`ஓர் அறிவுஜீவி எளிய செய்தியை, கடினமான மொழியில் சொல்கிறார். ஒரு கலைஞர் கடினமான விஷயத்தைக்கூட, எளிய முறையில் சொல்லிவிடுகிறார்.’ - அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் சார்லஸ் புகோவ்ஸ்கி (Charles Bukowski).
`ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...’ என்ற அற்புதமான ஒரு திரையிசைப் பாடலை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். கவிஞர் கண்ணதாசன், தன் மந்திரச் சொற்களால் இழைத்து இழைத்து எழுதிய பாடல். அதில் `எந்த வேதனையும் மாறும் மேகத்தைப்போல...’ என்று ஒரு வரி வரும். அது மறுக்க முடியாத உண்மை; கண்ணதாசனின் வரிகளிலேயே சொல்வதானால் அதுதான் இயற்கையின் நியதி. அனைத்துத் துன்பங்களையும் மறக்கடிக்கச் செய்யும் ஆற்றல் காலத்துக்கும் இயற்கைக்கும் உண்டு. ஆனால், பாதிக்கப்பட்டவர், இடைப்பட்ட காலத்தில் அனுபவிக்கும் வேதனையை எப்படி ஆற்றிக்கொள்வார்?
இன்றைக்கு, அழுத்தங்கள் நிறைந்ததாக இருக்கிறது மனித வாழ்க்கை. பணியிடம், வீடு இரண்டிலுமே பிரச்னைகள், சவால்கள். அத்தனையையும் எதிர்கொண்டுதான் வாழ்க்கையை ஒரு மனிதன் நகர்த்தவேண்டியதாக இருக்கிறது. இப்படி கற்பனை செய்து பார்ப்போமே... ஒரு கேமராவையும் மைக்கையும் தூக்கிக்கொண்டு பொதுமக்கள் கூடும் முக்கிய இடத்தில் நின்றுகொள்வோம். வருகிற போகிறவரை நிறுத்தி ஒரு கேள்வி கேட்போம். ``சார்... உங்க ட்ரெஸ்ஸை போக்கிக்க நீங்க என்ன பண்ணுவீங்க?’’
நிச்சயமாகப் பெரும்பாலானவர்கள் சொல்கிற பதில் பின்வருமாறுதான் இருக்கும்...
``இளையராஜா பாட்டு கேப்பேன்.’’
``வடிவேலு ஜோக் பார்ப்பேன்.’’
``சார்லி சாப்ளின் படம் பார்ப்பேன்.’’
`` ஜாக்கி சானோட சண்டைக் காட்சியைத் திரும்பத் திரும்பப் பார்த்தா போதும்... கவலையெல்லாம் பறந்து ஓடிடும்.’’
இன்னும் சிலர் ``டி.வி-யில குத்துப் பாட்டுப் பார்ப்பேன்’’ என்றுகூடச் சொல்லக்கூடும். அதில் தவறில்லை. முக்கியமாக கவனிக்கவேண்டியது, இவை அத்தனைக்கும் பின்னால் இருப்பவர்கள் கலைஞர்கள். அவர்களின் பர்ஃபார்மன்ஸ். அதுதான் நம் துயரைத் தற்காலிகமாகவேணும் மறக்கடிக்கக் காரணமாக இருக்கிறது. உணவு, உடை, உறைவிடத்துக்கு அடுத்தபடியாக மனிதன் கண்டுபிடித்த ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு கலை.
கலை மகத்தானது. அதை வெளிப்படுத்தும் கலைஞர்கள் கலையைவிட மகத்தானவர்கள். எத்தனையோ கலைஞர்கள், தங்களுடைய சொந்தத் துயர், சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களை மகிழ்வித்திருக்கிறார்கள் என்பது கலை வரலாறு நமக்கெல்லாம் வாத்தியாராக நின்றுகொண்டு எடுத்திருக்கும் பாடம். அப்படிப்பட்ட கலைஞர்களில் ஒருவர், ஜிம்மி டியூரன்டே (Jimmy Durante).
அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்மி டியூரன்டே நடிகர், பாடகர், பியோனோ வாசிப்பவர்... முக்கியமாக காமெடியன். அவர் மேடையில் ஏறி நின்று தன் உடல்மொழியாலும், பேச்சாலும் எதைச் செய்தாலும் சொக்கிப்போய்விடுவார்கள் ரசிகர்கள். அரங்கமே நிகழ்ச்சி முடியும்வரை அவருடைய நகைச்சுவைக்குக் கட்டுண்டு கிடக்கும். அவருக்கு ஒரு மேடையில் நிகழ்ச்சி நடத்த அழைப்பு ஒன்று வந்தது. அழைத்தவரும், சாதாரண ஆளில்லை. எட் சல்லிவன் (Ed Sullivan)... அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க தொலைக்காட்சிப் பிரபலம். அது இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம். ``எல்லிஸ் ஐலேண்டுக்கு போர் முடிஞ்சு சில வீரர்கள் வந்திருக்காங்க. அந்த வீரர்களை கௌரவப்படுத்தணும், சந்தோஷப்படுத்தணும்னு ஒரு நிகழ்ச்சி நடத்துறோம். நீங்க அவசியம் வரணும்...’’ என்று கோரிக்கை வைத்தார் எட் சல்லிவன்.
``நான் வர்றேன். ஆனா, ஒரு விஷயம்... ரொம்ப நேரம் என்னால பர்ஃபார்ம் பண்ண முடியாது. நியூயார்க்ல இருக்குற ஒரு ரேடியோ ஸ்டேஷன்ல அன்னிக்கி எனக்கு ஒரு புரோக்ராம் இருக்கு. அன்னிக்கே ஒரு சின்ன கப்பல்ல (Ferry) டிக்கெட் புக் பண்ணிடுறேன். சீக்கிரம் கிளம்பிடுவேன். சரியா?’’
``எப்படியோ நீங்க வந்தா சரி. உங்க முகத்தைப் பார்த்தாலே ஆடியன்ஸ் பரவசமாகிடுவாங்க’’ என்றார் எட் சல்லிவன்.
எல்லிஸ் ஐலேண்ட். ஜிம்மி மேடையேறினார். அன்றைக்கு நடந்தது அதிசயம். போர்முனைக்குப் போய் திரும்பி வந்த வீரர்கள் அரங்கம் முழுவதும் உட்கார்ந்திருந்தார்கள். ஆங்கிலத்தில் `Monologue' என்று சொல்வார்கள். ஒரு தனிநபர் பாடல் பாடி மக்களை மகிழ்விப்பது... அதைச் செய்தார். அவ்வளவுதான்... அரங்கமே ஆரவாரத்தால் குலுங்கியது. அந்தக் கரவொலி அவரை மயக்கியது. இன்னும்... இன்னும்... எனத் தனக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் அந்த மேடையில் நிகழ்த்திக் காட்டினார் ஜிம்மி. அவர் கொடுத்திருந்த 15 நிமிடங்களையும் தாண்டி நேரம் விரைந்துகொண்டே இருந்தது. 20 நிமிடங்கள்... 25 நிமிடங்கள்... 30 நிமிடங்கள்... 35 நிமிடங்கள்... ஆனால், ஒரு நொடிகூட அவருக்கு ஆடியன்ஸிடமிருந்து கிடைத்த ரெஸ்பான்ஸ் குறையவே இல்லை.
ஜிம்மி தன் நிகழ்ச்சியின் நிறைவாக, தலை தாழ்த்தி அரங்கை வணங்கினார். பார்வையாளர்களிடமிருந்து விடைபெற்றார். அரங்கின் பின்னால் அவரை அழைத்துப்போக வந்திருந்தவர் கேட்டார்... ``பத்து நிமிஷம்தான் பேசுவேன்னு சொன்னீங்க... என்ன ஆச்சு... இவ்வளவு நேரம் பர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டு வர்றீங்களே?’’
``நானும் சீக்கிரம் கிளம்பணும்னுதான் நினைச்சேன். ஆனா முடியலை. முதல் வரிசையில யாரு உட்கார்ந்திருக்காங்கன்னு கொஞ்சம் பார்க்கிறீங்களா?’’
அந்த மனிதர் மேடையின் பின் திரையை விலக்கி, பார்வையாளர்கள் வரிசையில் பார்வையை ஓட்டினார். முன் வரிசையில் இரண்டு ராணுவ வீரர்கள் அமர்ந்திருந்தார்கள். இருவருமே இரண்டாம் உலகப் போரில் ஒரு கையை இழந்தவர்கள். ஒருவருக்கு வலது கை போயிருந்தது; இன்னொருவருக்கு இடது கை. ஆனாலும், இருவரும் நிகழ்ச்சியின்போது ஒருவர் கையோடு மற்றொருவரின் கையைப் பயன்படுத்தி, வலிக்க வலிக்கக் கைதட்டியிருந்தார்கள்.
``அதுவும் சும்மா இல்லை... ரொம்ப உற்சாகத்தோட, பரவசத்தோட அவங்க கைதட்டிக்கிட்டே இருந்தாங்க. நான் எப்பிடி நிகழ்ச்சியை சீக்கிரமா முடிக்க முடியும்?’’ ஜிம்மி சொல்லச் சொல்ல, அந்த நபருக்குப் பேச வார்த்தை வரவில்லை. கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.
source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/motivation-from-the-life-of-jimmy-durante
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக