிகப்பு கலர் ஸ்டிக்கர் பொட்டு, முகத்தில் ஆழமாகப் படிந்த சோகத்தின் சாயல், தொடர்ச்சியான வேலையால், நாற்பதுகளிலேயே 60 வயதையொத்த தேகம் என்றிருப்பவர். பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்தபின், விரும்பி அடிக்கும் கலர் டைக்கும், இறக்கி தைக்கப்படும் ஜாக்கெட்டுக்கும் விடை கொடுத்தவர். 

அப்பா... அம்மாவிற்கு நேரெதிர், நிலவை போன்ற வெள்ளை, முகத்தில் ஒரு தேஜஸ். பள்ளிக்கூடம் செல்லாதவர், தனக்கென ஒரு கோட்பாட்டோடு, சுற்றிலும் நண்பர்கள் என மகிழ்ச்சியாக இருப்பார். அவரின் அதிகபட்ச வருத்தம் அனைத்தும், பணத்தை சுற்றியே இருக்கும். அப்பா, அக்காக்களுக்கு சிறந்த தம்பி, பிள்ளைகளுக்கு சிறந்த தகப்பன். ஆனால் ஏனோ அம்மா மட்டும் அந்த ப்ரிய ஸ்தலத்திற்குள் அனுமதிக்கப்படவில்லையோ என தோன்றும்.

`இரண்டு அண்ணன்களின் பிறப்புக்குப் பின், கோயில் குளம் ஏறி தவமிருந்து உன்னைப் பெற்றேன். பெண் பிள்ளை என்றதும் உன் அப்பா மூன்று நாள்வரை மருத்துவமனை பக்கம் வரவில்லை’ என்றாள் அம்மா. ஆனால், நான் வளர்கையில் அப்பா முற்றிலும் மாறியிருந்தார். அண்ணன்களும் அப்பாவும் அந்நியர்களாயிருந்தனர்.

அம்மா 10 ரூபாய் கொடுக்கும் இடத்தில், அப்பா 100 ரூபாய் கொடுத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிடுவார். பள்ளிக்காலம் வரை படிப்பை காரணம்காட்டி வீட்டுவேலைகள் செய்யாமல் காலம் கடத்தி வந்தேன். அப்பா வீட்டில் இருந்தால் எந்த வேலைகளையும் செய்ய விடமாட்டார். ஒற்றை வரியில் குறிப்பிட வேண்டுமென்றால், `டாட்’ஸ் லிட்டில் ப்ரின்சஸ்’.

father

பால்ய காலத்திலும் அப்பாவும் அம்மாவும் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஆனால் பெரிதாகப் புரியாது. நாங்கள் வளர்ந்த பின்னும் சண்டையிடுவார்கள். ஆனால் இப்போது வார்த்தைகளின் ஆழமும், வலியும் தெரிகிறது. ஒரு காபி கொடுக்க தாமதமானாலும் சட்டென அந்த வார்த்தை வந்துவிடும். அப்படி அற்ப காரணத்திற்காக அம்மாவைத் திட்டிய சமயத்தில் சொல்லிவிட்டேன். `இப்படி சொல்லாதீர்கள்’ என… 

நாகரிகம் கருதி பிள்ளைகளின் முன் சில நேரங்களில் நாவடக்கம் காப்பார். அதெல்லாம் கொஞ்ச நாளைக்குதான். காலப்போக்கில் பயன்படாத சுத்தியல் போல என் பேச்சு எடுபடாமல் போனது. `பற்றி எரியும் தீ, பக்கத்து வீட்டை எரிக்க நேரம் எடுப்பதில்லை’ என்பதைப் போல, கூடவே என்னையும் பன்மையில் திட்ட ஆரம்பித்திருந்தார். ஊன் அறுத்த சொல், ஒருநாள் என்னையும் எரித்தது. 

அம்மாவை நினைவில் நிலை நிறுத்தினேன். இத்தனை நாள் இந்த வார்த்தையை எப்படித் தாங்கிக் கொண்டாய், சடலத்தின் மீது கொட்டப்படும் மணல் போல, மூச்சற்றுப் பழகிப் போயிருந்தாயா என்றெல்லாம் யோசித்தேன்.

அதுதான் அப்பாவை விட்டு நான் சற்று விலகிய தருணம். இதுவரை வீட்டில் நாங்கள் அனுபவித்த சொகுசு வாழ்வின் பின்னிருந்த அம்மாவின் இடையறா உழைப்பும் வலியும் தெரிந்தது. 

mother

அம்மாவைப்போல நமக்கும் அந்த வலி ஏற்பட்டால்தான், புரிய வேண்டும் என்றில்லை. ஏனென்றால் வலிகள் எப்போதும் ஒருவருக்கு இருந்ததைப்போல மற்றொருவருக்கு இருப்பதில்லை. அதோடு அம்மாவை அன்றாடம் கொண்டாட வேண்டும் என்றில்லை, கொண்டாடினாலும் தவறில்லை. ஆனால், இதையெல்லாம் அவள் எதிர்பார்க்கமாட்டாள். பெரிதாக எதிர்பாரா மனதிற்கு மகிழ்ச்சியான சூழலை உருவாக்க வேண்டியது நாம் தான்...

சின்னஞ்சிறு மகிழ்ச்சிகளையும் அவளோடு பகிர்ந்து கொள்ளுங்கள், நாளும் உரையாடுங்கள்... நான் அருகில் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதை விட வேறெதில் இருந்துவிடப்போகிறது இந்த சந்தோஷங்கள்!  



source https://www.vikatan.com/gender/mom-s-pain-mothers-day-special-article

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக