Ad

திங்கள், 28 செப்டம்பர், 2020

7 ஆண்டுகளாகக் கூட்டப்படாத எஸ்.சி, எஸ்.டி கூட்டம் - நீதிமன்றத்தில் வெளிப்பட்ட அரசின் நாடகம்!

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான கண்காணிப்புக் குழு கூட்டத்தை நடத்துவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம், நீதிமன்ற விசாரணையில் வெளிவந்துள்ளது. ` இனிவரும் காலங்களில் கூட்டத்தை நடத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும்' எனவும் எச்சரித்துள்ளனர் நீதியரசர்கள்.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்தியாவில் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் செயல்களைக் களையும் வகையில் 1955-ம் ஆண்டு பி.சி.ஆர் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதால், 1989-ம் ஆண்டு வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் 16 (2) என்ற விதியின்கீழ் ஒவ்வோர் ஆண்டும் மாநில அரசானது, தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி, ஆதிதிராவிடர் நலத்துறை செயலர், நிதித்துறை செயலர், எஸ்.சி, எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் அடங்கிய குழுவானது, ஆண்டுக்கு இருமுறை கூடி விவாதிக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்கொடுமைப் புகார்களில் மேற்கொள்ளப்பட நடவடிக்கைகளை ஆராய வேண்டும்.

இதன்பிறகு சட்டப்பிரிவு 18-ன்படி இதுகுறித்த விவரத்தை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல், விதி 17-ன்படி மாவட்ட ஆட்சியர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டத்தைக் கூட்டி, தாழ்த்தப்பட்ட- பழங்குடியின மக்களுக்கு எதிராக என்னென்ன வன்கொடுமைகள் நடத்தப்பட்டன என்பது பற்றியும் அதனைத் தடுக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் விவாதித்து அரசுக்கு அறிக்கையை அனுப்ப வேண்டும். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் முதல்வர் தலைமையில் இந்தக் கூட்டமே நடைபெறவில்லை என்பதுதான் கொடுமை.

Also Read: `அன்புமணி ஏன் எடுபடவில்லை... சீமானின் இலக்கு'-`முதல்வர் வேட்பாளர்' சொல்லும் லாஜிக் #TNElection2021

எஸ்.சி, எஸ்.டி மக்கள் மீதான தமிழக அரசின் அலட்சியம் குறித்து கோவை வழக்கறிஞர் பன்னீர்செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் குமாரதேவன் ஆஜரானார். அரசுத் தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன் ஆஜரானார். அப்போது, `கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பிறகு மாநில உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடத்தப்படவில்லை' எனக் குமாரதேவன் சுட்டிக்காட்டினார். இதனை ஏற்றுக் கொண்ட அரவிந்த் பாண்டியன், ` நிர்வாகக் காரணங்களுக்காக 2013-ம் ஆண்டுக்குப் பிறகு கூட்டத்தை நடத்தவில்லை. எதிர்வரும் காலங்களில் தாழ்த்தப்பட்டோர் (ம) பழங்குடியினர் சட்ட விதி 16 (2)ன் படி ஆண்டுக்கு இருமுறை மேற்படி கூட்டத்தினை அரசு நடத்த உள்ளது' என்றார்.

முதல்வர் தலைமையில் அவசரக் கூட்டம்

மேலும், `கடந்த 08.09.2020 அன்று தமிழக முதல்வர் தலைமையில் மாநில உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது. அதில் பத்து அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. இதுதொடர்பான, அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன்' என்றார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், `தாழ்த்தப்பட்டோர் (ம) பழங்குடியினர் சட்ட விதி 16 (2)ன் படி கண்டிப்பாக எதிர் வரும் காலங்களில் ஒவ்வொரு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாநில உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும்' எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து வழக்கறிஞர் குமாரதேவனிடம் பேசினோம். `` நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக கொரோனா காலத்தில் அதிகப்படியான வன்கொடுமைகள் அரங்கேறியுள்ளன. இதுதொடர்பாக புகார்கள் கொடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கடந்த 25.6.2013-ம் ஆண்டு மட்டும்தான் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு பல ஆண்டுகளாக இந்தக் கூட்டம் கூட்டப்படவே இல்லை.

வழக்கறிஞர் குமாரதேவன்

தற்போதுள்ள சூழலில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான உயர்நிலை விழிப்பு கண்காணிப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் பன்னீர்செல்வம் வழக்கைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி நோட்டீஸ் போடப்பட்டதும். 8.9.2020 அன்று முதல்வர் அவசரம் அவசரமாகக் கூட்டத்தைக் கூட்டி விவாதத்தை நடத்தினார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, `கூட்டம் நடந்துவிட்டது' என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, `நிர்வாகரீதியான காரணங்களைச் சொல்கின்றனர். இதற்கு அரசு தரப்பில், `நாங்கள் தொடர்ந்து நடத்துவோம்' எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகே நீதியரசர்கள் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தனர். இனியாவது ஆண்டுக்கு இருமுறை கூட்டம் கூட்டப்படும் என நம்புகிறோம்" என்றார் உறுதியாக.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/judges-warns-tn-govt-regards-sc-st-monitoring-committee-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக